பத்திரிகையாளருக்குப் பதில்

 1943 ஜூன் மாத இறுதியில் நேதாஜியின் சிங்கப்பூர் பயண ஏற்பாட்டின்போது பத்திரிகையாளர்கள் கூட்டம் நடந்தது அப்போது ஜப்பானிய நிருபர் ஒருவர் சற்று ஆத்திரமூட்டும் வகையில் ஒரு கேள்வி கேட்டார்.

"போஸ் அவர்களே! இந்திய விடுதலைக்காக நீங்கள் இராணுவ ரீதியாக ஆயுதம் ஏந்திப் போராடப் போவதாக அறிவித்திருக்கிறீர்கள். ஆனால், இந்திய மக்கள் அனைவரும் மகாத்மா காந்திக்குப் பின்னால் தான் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தலைமை தாங்கும் தகுதியும் அவருக்குத்தான் இருக்கிறது. இந்த நிலையில் ஆயுதமேந்தும் உங்கள் போராட்டத்தை இந்திய மக்கள் ஆதரிப்பார்களா?

ஏற்கெனவே உங்களை இந்திய மக்கள் ஆதரிக்காததால் தானே நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறினீர்கள்? அப்படி வெளியேறிய பின்னரும் ஜெர்மனிக்குச் சென்ற நீங்கள் இரண்டாண்டு காலமாக என்ன செய்ய முடிந்தது?

ஜெர்மனியில் ஏற்பட்ட அதே நிலைமை இங்கேயும் நீடித்தால், இங்கிருந்து நீங்கள் வேறு எங்கே போவீர்கள்?" என்று கேட்டார் அந்தப் பத்திரிக்கையாளர்.

அந்த நிரூபரை பார்த்து புன்முறுவலோடு நேதாஜி அளித்த பதில் வருமாறு:

"இந்திய மக்கள் அன்புடன் நேசிக்கும் தேசியத் தலைவர்களில் மிக உயர்ந்தவர் மகாத்மா காந்திஜிதான். இதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை 1885ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டிருந்தாலும், 1905ஆம் ஆண்டு வரையிலும் அந்த ஸ்தாபனம் ஆண்டுக்கு ஒருமுறை கூடிக்கலையும் அமைப்பாகவே இருந்து வந்தது. அதன் பின்னர், பிரிட்டிஷ் அரசு வங்க மாநிலத்தை இரண்டாகப் பிரித்ததன் விளைவாக அந்த ஸ்தாபனத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. அதன் பின்னர் ஆங்கிலேய ஆட்சியாளரை எதிர்த்து அந்த ஸ்தாபனம் போராட்டம் நடத்தியது.

ஆனால், அந்தப் பாதையிலிருந்து மறுபடியும் விலகி, ஏறக்குறைய ஆறு ஆண்டுகாலம் வரை காங்கிரஸ் உயிரற்ற ஸ்தாபனமாய் இருந்து வந்தது. 1915ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிவந்த மகாத்மா காந்திஜி சம்பரான் விவசாயிகள் இயக்கம், ஆமதாபாத் மில் தொழிலாளர் இயக்கம் ஆகியவற்றின் மூலம் இந்திய அரசியலில் ஒரு புதிய விழிப்பை ஏற்படுத்தினார். அதன் பிறகு 1920ஆம் ஆண்டில் அவரது தலைமையில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கமும், 1930ஆம் ஆண்டில் தொடங்கிய சட்ட மறுப்பு இயக்கமும் இந்திய விடுத்தலைப் போராட்டத்தில் புதிய விறுவிறுப்பை ஏற்படுத்தின. இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் விடிவெள்ளி மகாத்மா காந்திஜிதான் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை!

மகாத்மா காந்திஜியிடமிருந்து நான் 1939ஆம் ஆண்டிலேயே பிரிந்து விட்டேன். இந்தப் பிரிவுக்குக் காரணம் கொள்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அல்ல. இந்தியாவின் விடுதலைதான் இந்திய தேச பக்தர்கள் அனைவருக்கும் பொதுவான இலட்சியம். ஆனால், இந்த லட்சியத்தை அடைவதில் எந்தப் பாதையைக் கடைபிடிப்பது என்பதில் தான் எங்களுக்குள் கருத்து வேறுபாடு. எனக்கு முன்னாலும் இந்தியாவை விடுவிக்க ஆயுத பலத்தை நம்பியவர்கள் இருந்தார்கள்; போராடினார்கள். சந்திரசேகர் ஆசாத், பகத்சிங், சூர்யாசென் போன்ற புரட்சி வீரகள் இன்று இல்லை. ஆனால், அந்த வீரப் பரம்பரையின் சின்னமாய் ராஷ்பிகாரிபோஸ் ஜப்பானில் இருக்கிறார். அவர் இப்பொழுது ஜப்பானியக் குடிமகன். என்றாலும் இன்றும் அவர் இந்திய விடுதலைக்காகப் பாடுபடும் இயக்கத்தின் தலைவராகவே இருக்கிறார்.

ராஷ்பிகாரிபோஸ் இந்தியாவை விட்டு வெளியேறியது போலவே நானும் வெளியேறினேன். ஆங்கிலேயர்களுக்கு அஞ்சி நான் வெளியேறவில்லை. இந்தியாவில் இருந்தால் என்னால் என் இலட்சியத்திற்காக வெற்றிகரமாகச் செயல்பட முடியாது என்பதனால்தான் என் தாயகத்திலிருந்து நான் வெளியேறினேன்.

ஒரு வெளிநாட்டில் இருந்துகொண்டு புரட்சி இயக்கத்தை நடத்துவதென்பது மிகவும் சிரமமான காரியம் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, நான் ஒரு சிரமம் மிக்க பாதையில் போய்க் கொண்டிருக்கிறேன்.

ஜெர்மனிக்கு நான் சென்றதும் அங்கே இரண்டாண்டுகள் தங்கியிருந்ததும் உலகத்திற்குத் தெரியும். நான் உயிரோடு இல்லை என்றும் இறந்து விட்டேன் என்றும் தவறான தகவலை ஆங்கிலேயர்கள் பரப்பினர். ஆனால், அந்தப் பொய் நெடுநாள் நிலைக்கவில்லை. பெர்லின் வானொலி மூலம் என் குரல் உலகத்திரை எட்டியதும், நான் உயிரோடு இருக்கிறேன்; இந்திய விடுதலைக்காகப் பாடுபடுவதற்காகவே ஜெர்மனிக்கு வந்திருக்கிறேன் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர்.

ஜெர்மனியில் நான் ஒரு வேலையும் செய்யாமல் சோம்பியிருக்கவில்லை. அடுத்தபடியாக நான் செய்ய வேண்டியதைப் பற்றி தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டும், திட்டம் தீட்டிக் கொண்டும்தான் இருந்தேன். அந்தச் சிந்தனைகளுக்கெல்லாம் செயல்வடிவம் கொடுக்க வேண்டிய வேளை வந்துவிட்டது. அதற்காகத்தான் இங்கே வந்து உங்கள் முன்னாள் நிற்கிறேன். ஜெர்மனிக்கு வரும்படி என்னை யாரும் அழைக்கவில்லை. நானாகவே அங்கு சென்றேன். ஆனால், இங்கேயோ அழைப்பின் பேரில் வந்திருக்கிறேன். தென்கிழக்காசியாவில் உள்ள 30 லட்சம் இந்திய மக்களின் ஒன்றுபட்ட ஸ்தாபனமாக இருக்கும் இந்தியர்களின் சங்கம், பாங்காக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் மூலம் எனக்கு அழைப்பு அனுப்பியிருக்கிறது. அந்த அழைப்பை ஏற்றே நான் இங்கே வந்திருக்கிறேன். இதற்காக நான் மேற்கொண்ட பயணம் எப்படிப்பட்டது? ஆபத்தற்றதா?

கல்கத்தாவிலிருந்து காபூலுக்குச் சென்றேன். காபூலில் இருந்து மாஸ்கோவுக்குச் சென்றேன். மாஷ்கோவிலிருந்து பெர்லினுக்குச் சென்றேன். இந்தப் பயணத்தில் எத்தனையோ சிரமங்கள் இருந்தன. ஆபத்துகளும் இருந்தன. ஆனால், அவையெல்லாம் ஆரம்பக் கட்டத்தில்தான் இருந்தன. பிரிட்டிஷ் ஒற்றர்கள் என்னைக் கண்டுபிடித்து விடுவார்களோ என்ற கலக்கம் இருந்தது உண்மையே. ஆனால், இந்தக் கலக்கம் கல்கத்தாவில் தொடங்கி காபூல் நகரம் வரை தொடர்ந்தது, காபூலிலிருந்து பெர்லினுக்குப் புறப்படும் வரைதான் நீடித்தது, ஆப்கன் எல்லையைத் தாண்டியதும் அகன்றுவிட்டது. பிறகு ஜெர்மனியிலிருந்து ஜப்பானுக்குப் புறப்பட்டபோது ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையை வந்தடையும் வரை எங்கள் நீர்மூழ்கிக் கப்பலுக்கு வழியில் பல சோதனைகள் ஏற்பட்டன. அந்தச் சோதனைகளிலிருந்தெல்லாம் மீண்டு, ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பலில் ஏறி இந்தோனேஷ்யக் கரையில் இறங்கினேன். சுமார் 70,000 மைல்களைக் கடலுக்கடியிலேயே கழித்தேன். ஏறக்குறைய மூன்று மாதகாலம் அந்தப் பயணம் நீடித்தது. இது சுகமான பயணம் அல்ல என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

இனிமேல் என் பணி சிங்கப்பூரிலிருந்து தொடங்கும். அந்தப் பணி என்ன என்பது உங்களுக்கே தெரியும். நான் விளக்க வேண்டியதில்லை; இப்பொழுது தொடங்கும் பணி வெற்றி பெரும் என்று நம்புகிறேன். இதுவும் ஒரு நம்பிக்கைதான்! நம்பிக்கையின் அடிப்படையில்தான் மனிதன் செயல்பட வேண்டும். இந்தப் பணியில் நான் வெற்றி பெறுவேனா, தோல்வியடைவேனா என்பதை நிர்ணயிக்கும் சக்தி எனக்கில்லை. அந்தச் சக்தி கடவுளுக்குத்தான் இருக்கிறது!

நான் கடவுளை நம்புகிறேன். அவர் எனக்கும் என் நாட்டிற்கும் நல்லதைத்தான் செய்வார் என்று எதிர்பார்க்கிறேன். ஒருவேளை எனக்குத் தோல்வி ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுதும் நான் கலங்க மாட்டேன். என் பணி முடிவடையவில்லை; இன்னும் மீதமிருக்கிறது என்ற எண்ணத்துடன், பொறுப்புணர்வுடன் என் பணியை முன்னிலும் வேகமாகத் தொடருவேன். இந்தப் பணிக்குத் தென்கிழக்கு ஆசியாவில் இடம் இல்லை என்றால், நிச்சயமாய் வேறு இடம் தேடிச் செல்வேன்.

எனக்கு வேண்டியது இந்திய நாட்டின் விடுதலை. எனக்கு அதுதான் முக்கியம். இடமோ, மனிதர்களோ முக்கியமல்ல. மக்களுக்கு உழைப்புதான் என் தலையாய பணி; கடமை இதற்காகத்தான் மனிதப்பிறவி எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று நம்புகிறேன். இந்தப் பிறவி முடியும் மட்டும் இதுவே என் பணியாக இருக்கும். இதற்கு மேல் உங்களுக்கு விளக்கம் தேவைப்படாது என்று நம்புகிறேன்!"

நன்றி : சிவலை இளமதி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...