“டில்லி சட்டசபை நாட்டுக்கே மாதிரி சட்டசபையாக திகழ வேண்டும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.,க்கள் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை அறிந்து தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்,”என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பேசினார்.
டில்லி சட்டசபைத் தேர்தல் கடந்த மாதம் நடந்தது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களைக் கைப்பற்றிய பா.ஜ., ஆட்சியைக் கைப்பற்றியது.
தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்த ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை அடைந்தது. காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை.
டில்லி முதல்வராக ரேகா குப்தா, சபாநாயகராக விஜேந்தர் குப்தா மற்றும் 5 அமைச்சர்கள் கடந்த மாதம் பதவியேற்றனர்.
இந்நிலையில், டில்லி சட்டசபை எம்.எல்.ஏ.,க்களுக்கான இரண்டு நாள் வழிகாட்டுதல் முகாம் நேற்று துவங்கியது. இன்று நிறைவைடைகிறது.
முகாமை துவக்கி வைத்த, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பேசியதாவது:
டில்லி அரசு மற்றும் எம்.எல்.ஏ.,க்களிடம் டில்லி மக்கள் நிறைய எதிர்பார்க்கின்றனர். அதனால்தான் தேர்தலில் பெருவாரியான ஓட்டுக்களை அளித்து உங்களை சட்டசபைக்கு அனுப்பி இருக்கின்றனர்.
நாட்டின் தலைநகரான டில்லி, ‘மினி இந்தியா’ போன்றது. தலைநகர் டில்லியில் பல்வேறு மொழிகள், கலாசாரம் மற்றும் மதம் சார்ந்த பல்வேறு மாநிலங்களின் மக்கள் வசிக்கின்றனர்.
டில்லி மாநகரின் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மக்களுக்கான தேவைகளைக் கண்காணித்து எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பணிகளைச் செய்ய வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதும், அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதும் பெரிய பொறுப்பு.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான வழிகளை, எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் மற்றும் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு, இந்த பயிற்சி முகாம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எம்.எல்.ஏ.,க்கள் நல்ல பேச்சாளராக மட்டுமின்றி, மக்களின் குறைகளை காது கொடுத்து கேட்பதிலும் சிறந்தவராக இருக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
மேலும், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாடு உள்ளிட்ட தொழில்நுட்பங்களையும் எம்.எல்.ஏ.,க்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
தொழில் நுட்பங்களை அதிகபட்சமாக பயன்படுத்தி மற்ற மாநிலங்களுக்கு மாதிரி சட்டசபையாக டில்லி திகழ வேண்டும்.
டில்லி சட்டசபையின் புதிய எம்.எல்.ஏ.,க்கள், சட்டமன்ற வரைவை கற்றுக் கொள்ளவும், ஆதாரங்களைப் பயன்படுத்தி மக்கள் பணி செய்யவும், சட்டசபை விதிமுறைகளை அறிந்து கொள்ளவும் வேண்டும்.
டில்லி மாநகரின் வளர்ச்சிக்கு வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படுதல் மிகவும் அவசியம். எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதிப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் தீர்க்கமாக இருக்க வேண்டும்.
அதேபோல, சட்டசபையில் விவாதம் செய்யும்போது, ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான தளமாக இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் வளர்ச்சிப் பணிக்கு முட்டுக்கட்டையாக எம்.எல்.ஏ.,க்கள் இருக்கக் கூடாது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு டில்லி மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண டில்லி அரசும், எம்.எல்.ஏ.,க்களும் நேரம் காலமின்றி உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
‘பிரைட்’ எனப்படும் ஜனநாயகத்துக்கான பார்லிமென்ட் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், டில்லி எம்.எல்.ஏ.,க்களுக்கான் இரண்டு நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது. இந்த முகாமில் பார்லிமென்ட் மற்றும் சட்டசபை விதிமுறைகள், நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |