விதி வலியது. "யார் கோபுரத்து உச்சிக்கு செல்வார்கள், யார் கோபுரத்தில் இருந்து கீழே விழுவார்கள் என்பதை யாராலும் சுலபாமாக கணித்துவிட முடியாது" என்பதைத் தான் சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது. இதற்கு ஒரு நல்ல உதாரணம் கடாஃபி.
42 ஆண்டுகளுக்கு முன்பு, யாருமே எதிர்பாராத விதமாக லிபியாவை கைப்பற்றினார். 42 ஆண்டுகளுக்கு பின்பு, அதே லிபிய வீதியில் கொல்லப்பட்டார். 1942ஆம் ஆண்டு லிபியாவில் சிர்டேயில், ஒரு
சாதாரண நாடோடி குடும்பத்தில் பிறந்தவர் தான் கடாஃபி. பள்ளியில் படிக்கும் போதே வரலாறு, அரசியல் நடப்பு போன்ற விஷ்யங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அந்த சமயத்தில் லிபியாவை ஆண்ட அரசர் இத்ரிஸ், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளின் கைபாவையாக செயல்பட்டு வந்தார். இதனால், லிபியாவின் வளர வேண்டிய பொருளாதாரம், வளராமல் இருந்து வந்தது. இது போன்ற நிகழ்வுகளால், இத்ரிஸ் மீதும், லிபியா மீது ஆதிக்கம் செலுத்தி வந்த மேற்கத்திய நாடுகள் மீதும் கடாஃபி வெறுப்புணர்வை வளர்த்து வந்தார்.
20 வயதில் கடாஃபி தன் பள்ளி படிப்பை முடித்தார். வாழ்வின் அடுத்த கட்டமாக, ராணுவ அகாடமியில் கடாஃபி சேர்ந்தார். ராணுவப் பயிற்சியை முடித்த கடாஃபி, லெப்டினென்டாக லிபிய ராணுவத்தில் சேர்ந்தார். ஆனாலும், லிபியா மீதான மேற்கத்திய நாடுகளின் ஆக்கிரமிப்பு, கடாஃபியை மேலும் மேலும் வெறுப்படைய செய்தது. தன் நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டுவோரை பழிதீர்க்க அவர் மனம் துடித்தது. இதன் வெளிப்பாடாக தோன்றியது தான் ராணுவப் புரட்சி கவுண்சில். ராணுவப் பயிற்சியில் தன்னுடன் படித்த சக நண்பர்களை சேர்த்து, லிபிய விடுதலைக்காக ரகசியமாக தொடங்கப்பட்டது தான் ராணுவப் புரட்சி கவுண்சில். எப்படி லிபியாவை தன் வசப்படுத்தலாம் என்று காத்திருந்த கடாஃபிக்கு, பழம் நழுவி பாலில் விழுந்தது.
லிபிய மன்னர் இத்ரிஸ், உடல் நலக் குறைவுக்கு சிகிச்சை பெற துருக்கிக்கு பயணித்தார். இந்த சூழ்நிலையை தனதாக்கிக் கொண்ட கடாஃபி, தன் சிறு ராணுவப் படையின் உதவியோடு, மன்னர் இத்ரிஸ்யின் மருமகனையும், பிற குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்து, இரத்தமில்லா ராணுவப் புரட்சி மூலம் லிபியாவை கைப்பற்றினார். ஒரு 27 வயது இளைஞன் லிபியாவை ரத்தமில்லா ராணுவப் புரட்சி மூலம் கைபெற்றுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை தான்.
லிபியா மீதான மேற்கத்திய நாடுகளின் ஆக்கிரமிப்பை அகற்றும் நோக்கத்தோடு கடாஃபி செயல்படத் தொடங்கினார். அவரின் செயல்கள் ஒவ்வோன்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பேரடியாக விழுந்தது. குறிப்பாக, லிபியாவில் இருக்கும் ஐரோப்பிய ராணுவ தளங்களை மூட உத்தரவிட்டார். இது மட்டுமல்ல, லிபியா என்பது வளம் மிக்க எண்ணெய் படிவம் உள்ள நாடு. அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள், எண்ணெய் படிவங்களை எடுத்துவிட்டு, 50% வருவாய் மட்டுமே முன்பு லிபியாவுக்கு அளித்தது. இதனால், இதை தடுக்கும் விதமாக, எண்ணெய் படிவங்கள் மூலம் கிடைக்கும் லாபத்தில் 79%
வருவாய் லிபியாவுக்கு அளிக்க வேண்டும் என்று கடாஃபி கட்டளையிட்டார். இதன் காரணமாக, லிபியாவிற்கு பணம் கூரையை பிரித்து கொட்டியது.
கடாஃபி பொறுப்பேற்று இரண்டு மாதங்களுக்குள், அவருக்கு எதிராக சதி வேலைகள் ஆரம்பமாகின. இந்த சதி வேலையின் பின்னால், முன்னாள் அரசர் இத்ரிஸ் இருந்தார். சதி வேலைகள் காரணமாக, அரசின் முக்கியஸ்தர்கள் கடாஃபிக்கு எதிராக செயல்பட தொடங்கினர். இதை தொடக்கத்திலேயே அறிந்து கொண்ட கடாஃபி, பிரச்சனையை முளையிலேயே கிள்ளி எறியும் விதமாக, தனக்கு எதிராக செயல்பட்ட அனைவரையும் தூக்கி எறிந்தார்.
தனக்கு நம்பகமாக உள்ள தன் குடும்பத்தாரை முக்கிய பொறுப்புகளில் நியமித்தார். இது தான் அவர் செய்த முதல் தவறு. இந்த தவறினால் பின்னாளில், தனது 8 வாரிசுகளையும் முக்கிய பதவிகளில் அமர்த்தி அழகு பார்த்தார். ஆனால், மக்கள் அதை ரசிக்கவில்லை. இஸ்லாமிய சட்டங்களையும், சித்தாந்தங்களையும் வெறுத்த கடாஃபி, லிபியாவை சோசியலிச நாடாக மாற்றுவதையே தன் லட்சியமாக கொண்டிருந்தார். இதனாலேயே, தன் மெய் காப்பாளர்களாக பெண்களை நியமித்தார். லிபியாவில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் சம உரிமை வழங்கினார். இருந்தாலும், இஸ்லாம் விஷ்யத்தில் கடாஃபி இரட்டை தன்மையுடனே இருந்தார்.
இதற்கு நல்ல ஒரு ஆதாரம், அவர் லிபிய புரட்சி பற்றி தெரிவித்த கருத்து என்று சொல்லலாம். அவர் கூறியது: "அமெரிக்க தலைமையில் தன் மீது கிறுத்தவ சிலுவை போர் நடக்கிறது. இதை எதிர்க்க அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றினைய வேண்டும். இஸ்லாம் அனைத்து இடத்திலும் வாழ வேண்டும்." என்றார். எண்ணெய் மூலம் கிடைத்த பணத்தில் பெரும்
பகுதியை, ஆயுதம் வாங்கி குவிக்க செலவிட்டார். அத்துடன் அவர் நின்றுவிடவில்லை. அண்டை நாட்டு அரசுகளுக்கு எதிராக நடக்கும் புரட்சிகளுக்கு ஆதரவளித்து, புரட்சி படையினருக்கு ஆயுதம் வழங்கினார். இது கடாஃபி செய்த அடுத்த தவறு.
ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த போது, கடாஃபி தான் சேமித்த ஆயுதங்களை நிர்பந்தம் காரணமாக தனே அழித்தும் கொண்டார் கடாஃபி தலைமையில், லிபியாவின் கல்வி அறிவு சதவீதம் 10%யில் இருந்து 90%ஆக உயர்ந்தது. மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அவர் வகுத்து கொடுத்தார் என்பதையும் நாம் மறுத்துவிட முடியாது. இருந்த போதிலும், அவரின் குடும்பத்தார் பல துறைகளை கையில் எடுத்து
விளையாட ஆரம்பித்தனர். அதை எதிர்த்து கேட்டவர்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர். அரசியல் கைதிகள் எந்த வித வழக்கும் பதிவு செய்யப்படாமல், பல வருடங்களாக சிறையில் வாழ்ந்தனர்.
நீதி துறை என்பது கடாஃபியின் விளையாட்டு பொம்மையாக செயலாற்றியது. மக்களின் சுதந்திரம், கருத்துரிமை, ஜனநாயகம் கேள்விக்குறியாகவே லிபியாவில் இருந்தது. இது போன்ற விஷ்யங்கள் தான் அனைத்து லிபிய மக்களையும் ஓரணியில் கடாஃபிக்கு எதிராக திருப்பியது.இதற்கெல்லாம் ஒரு படி மேலேபோய், பிப்ரவரி 2011யில் அமைதியான
முறையில், ஜனநாயகத்துக்காக போராடிய லிபிய மக்களை, கடாஃபியின் ராணுவம் தன் நாட்டு மக்கள் என்று கூட கருதாமல் சுட்டு தள்ளியது. இது தான் கடாஃபி செய்த மிகப் பெரிய தவறு.
கடாஃபிக்கு எதிராக மக்கள் ஆயுத போராட்டத்தை கையில் எடுக்க இது தான் முக்கியமான காரணம் என்று கூறலாம். நான் முன்பே கூறியது போல, லிபியா என்பது எண்ணெய் வளம் மிக்க நாடு. அங்கு கிடைக்கும்
எண்ணெய் மிகவும் சுத்தமானது. சுத்தீகரிக்கும் செலவும் குறைவு. இதனால், அமெரிக்கா போன்ற நாடுகள் லிபியா மீது ஒரு கண் வைத்திருந்தது. கிடைத்த வாய்ப்பை நழுவவிட விரும்பாத மேற்கத்திய நாடுகள், கடாஃபிக்கு எதிரான புரட்சி படையினருக்கு ஆயுதங்களை வழங்கி, அவர்களை ஊக்குவித்து பலப்படுத்தினர். பெரும்பான்மையான மக்கள் கடாஃபிக்கு எதிராக இருக்க, மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவிவும் புரட்சி படைக்கு கிடைத்தது, கடாஃபியை மேலும் பிரச்சனைக்குள்ளாக்கியது.
மக்களின் கருத்து சுதந்திரத்தை அறுத்து, ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைத்து, 42 ஆண்டு காலம் ஆட்சி நடத்திய கடாஃபி இதற்கு அஞ்சுவாரா? இல்லை, அவரின் சர்வாதிகார குணம் தான் அதற்கு இடம் அளிக்குமா? இந்த புரட்சிக்கெல்லாம் அவர் அளித்த ஒரே பதில்: "சுடுங்கள். யார் அரசை எதிர்த்தாலும் சுடுங்கள். நான் எதற்காகவும் பதவி விலக மாட்டேன்." என்று சர்வாதிகாரத்துடன் கூறினார். ஆனால், அமெரிக்க ஆதரவு புரட்சி படையின் வெற்றி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. பெரும்பாலான இடங்களில் கடாஃபியின் ராணுவம் தோல்வியடைந்தது. இருந்த போதிலும், கடாஃபி சரணடையவில்லை.
எப்படியிருந்தாலும், செய்த வினை திருப்பி அடிக்குமே! கழிவு நீர் குழாயில் பதுங்கியிருந்த கடாஃபி, புரட்சி படையிடம் சிக்கி, நடுத் தெருவில் அடிக்கப்பட்டு, ரத்தம் சோட்ட சோட்ட புரட்சி படையால் கொல்லப்பட்டார். ஒரு நாட்டை 42 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரு சர்வாதிகாரியின் இறுதி வாழ்கை கழிவு நீர் குழாயில் முடிந்தது. மாவீரனாக கருதப்பட்ட கடாஃபி, கடைசியாக சென்ன வார்த்தை "சுடாதீங்க." உயிருக்கு அஞ்சாமல் 42 ஆண்டுகளுக்கு முன் லிபிய அதிபரான கடாஃபி, 42 ஆண்டுகளுக்கு பின் உயிருக்காக கெஞ்சி இறந்தார். ஒரு ஜனநாயக மக்களாட்சி அரசு எந்த அளவுக்கு மக்களுக்கு நல்லது செய்கிறதோ, அதைக் காட்டிலும் இரண்டு மடங்கு நன்மையை ஒரு சர்வாதிகார ஆட்சி மக்களுக்கு செய்தாலும், மக்களின் அடிப்படை உரிமை பறிக்கப்படும் போது, எல்லா சர்வாதிகாரிகளுக்கும் கடாஃபி நிலை தான்.
அதுமட்டுமல்ல, குடும்ப ஆட்சி நடத்தும் அனைவரும் கடாஃபியின் மரணம், சொல்ல வேண்டிய செய்தியை சொல்லாமல் சொல்கிறது. அனாவசியமாக, மக்களின் நியாயமான கோரிக்கையை, போராட்டத்தை, சுதந்திரத்தை அடக்க நினைக்கும் அனைத்து அரசுகளும், கடாஃபி மரணத்தை பாடமாக கற்க வேண்டும். இந்த பாடம், கம்யூனிச சர்வாதிகார ஆட்சி நடக்கும் சீனாவுக்கும் பொருந்தும், ஜனநாயக அரசு என்ற பெயரில், குடும்ப ஆட்சி நடத்த ஆசைப்படும் பாரத தேசத்தின் மத்திய, மாநில அரசுகளுக்கும் பொருந்தும் என்பதை யாராலும் மறுத்துவிட முடியது. ஒரு சர்வாதிகாரியின் மரணம், ஒவ்வரு ஆட்சியாளருக்கும் ஒரு எச்சரிக்கை தான்.
நன்றி பாரத குரல் சுஜின்
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.