கனடா நாட்டில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராக மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் மார்க் கார்னி, 59, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த சில நாட்களில் பிரதமராக பதவியேற்க உள்ள அவர், இந்தியாவுடனான உறவைப் புதுப்பிக்கத் தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.
வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த ஜனவரியில், தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்தாண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், மக்களின் செல்வாக்கை இழந்ததால், கட்சியின் ஒரு பிரிவினர் நெருக்கடியைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தார்.
கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை, பிரதமராக அவர் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த பல கட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, கட்சியின் தலைவராக மார்க் கார்னி நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த சில நாட்களில் அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
கனடா பார்லிமென்டுக்கு இந்தாண்டு அக்டோபரில் அடுத்த தேர்தல் நடக்க வேண்டும்.
அதே நேரத்தில், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், அடுத்த சில மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை பிரதமராக பதவியேற்ற பின், கார்னி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
சட்டவிரோதமாக நுழைபவர்களை தடுக்கத் தவறியதால், கனடா மீது வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். மேலும், கனடாவை, அமெரிக்காவின், 51வது மாகாணமாக இணைக்கப் போவதாகவும் அவர் கூறி வருகிறார். இந்த சூழ்நிலையில், கனடாவின் பிரதமராக மார்க் கார்னி பதவியேற்க உள்ளார்.
கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக, ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இதைத் தொடர்ந்து இரு தரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய, மார்க் கார்னி, ‘பிரதமர் பதவி கிடைத்தால், இந்தியா உட்பட ஒருமித்த கருத்துடைய நாடுகளுடனான உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறியிருந்தார்.
அதனால், இவர் பிரதமராக பதவியேற்ற பின், இந்தியா – கனடா இடையேயான உறவு புதுப்பிக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |