சரோஜினி நாயுடு என அழைக்கப்படும் சரோஜினி சட்டோ பத்யாயா "பாரதிய கோகிலா'' (இந்தியாவின் நைட்டிங் கேல்) என் அழைக்கப்படுபவர். இவர் ஒருபிரபலமான குழந்தை ஞானி, சுதந்திர போராளி மற்றும் கவிஞர் ஆவார்.
ஹைதாராபாத்தில் (ஆந்திரா) ஒரு வங்காளக் குடும்பத்தில் மூத்த மகளாக சரோஜினி நாயுடு (பிப். 13, 1879) ஆண்டு பிறந்தார். இவரது தந்தை விஞ்ஞானியாகவும் தத்துவ வியலாளராகவும், கல்வியாளராகவும் விளங்கிய அகோர் நாத் சடோ பத்யாயா; தாய் பரத சுந்தரி.
தமது வெளிநாட்டுப் படிப்பு முடிந்து தாயகம் திரும்பிய அகோரநாத், ஹைதராபாத் நிஜாம் மன்னர் ஆதரவுடன் அங்கே ஒரு கல்லூரியைத் தொடங்கி அதன் முதல்வரானார். அக்கல்லூரி பின்னாளில் நிஜாம் கல்லூரி ஆனது. ஆண்களுக்கு நிகராகப் பெண்களும், கல்வியறிவு பெற வேண்டும், எல்லாத் துறைகளிலும் முன்னேற வேண்டுமென்ற உயர்ந்த நோக்குடன் மகளிர் கல்லூரி ஒன்றையும் நிறுவினார்.
சரோஜினியின் தாயார் வரதசுந்தரி, வங்காள மொழியில் பாடல்கள் இயற்றுவதில் வல்லவர், இனிய குரலில் பாடக்கூடியவர்.
சரோஜினிதேவி பள்ளியில் சிறந்த மாணவியாக விளங்கினார். சென்னைக்குச் சென்று மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சேர்ந்து பயின்று, தமது பன்னிரெண்டார் வயதில் மாநிலத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார். சரோஜினிக்குத் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு படிப்பு பாதிக்கப்பட்டது. அவரது தந்தை தமது மகள் அறிவியலாளராக வேண்டுமென்று மிகவும் விரும்பினார். ஆனால், சரோஜினி கவிதை இலக்கியம் படைப்பதில் ஆர்வம் கொண்டார். கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 'ஏரியின் அழகி' என்னும் தலைப்பில் 1300 அடிகள் கொண்ட முதல் கவிதையை படைத்தார்.
ஹைதராபாத்தில் புகழ் பெற்று விளங்கிய டாக்டர் கோவிந்தராஜுலு நாயுடுவும், சரோஜினியும் காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால், சரோஜினியின் தந்தை அதற்கு உடன்படவில்லை, எனவே ஹைதராபாத் நிஜாம் ஆலோசனைப்படி சரோஜினியை இங்கிலாந்து நாட்டிற்கு மேல் படிப்பு படிக்க அனுப்பிட முடிவு செய்தனர். லண்டன் நகருக்கு 1895-ஆம் ஆண்டு சென்றடைந்த சரோஜினி, அங்குள்ள 'கிங்ஸ் கல்லூரி'யில் சேர்ந்து கணிதம் பயின்றார். பின்னர், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். சரோஜினிக்கு, பல்கலைக் கழக வகுப்பறைகளைவிட, இங்கிலாந்து நாட்டின் எழில் ததும்பி வழிந்த மலைப் பகுதிகளும், கோதுமை வயல்வெளிகளும், பசுமை நிறைந்த தோட்டங்களும், கொட்டும் அருவிகளும், சலசலத்து ஓடும் ஆறுகளும், வானமும், பூமியும், பறவைகளும் அவரது உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. ஒவ்வொன்றையும் ரசித்த சரோஜினி, கணிதத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, பாடநோட்டுகளில் கவிதைகளை எழுதிக் குவித்தார்.
இவரது ஆங்கிலக் கவிதைகளைப் படித்த ஆர்தர் சைமன்ஸ், எட்மண்ட் கோஸ் எனும் இரு ஆங்கில எழுத்தாளர்கள் வியந்தனர். மேலும், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொள்ளாத ஓர் இந்தியப் பெண் கவிதை உத்தியிலும், சொல்லாட்சியிலும் வெகு சிறப்பாக ஆங்கிலக் கவிதை எழுதுகிறாளே என்று பாராட்டியதுடன், சரோஜினியின் கவிதைகளைத் தொகுத்து நூலாகக் கொண்டுவர உதவினார்கள். அவரது கவிதைத் தொகுப்பு சரோஜினிக்கு இங்கிலாந்தில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.
சரோஜினி உடல்நலம் பாதிக்கப்பட்டார். 1898-ஆம் ஆண்டு ஹைதராபாத் திரும்பினார். சரோஜினியின் காதல் திருமணத்திற்கு அவரது காதலரான டாக்டர் கோவிந்தராஜுலுவின் சாதியும் தடையாக இருந்தது. சரோஜினியின் பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து எதிர்ப்புகளையும் முறியடித்து, 1898-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி சரோஜினி – டாக்டர் கோவிந்தராஜுலு நாயுடு திருமணம் எவ்வித சடங்களுமின்றி நடைபெற்றது.
சரோஜினி நாயுடு அவர்கள் கவிதை துறைக்காக பலபாராட்டுகளைப் பெற்றுள்ளார். இவரது கவிதை களில் அழகான வார்த்தைகள்_இருக்கும். அதன் காரணமாக அதை பாடவும்முடியும். 1905 ம் ஆண்டு அவரது முதல்பாடல்கள் தொகுப்பு தி கோல்டன் த்ரெஷோல்டு என்ற பெயரில் வெளியிடபட்டது. மேலும் இரண்டு பகுதிகள் வெளியிடப்பட்டன. தி பேர்ட் ஆஃப் டைம் (1912) மற்றும் தி புரோக்கன் விங் (1917) பின்னர் அவரது தி விஸார்டு மாஸ்க் மற்றும் எ டிரஷரி ஆஃப் போயம்ஸ் ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1961 ம் ஆண்டு அவரது மகள் பத்மஜா, வெளியிடப்படாத தனது தாயின் கவிதைகளை தி ஃபெதர் ஆஃப் டான் என்னும் தலைப்பில் வெளியிட்டார்.
இவரது கவிதைத் தொகுப்புகளில் , இந்திய நாட்டின் கலாச்சாரம், நாகரீகம், பண்பாடு முதலியவைகள் பற்றி ஏராளமாக குறிப்பிட்டுள்ளார். இவரது கவிதைகளில் வரும் வருணனைகள், கருத்துக்கள், கவிதைநடை, கவிதை நயம், ஓசைநயம், கவிதை அழகு, உவமைகள், உருவகங்கள் முதலியவற்றைக் கண்ட மகாத்மா காந்தி இவரை 'இந்திய நைட்டிங்கேல்' என்னும் பட்டமளித்துப் பாராட்டினார்.
இங்கிலாந்து நாட்டு அரசாங்கம் சரோஜினியின் கவிதைகளைப் பாராட்டி 'கெய்சரி ஹிந்த்' என்னும் பதக்கம் வழங்கிப் பாராட்டியது. முதன் முதலில் இந்தப் பதக்கத்தைப் பெற்ற ஆண் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், அவருக்குப்பிறகு சரோஜினி.
சுரோஜினியின் உரைவீச்சு மிக அற்புதமானது. இவரது சொற்பொழிவுத் திறனைக் கண்டு வியந்த மாபெரும் தேசியத் தலைவரான கோபாலகிருஷ்ண கோகலே 1902-ஆம் ஆண்டு அரசியலுக்குக் கொண்டு வந்தார்.
"பொதுமக்களுக்கு எட்டாத தூரத்திலிருந்து கொண்டு கருத்துக்களையும், கவிதைகளையும் எழுதுவதைவிட, கீழே இறங்கி வந்து தன் தாய்நாட்டிற்குச் சேவை செய்வதே சிறந்தது" – என்று கூறி சரோவினியை அரசியலில் ஈடுபடுத்தினார். அதனால் கோகலேயை அரசியலில் தமது முதல் குருவாகவும், மகாத்மா காந்தியைத் தமது அறிவுரையாளராகவும் ஏற்றுக்கொண்டார்.
சரோஜினி இதியாவின் பல மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தேச விடுதலை, பெண்ணுரிமை, இந்து – முஸ்லீம் ஒற்றுமை முதலியவைகள் குறித்து மக்களிடம் விரிவாக பரப்புரை செய்தார்.
சரோஜினி தமது எழுச்சி மிக்கக் கவிதைகள் மூலம் மக்களிடையே சுதந்திரக் கனலை மூட்டினார். தமிழகத்தில் சுந்திர உணர்வையும், எழுச்சியையும் தமது கவிதைகளில் ஏற்படுத்தி மகாகவி பாரதி செய்த மகத்தான பணியை அன்று அங்கே சரோஜினி மேற்கொண்டார். பாலகங்காதர திலகர், முகமதலி ஜின்னா, அன்னிபெசன்ட் அம்மையார் முதலிய அரசியல் தலைவர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார் சரோஜினி. ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக மகாத்மாகாந்தி நடத்திய அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொண்டார் சரோஜினி.
தென்னாப்பிரிக்காவில் மகாத்மாகாந்தி செய்த வெற்றிகரமான செயல்களைப் பாராட்ட லண்டனிலிருந்த இந்தியர்கள் 1914-ஆம் ஆண்டு கூட்டங்கள் நடத்தினார்கள். அக்கூட்டங்களில் சரோஜினி பங்கேற்று மகாத்மா காந்தியின் தன்னலமற்ற சேவைகளைப் பாராட்டிப் பேசினார்.
லக்னோவில், 1918-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் சரோஜினியை ஜவகர்லால் நேரு முதன் முதலாகச் சந்தித்தார். சரோஜினியின் பேச்சில் கவரப்பட்ட நேரு, 'கல்லூரி நாட்களில் நான் கொண்ட தெளிவற்ற எனது சோசலிசக் கொள்கைகள் சரோஜினியின் பேச்சின் பின்னணியில் மூழ்கிவிட்டன' என்றார். மேலும், அவர் சரோஜினியை, 'இந்திய தேசியத்தின் உதயதாரகை' என்று புகழ்ந்துரைத்தார்.
மகாத்மா காந்தியடிகள் உப்புச் சத்தியாகிரகம் செய்தபோது தண்டிக்குச் சென்று உப்பு எடுத்தார். சரோஜினி, காந்தியின் அறைகூவலின்படி, தர்சணா உப்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை முன்பு போலீசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் தர்ணா செய்தார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சரோஜினி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து, இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வேண்டுமென அறைகூவல் விடுத்தார். அவரது உணர்வுப் பூர்வமான உரை இளைஞர்களின் இதயங்களில் ஊடுருவிப் பதிந்தன. சரோஜினியின் ஆவேசப் பேச்சு, இளைஞர்களை எரிமலையாக்குவதைக் கண்டு ஆங்கிலேயே அரசு அஞ்சி நடுங்கியது.
"ஒரு கவிஞர் மென்மையான மனத்துடன் மக்கள் மத்தியில் சமாதான கீதம் பாடுவதை விட்டு, நாட்டுக்குக் கேடு விளைவிக்கும் புரட்சியைத் தூண்டுவது நியாயமே இல்லை" என்று ஆங்கிலேய அரசு குற்றம் சாட்டியது.
"கவிஞர் என்பவனும் இந்நாட்டின் ஒரு குடிமகன் தான், அவனும் மக்களில் ஓர் அங்கம்தான், நல்லதைக் கண்டால் போற்றிப் பாடும் கவிஞன், தீமையைக் கண்டால் தீப்பந்தத்துடன் கொதித்தெழுவதை யாராலும் தடுத்துவிட முடியாது" – என்று பதில் கூறி அவர்கள் வாயை அடைத்தார் சரோஜினி.
ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து, சரோஜினி மிகுந்த கோபத்துடன், பஞ்சாபில் நடந்த படுகொலைகளுக்கும், வெறிச்செயலுக்கும் அரசாங்கம் பரிகாரம் தேடவில்லையென்றால், அரசாங்கம் எனக்குக் கொடுத்த 'கெய்சரி ஹிந்த்' பதக்கம் தேவையில்லை என்று கடிதம் எழுதி, அத்துடன் பதக்கத்தையும் லண்டனுக்குத் திருப்பி அனுப்பிவிட்டார். அதைத்தொடர்ந்து இந்தியர் பலரும் அரசாங்கம் தங்களுக்குத் தந்திருந்த பட்டங்களையும், பதக்கங்களையும் பதவிகளையும் உதறியெறிந்தார்கள்.
கான்பூரில் 1925-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், சரோஜினி இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாடு சுதந்திரம் பெற்றவுடன் உத்திரபிரதேசத்தின் முதல் பெண் ஆளுநராகப் பதவியேற்றார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமடைந்தர். அவருக்கு பத்மஜா, ஜெயசூர்யா, ரந்தீர் மற்றும் லீலாமணி என நான்கு குழந்தைகள் இருந்தன . பின்னர் அவரது மகள் பத்மஜா மேற்கு வங்காளத்தின் ஆளுனர் ஆனார்.
நன்றி ; சந்தானம் UK
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.