கடந்த 2000-ம் ஆண்டில் வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் திடீரென மரணமடைந்தபோது தானே புயலால் தமிழகம் நிலை குலைந்ததுபோல தமிழக பாஜகவும் நிலை குலைந்தது. நேரு குடும்பத்துக்கு நெருக்கமாக, காங்கிரஸில் செல்வாக்காக இருந்த அவர், பாஜகவில் இணைந்து, அறிமுகம் இல்லாத திருச்சி தொகுதியில் வென்று 1998-ல் மத்திய அமைச்சரானார். மூன்று
முறை தொடர்ந்து வெற்றி பெற்று யாராலும் தோற்கடிக்க முடியாது என்று கூறப்பட்ட காங்கிரஸ் எம்.பி. அடைக்கலராஜை இரண்டு முறை தோற்கடித்தவர் குமாரமங்கலம்.
அவரது மறைவால் திருச்சி தொகுதியில் 2001 மே மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. குமாரமங்கலம் பெற்றிருந்த மக்கள் செல்வாக்கும், அவரது திடீர் மறைவால் ஏற்பட்ட அனுதாபமும், கூட்டணி பலமும் (அப்போது திமுக – பாஜக கூட்டணி) பாஜக சார்பில் யார் நின்றாலும் வெற்றிதான் என்ற நிலை இருந்தது. அதனால் பாஜக வேட்பாளர் யார்? என்ற ஆவல் அனைவரிடமும் எழுந்தது. குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம், தங்கை லலிதா குமாரமங்கலம் ஆகியோரில் ஒருவர் வேட்பாளர் ஆகலாம் என்று கூறப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாரத விதமாக சுகுமாரன் நம்பியார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
திருச்சி மக்களுக்கு மட்டுமல்ல. தொகுதி பாஜகவினருக்கு இது சற்று அதி்ர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. சிலர் அவரை எதிர்க்கவும் செய்தார்கள். எல்லாம் அவரை நேரில் பார்க்கும் வரைதான். அவர் திருச்சி வந்திறங்கிய ஒரு சில நாளிலேயே எல்லோருக்கும் பிடித்தவரானார். எதிர்க்கட்சிகள் அவரை மலையாளி, கேரளத்தவர் என்று பிரசாரம் செய்தனர். ஆனால், இதுவெல்லாம் மக்களிடம் எடுபடவில்லை. அவரை அறிமுகப்படுத்துவதும் மிக எளிதாக இருந்தது. நடிகர் எம்.என். நம்பியாரின் மகன் என்றதும் எல்லோருக்கும் தெரிந்தவரானார். வில்லன் நடிகராக இருந்தாலும் மக்களிடம் கதாநாயகன் இமேஜ் பெற்றவராயிற்றே நம்பியார்!
அப்போது நான் திருச்சியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். எதிர்க்கட்சியினர் கூட பாஜக தான் வெற்றிபெறும் என்ற கூறி வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அதிமுக வேட்பாளர் தலித் எழில்மலை வெற்றி பெற்றார். சுகுமாரன் நம்பியாருக்கு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கை நழுவியது. இப்படித்தான் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தார் அவர்.
அந்தத் தேர்தலில் வென்றிருந்தால் அவர் மத்திய அமைச்சராகி இருப்பார். வரலாறு அவரை வேறு விதமாக பதிவு செய்திருக்கும். தேர்தலில் தோற்றாலும் திருச்சியுடனான தொடர்பை அவர் கைவிடவி்ல்லை. அதன்பிறகும் திருச்சியில் மிகச் சாதாரண கட்சி ஊழியர்களின் திருமணத்தில் கூட கலந்து கொள்ள பலமுறை வந்துள்ளார்.
2004-ல் அதிமுக கூட்டணியில் திருச்சி தொகுதி பாஜகவுக்கு கிடைக்கவில்லை. அதனால் வட சென்னையில் போட்டியிட்ட சுகுமாரன் தோல்வி அடைந்தார். அதன் பிறகு அவர் எந்தத் தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை. இனியும் அவர் போட்டியிட மாட்டார்.
ஜனவரி 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சுகுமாரன் நம்பியார் காலமானார். அவரது மரணச் செய்தியை கேட்டவர்கள் முதலில் நம்பவே மறுத்தார்கள். செய்தி கேள்விபட்டதும் பாஜக மாநில துணைத் தலைவர் டாக்டர் தமிழி்சை செளந்திரராஜனிடம் தொலைபேசி்யில் பேசினேன். அவருக்கு என்னைவிட அதிர்ச்சி. உடல் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்ட அவருக்கே இந்த நிலையா? நம்பவே முடியவில்லை என்றார். அவரை அறிந்த அனைவருக்கும் இதே நிலைதான்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரி பள்ளியில் படித்த அவர், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆர்ம்ஸ்ட்ராங் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ., எம்.பி.ஏ. படித்தார். கலிபோர்னியாவில் மற்றொரு பல்கலைக்கழகத்தில் அவர் எம்.எஸ். பட்டமும் பெற்றார். சுமார் 10 ஆண்டுகள் அமெரிக்காவில் படித்தாலும் இந்துப் பண்பாடு, கலாசாரம் மீது தீராத காதலும் பற்றும் அவருக்கு உண்டு.
அதனால்தானே என்னவோ, பிரபலமான நடிகரின் மகனாக, வெற்றிகரமான தொழிலதிபராக இருந்தாலும் 1990-ல் பாஜகவில் இணைந்தார். அவர் நினைத்திருந்தால் காங்கிரஸ் அல்லது அதிமுகவில் இணைந்து பதவிகளைப் பிடித்திருக்கலாம். இரண்டு கட்சிகளிலும் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. தனது பள்ளிக்கால நண்பரான ஜெயலலிதா முதல்வரான நேரத்தில் தமிழகத்தில் அடையாளமே இருந்த பாஜகவில் இணைந்தார். அப்போது இது பரபரப்பாகப் பேசப்பட்டது.
கட்சியில் இணைந்தாலும் அவர் எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை. கட்சியின் மூலம் இந்து சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்றே அவர் விரும்பினார். பாஜகவில் அறிவுஜீவிகள் வட்டத் தலைவர், அகில இந்தியப் பொருளாளர், தேசிய செயற்குழு உறுப்பினர் என பொறுப்புகளில் இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்புகளின் பணிகளிலும் ஆர்வம் காட்டினார்.
தந்தை எம்.என். நம்பியாரைப் போலவே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டிருந்த அவர், சிறு வயது முதல் தொடர்ந்து மாலை அணிந்து சபரிமலைக்கு சென்று வந்தார். ஐயப்ப பக்தர்களை இந்துத்துவ கருத்தியல் வட்டத்திற்கும் வர வைக்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்தது. அதற்காக சென்னை உள்ளி்ட்ட பல இடங்களில் ஐயப்ப குருசாமிகள் மாநாட்டை நடத்தினார்.
சுவாமி தயானந்த சரஸ்வதியால் தொடங்கப்பட்ட தர்ம ரக்ஷண சமிதி என்ற அமைப்பின் பல்வேறு பணிகளை அவர் மேற்கொண்டிருந்தார். இந்த அமைப்பின் மூலம் அம்மன் யாத்திரை, தாய் மதம் திருப்புதல், பண்பாட்டு வகுப்புகள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு பல வழிகளில் தனது ஆதரவையும், உழைப்பையும் தொடர்ந்து அளித்து வந்தார்.
கடந்த 3 ஆண்டுகளாக சென்னையில் நடைபெற்று வரும் இந்து ஆன்மிக, சேவை கண்காட்சியின் வெற்றிக்கு பின்னால் இருப்பவரும் இவரே. கண்காட்சி நடைபெறும் அனைத்து நாள்களிலும் இரவு பகலாக அங்கேயே இருப்பார். வற்புறுத்தி அழைத்தாலும் மேடையேற மாட்டார்.
அவர் மரணடைவதற்கு முதல் நாள் ஜனவரி 7-ம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அவர், திருச்சியில் ஏப்ரல் 27, 28 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பாஜக மாநில மாநாட்டுக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து கட்சி, சமுதாயப் பணிகளில் ஈடுபட்டிருந்த அவர், தற்காப்புக் கலைகளிலும் நிபுணர். இந்திய ராணுவம், கறுப்புப் பூனைப் படை, தமிழக அதிவிரைவுப் படையினருக்கு பயிற்சி அளித்துள்ளார்.
உடல் நலத்தில் மிகுந்த அக்கறை செலுத்தி வந்த அவர், இயற்கை உணவு வகைகளை அதிகம் உண்பார். வேக வைத்த காய்கறிகள், கீரை, தயிர் தான் அவரது பிடித்தமான உணவு. உடற்பயிற்சி செய்யத் தவறியதே இல்லை. அடிக்கடி விமானங்களில் பயணிக்கும் அவர் கூடவே உடற்பயி்ற்சி உபகரணங்கள் கொண்ட கிட்டை எடுத்துச் செல்வார். அதனால் தான் அவருக்கு ஏற்பட் திடீர் மாரடைப்பு டாக்டர்கள் உள்பட பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 2001 முதல் 10 ஆண்டுகளாக அவருடன் பழகும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது. இறப்பதற்கு முதல் நாள் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
2014 தேர்தலில் எப்படியாவது பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமாக இருந்தார். 2004 தேர்தலில் மட்டும் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்திருந்தால் காங்கிரஸை நாட்டை விட்டே விரட்டியிருக்கலாம் என்பது அவரது கருத்தாக இருந்தது. 2004-ல் காங்கிரஸை விட பாஜகவுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே குறைவு. தமிழகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் சரியான கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி எளிதாகியிருக்கும். ஆனால், விட்டு விட்டார்களே என்று வருத்தத்துடன் கூறுவார்.
{qtube vid:=uKNxFmvE45o} கடந்த முறை சபரிமலையில் ஏற்பட்ட விபத்து அவரது மனதை வெகுவாக பாதித்திருந்தது. அதுகுறித்து தமிழ் பத்திரிகைகளில் வந்த எதிர்மறையான செய்தி குறித்து என்னிடம் தொலைபேசியில் வருத்தப்பட்டார். தமிழ் பத்திரிகை உலகின் சூழலை அவரிடம் எடுத்துக் கூறினேன்.
அவர் அதிர்ந்து பேசி யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். மரணமும் அவருக்கு அப்படியே வாய்த்தது. 64 வயதான சுகுமாரன் நம்பியாரின் மரணம் பாஜகவுக்கு மட்டுல்ல, ஒட்டுமொத்த இந்து சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் பேரிழப்பு என்பதில் சந்தேகமே இல்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டதுபோல உண்மையான தேசபக்தரையும், சமூக சேவகரையும் நாம் இழந்துவிட்டோம்.
நாட்டுக்கு உழைந்த அந்த நல்லவருக்கு நமது கண்ணீர் அஞ்சலி.
நன்றி தமிழ் ஹிந்து புதுவை சரவணன்
Tags; சுகுமாரன் நம்பியார், வாழ்க்கை குறிப்பு, பாஜக , சுகுமாரன் நம்பியார், சுகுமாரன், நம்பியார் , ஒரு சகாப்தம்
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
Leave a Reply
You must be logged in to post a comment.