கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது குறைகூறுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மக்களவையில் பேசினார்.
கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு காங்கிரஸ்-மஜதவை சேர்ந்த எம்எல்ஏக்கள் 15 பேர் ராஜினாமா செய்துள்ளதால் ஆட்சிகவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பாஜகதான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதே பிரச்சினையை நேற்று மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பினர். அப்போது அதற்கு பதிலளித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசும்போது, “கர்நாடகாவில் நடைபெற்றுவரும் அரசியல் குழப்பத்துக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்தக்கட்சியின் எம்எல்ஏவையோ அமைச்சரையோ எங்கள் கட்சிக்கு வருமாறு நாங்கள் அழைக்கவில்லை.
இதற்கு காரணம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான். அவர்தான் ராஜினாமா என்ற ஆட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
எனவே கர்நாடக அரசியல் குழப்பத்துக்கு அவர்தான் காரணம். வேண்டுமானால் அவர் மீது குறை கூறுங்கள். பாஜகவை குறை கூற வேண்டாம்” என்றார்.