நீரின் குணமது நெருப்பினை அணைக்கும்
தீயின் தன்மையோ நீரினை வற்றும்
வளியின் கடமையும் வளர்க்கும் அணைக்கும்
நிலமது அனைத்தையும் தாங்கியே கிடக்கும்
வெளியது அனைத்தும் சாட்சியாய்க் காணும்
தன்மைகள் தனித்தனி அதனதன் கடமை
நன்மையோ தீமையோ அதனதன் பலாபலன்
குன்றுதல் கூடுதல் இவற்றுக் கில்லை
ஒன்றினை யொன்றே சார்ந்து மிருக்கும்
உண்மையும் இதுவே உலகமும் அறியும்
அனைத்தும் நிகழ்வது இறைவனின் ஆணை
அதையேச் சிலரும் இயற்கை என்பார்
இறையோ இயற்கையோ நமக்கது வேண்டாம்
முறையாய் நிகழ்தலில் மகிழ்ச்சியே கொள்வோம்
குறைவெது மின்றிக் குணைத்தையே காண்போம்
புயலின் சீற்றம் புகலிடம் தேடி
நிலத்தை யடைந்து நாசங்கள் செய்து
மழையைப் பொழிந்து வெள்ளம் பெருக்கி
நெருப்பினை வளர்த்து வீடுகள் எரித்த
கோர தாண்டவம் அண்மையில் கண்டேன்
எரியும் வீடுகள் அலறும் குரல்கள்
தெரியும் இடமெலாம் வெள்ளப் பெருக்கு
வீசும் காற்றும் தன்பணி செய்திட
அணையவு மில்லை வளர்க்கவு மில்லை
வெளியும் இதனை வேடிக்கை பார்த்தது
நீரின் குணமது அணைப்பது தானே
அடியில் அத்தனை தண்ணீர் இருந்தும்
அதுவேன் தீயை அணைத்திட வில்லை?
நெருப்பேன் நீரை வற்றிட வில்லை?
அதையே நினைத்து மனதுள் குழம்பினேன்
சட்டெனத் தெளிவாய் அனைத்தும் புரிந்தது
கட்டளை இடுபவன் எவனெனத் தெரிந்தது
அவரவர் பணியை அவரவர் செய்யினும்
ஆண்டவன் கட்டளை மீறுதல் இல்லை
இறைவன் இயற்கை நியதிகள் இதுவே
செய்யும் கடமை மட்டுமே என்னது
உய்யும் பலனோ அவனே தருவான்
எய்யும் அம்பினை விடுபவன் இலக்கினை
எய்திடும் விதியை இறைவன் அருள்வான்
இதுவே புயலும் சொல்லிய பாடம்!
கீதையில் கண்ணன் சொன்னது மிதுவே
கடமையைச் சரிவரச் செய்தால் போதும்
பலனைக் கருதிச் செய்திட வேண்டாம்
பலனை அளிப்பவன் இறைவன் அவனே
இதுவே அவனை அடைந்திடும் வழியாம்!
[அண்மையில் வீசிய 'ஸான்டி' புயலின்போது, பெய்த பெருமழையின் தாக்கத்தால், நியூ ஜெர்ஸி, நியூயார்க் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. நீரின் வேகத்தால் மின்தடை ஏற்பட்டு, அதன் விளைவாக அடுக்கு மாடிக் கட்டடம் ஒன்று தீப்பிடித்து எரிய, அருகிலேயே நிறைய தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தாலும், கடல் நீர் என்பதால் அதனால் அந்த நெருப்பை அணைக்கமுடியாமல், பெருத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிகழ்வைப் பற்றி என் மனைவி என்னிடம் சொல்லி வியந்தபோது, அதன் தாக்கத்தில் நான் எழுதிய வரிகள் இவை. அனைவருக்கும் பணிவன்பான வணக்கம்.]
நன்றி : Dr . சங்கர் குமார் வட கரோலினா USA
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.