டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம், காணொலி காட்சி வழியாக நடந்தது. இந்தகூட்டத்துக்கு தலைமை தாங்கிபேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அரசை தாக்கிப்பேசினார்.
அப்போது அவர், திட்டமிடாமல் 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது, இந்தியாவில் உள்ள லட்சோபலட்சம் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வில் குழப்பத்தையும், வலியையும் ஏற்படுத்தி இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
ஊரடங்கால் கோடிக் கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுவான குறைந்தபட்ச நிவாரண திட்டத்தை தயாரித்து மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
21 நாள் ஊரடங்கு பிரச்சினையை சோனியாகாந்தி அரசியலாக்கி இருப்பதற்கு பாரதீய ஜனதா மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் கொரோனா வைரசை எதிர்த்து போராடுவதில் இந்தியாவின் முயற்சிகள் உள்நாட்டிலும், உலகளவிலும் பாராட்டப்படுகின்றன.
கொரோனா வைரசை வீழ்த்துவதில் நாட்டின் 130 கோடி மக்களும் ஒன்றுபட்டுள்ளனர். ஆனாலும்கூட, காங்கிரஸ் கட்சி அற்ப அரசியல் விளையாட்டு நடத்துகிறது. நாட்டுநலனை கருத்தில் கொண்டு, மக்களை தவறாக வழிநடத்துவதை அந்தகட்சி நிறுத்த வேண்டிய அவசரமான தருணம் இது. இவ்வாறு அமித் ஷா அதில் கூறி உள்ளார்.
சோனியா காந்தியின் விமர்சனத்துக்கு பாரதீய ஜனதா தலைவர் ஜேபி.நட்டாவும் டுவிட்டரில் பதில் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரசுக்கு எதிரானபோரில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் முயற்சிகள் உலகளவில் பாராட்டப்படுகின்றன. பிரதமர், அனைத்து மாநிலங்களுடன் சேர்ந்து ஒரேஅணியாக போராடுகிறார். கடினமான காலங்களில் காங்கிரஸ் கட்சி ஒருபொறுப்பான அரசியல் கட்சியாக செயல்பட வேண்டும்.
ஒட்டுமொத்த நாடும் பிரதமர் மோடியின் தலைமையில் கொரோனா வைரசுக்கு எதிராக ஒன்று பட்டுள்ளது. அத்தகைய ஒருநேரத்தில் சோனியா காந்தி வெளியிட்டுள்ள கருத்து உணர்வற்றது, அநாகரீகமானது. இது அரசியல் செய்வதற்கான நேரமுமல்ல. தேசத்துக்காக ஒன்றுபட்டு செயல்படவேண்டிய தருணம் இது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.