இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டம் முழுமையான சுதந்திரம் என்ற நிலையை எட்டிய சூழ்நிலையில் சமஸ்தான அரசுகளை பிரிட்டிஷ் இந்தியாவுடன் ஒன்றிணைப்பது பெரும் சவாலாக விளங்கியது. இதற்காக சமஸ்தானங்கள் துறை உருவாக்கப்பட்டு சர்தார் வல்லபபாய் படேல் அதனுடைய பொறுப்பாளரானபோது, மவுண்ட்பேட்டனுடனான
உரையாடலில், "எனக்கு கூடை நிறைய ஆப்பிள்கள் தருவதானால் வாங்கிக் கொள்கிறேன், இல்லாவிட்டால் இந்த வியாபாரம் வேண்டாம்' என்றாராம். அதற்கு மவுண்ட்பேட்டன் "என்ன சொல்ல வருகிறீர்கள்' என்றிருக்கிறார். படேல், "எனக்கு 565 ஆப்பிள்களும் வேண்டும்' எனக்கூற, "நிச்சயமாய் என்னால் சொல்ல முடியாது, ஆனால் ஒன்றிரண்டு குறைந்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்றாராம் மவுண்ட் பேட்டன்.
ஆனால் கூடை நிறைய ஆப்பிள்கள் தருவது போல் சுலபமாக இல்லை சமஸ்தானங்களை இணைப்பது. பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கு முழுமையான சுதந்திரம் தருவது போல் வெளிப் பார்வைக்கு காட்டிக் கொண்டிருந்தாலும், அவர்கள் எண்ணம் பாகிஸ்தான், ஹிந்துஸ்தான், பிரின்ஸஸ்தான் என மூன்றாக அமையட்டும் என்றிருந்து. இதற்காக ஜூன் 3, 1947 அன்று தந்திரமாக அவர்கள் வெளியிட்ட வைஸ்ராய் அறிவிப்புதான் 1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் சமஸ்தானங்கள் தங்கள் விதியை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்பது.
"நீங்கள் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணைவதோ, இணையாமல் இருப்பதோ முழுக்க முழுக்க உங்கள் கையில் உள்ளது' என்கிற பிரிட்டிஷ் ஆணை, தனது படைபலம் மூலம் அண்டை ராஜ்யங்களை இணைத்து கொள்வது போன்ற பல்வேறு கற்பனைத் தளங்களை அரசு மனங்களில் உருவாக்கியது.
சமஸ்தான அரசுகள் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் கொண்டிருக்கும் அனைத்து ஒப்பந்தங்களும், உறவுகளும் முற்றிலுமாக முடிவுக்கு வரும் சூழ்நிலையில், இந்த அரசுகளுடனான பேச்சுவார்த்தை, இவர்களை அரசு நிர்ணய சபையில் பிரதிநிதித்துவப்படுத்துவது, ஒன்றிணைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவது போன்ற கடினமான பணிகளை ஏற்பதற்கு முன்வந்தவர் சர்தார் படேல். அவருக்கு உறுதுணையாக இருந்து செயலாற்றியவர் வி.பி. மேனன்.
நாடு சுதந்திரப் போராட்டத்தின் இறுதி நகர்வை நோக்கி சென்று கொண்டிருக்கையில் நம் மக்களே ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் சூழ்நிலையை முஸ்லிம் லீக்கின் நேரடி நடவடிக்கை தீவிரப்படுத்தியிருந்தது. ஜின்னா, மதத்தின் அடிப்படையில் தனிநாடு கேட்டார்.
அமையப்போகும் பாகிஸ்தானின் எல்லைகளை விஸ்தரித்துக்கொள்ள ஜோத்பர், ஜுனாகட், கத்தியவார், காஷ்மீர், முழுமையான வங்காளம் மற்றும் பஞ்சாப் போன்ற பகுதிகள் மட்டுமல்லாது தென்பகுதியில் உள்ள ஹைதராபாத், திருவிதாங்கூர் அரசுகளையும் தன்னுடன் சேர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
கிட்டத்தட்ட 18 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பும் 9 கோடி மக்கள் தொகையும் கொண்ட சமஸ்தான அரசுகளின் ஆளுகையிலிருந்த மக்களின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் நாள் நெருங்க நெருங்க ராஜாக்கள் மட்டுமல்லாது மக்களும் கடும் பதட்டத்தில் இருந்தனர்.
ஒரு சில குட்டி சமஸ்தானங்களில் சாலை வசதி, பள்ளிக்கூடம் போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமில்லா சூழ்நிலை. சில பெரிய அரசுகளில் ராஜாக்களின் விருப்பம் சட்டமாக இருந்தது. சுயலாப அடிப்படையிலான நிர்வாகம் என்பது பொது மக்களுடைய வெறுப்பையும் கணிசமான அளவு பெற்றிருந்தது. மக்களாட்சி தத்துவம் மலரத் தொடங்கியிருந்த காலமானதால் அரசுகளின் கீழிருந்த மக்கள் அத்தத்துவத்தினை அனுபவிக்க கூடிய வாய்ப்பைப் பெற காத்துக் கொண்டிருந்தனர்.
சமஸ்தானங்களுடைய சேம்பர் ஆப் பிரின்ஸஸ், பிரிட்டிஷ் அரசின் சுதந்திர அறிவிப்பிற்கு பிறகு, தங்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுக்கும் மனநிலையில் இல்லை. அது மட்டுமல்ல, அவர்களது வாழ்க்கை, சொத்துகள், வாரிசுரிமை போன்ற அடிப்படைக் காரணங்களில் தெளிவான பாதை தெரியாததால் மிகுந்த குழப்பத்தில்
இருந்தனர்.
போபால் மன்னர் தலைமையில் அணி திரண்ட பெரும்பான்மை ராஜாக்கள் தங்களது எல்லைகளில் மாற்றம் வரக்கூடாது என்பது முதற்கொண்டு தங்களின் உள்நாட்டு நிர்வாகத்தில் இந்திய அரசு தலையிடக்கூடாது என்பதுவரை கடுமையான நிலைப்பாடுகள் கொண்ட தீர்மானத்தை 1946 ஜனவரி 26 அன்று நடந்த பம்பாய் மாநாட்டில் நிறைவேற்றினர். இது இடைக்கால அரசாங்கத்திற்கு தீவிர நெருக்கடியை கொடுத்தது மட்டுமல்ல எதிர்வினைகளையும் அதிகப்படுத்தியது.
இந்த பம்பாய் தீர்மானத்தில், விலகியிருந்தது கொச்சின் மற்றும் பரோடா சமஸ்தானங்கள் மட்டுமே. போபால் அரசுக்கு பலம் சேர்த்தது திருவிதாங்கூர் திவான் சர் சி.பி. ராமசாமி ஐயரின் சுதந்திர திருவிதாங்கூர் மட்டுமல்ல, "நாங்கள் 1750 நிலைபாட்டிற்கு சென்றிடுவோம்' என்ற அறிவிப்பும்தான். மேலும் ஹைதராபாத் நிஜாம் சார்பில் டாக்டர் சையது அப்துல் லத்தீப் "முழு அதிகாரமுடைய மேன்மை தாங்கிய நிஜாம் தலைமையில் ஹைதராபாத் அரசு அமையும்' என்றார்.
இந்த அரசுகளை சட்ட நிர்ணய சபையிலே பங்கேற்க செய்வதற்கு நிறைய தனிப்பட்ட முயற்சிகள் தேவைப்பட்டன.
ஒருபுறம் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து வெளியேறும்போது நிர்வாக அமைப்பை சீரமைக்க வேண்டியிருந்தது; மறுபுறம் பிரிவினை மற்றும் அதையொட்டிய பிரச்னைகள், இதற்கிடையில் தனிப்பட்ட தொடர்பு, நெருக்கம் மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான உறவு.
இதன் மூலம் சமஸ்தானங்களை இணைக்கின்ற பெரும்பணி, குறிப்பிட்ட கால நெருக்கடிக்குள் செயலாற்றுகின்ற தேவை என பல்வேறு பணிகளை திறம்பட கையாண்டவர் படேல். அது மட்டுமல்ல, எந்நிலையிலும் வழுவாத நெறிமுறை, அப்பழுக்கற்ற தேசபக்தி, கடுமையான மன உறுதி போன்றவற்றால் படேல் ஒருங்கிணைந்த இந்தியாவின் இரும்பு மனித
ரானார்.
சர்தார் படேலின் மனஉறுதியும் செயல் வலிமையும் 565 தேசங்களை ஒருங்கிணைத்தது. சுதேச மன்னர்களிடையே பேசியபோது, "கடந்த காலங்களில் நமக்குள்ளே ஏற்பட்ட பிரிவினை, சச்சரவு, பொறாமை இவற்றால் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களிடம் நம் நாட்டை, சுதந்திரத்தை இழந்தோம். மீண்டுமொரு முறை இந்த வலைக்குள் நாம் விழுந்துவிடக்கூடாது. நமக்கு சுதந்திரம் வரவிருக்கும் இவ்வேளையில் நம்முடைய ஒற்றுமை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமே பொது நன்மையை பெற முடியும்' என்றார்.
மேலும் "ரத்தத்தாலும், உணர்வாலும் இணைக்கப்பட்ட நாம் நம் தாய்நாட்டின் மேன்மைக்காக ஒத்துழைப்பு தர வேண்டும்' என உருக்கமுடன் வேண்டிக் கொண்டார். அவர்களுக்கிருந்த பிரச்னைகளாக சொத்து, அதிகாரம், பட்டம் மற்றும் வாரிசுரிமைகளில் அவர்களின் நியாயமான மன உணர்வைப் புரிந்து கொண்டு இணைப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்தினார்.
தேவைப்படும் இடங்களில் கடுமையை பிரயோகப்படுத்தினார். ஹைதராபாத் நிஜாம் "இறுதி வரை போராடுவோம்' என்றபோது "தற்கொலையைத் தடுக்க முடியாது' என்றார்.
ஜுனாகட் நவாப் இந்தியாவை விட்டு வெளியேறியபின் மக்கள் படேலுக்கு எழுச்சி மிகுந்த வரவேற்பளித்தனர். நேருவால் கையாளப்பட்ட காஷ்மீர் பிரச்னை மட்டும் இன்னும் நமக்கு தீராத தலைவலியை கொடுத்துக் கொண்டுள்ளது.
நாட்டை இணைத்த இரும்பு மனிதருக்கு 700 டன் இரும்பினாலான உலகின் உயரமான சிலை அமைக்க, குஜராத் அரசின் "சர்தார் படேல் ராஷ்ட்ரிய ஏக்தா டிரஸ்ட்' கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டியது.
பர்தோலி விவசாயிகளின் சத்யாகிரக போராட்டத்தை வென்றெடுத்ததால் "சர்தார்' என காந்தியால் அழைக்கபட்ட மாமனிதருக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடம் அவர்கள் பயன்படுத்திய இரும்பு கருவிகளைப் பெற்று சிலை அமைக்க குஜராத் அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
படேல் என்பவர் நாட்டை ஒருங்கிணைத்த வரலாற்றை, வரும் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும்.
ஒற்றுமை என்பது பூகோள எல்லைகள் மட்டுமல்ல; உணர்வுரீதியாக மக்களை ஒருங்கிணைப்பதும்தான். அதனால்தான் அவரது சிலைக்கு "ஒற்றுமை சிலை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. அவரது உழைப்பை, தியாகத்தை, மனஉறுதியை ஒற்றுமையை நினைவு கூர்ந்து வணங்குவோம்.
"ஒற்றுமை என்றும் பலமாம்'.
நன்றி ; வானதி சீனிவாசன்
மாநில செயலாளர், பாரதிய ஜனதா கட்சி.
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.