தமிழகத்தில் திராவிட கட்சிகளும் நாத்திக கும்பல்களும் திருவள்ளுவப் பெருந்தகையை தங்களது கொள்கையின் முகமாக (ICON) வைத்துக் கொள்கிறார்கள். இவர்களது சித்தாந்தத்திற்கும் திருவள்ளுவர் சித்தாந்தத்திற்கும் ஏதாவது சம்பந்தமுண்டா? அவருடைய கொள்கைகளை
இவர்களில் யாராவது ஒருவராவது பின்பற்றுகின்றார்களா? திருவள்ளுவரைப் பற்றி பேச இவர்களுக்கு ஏதாவது ஒரு தகுதியாவது உண்டா? என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. கொஞ்சம் திருக்குறளை ஆராய்வோம்…..
திருக்குறளை எழுதத் தொடங்கும் வள்ளுவப் பெருந்தகை கடவுளை வணங்கி கடவுள் வாழ்த்துடன் முதல் குறளை எழுத ஆரம்பிக்கிறார்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. மு வ உரை
அதாவது உலகத்தை தோற்றுவித்தவர் எல்லாவற்றிற்கும் மேலான ஆதி பகவன் (கடவுள்) என்கிறார் வள்ளுவர். ஆக கடவுள் என்ற எல்லாவற்றிற்கும் மேலான சக்தி இருப்பதை வள்ளுவப் பெருந்தகை ஆணித்தரமாக கூறுகிறார்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
-மு வ உரை.
அதாவது ஹிந்துமதத்தின் அடிப்படை கோட்பாடான ஒருவரது வாழ்க்கையை நிர்ணயிக்கும் தீவினை நல்வினை பற்றி பேசுகிறார் வள்ளுவர். இங்கே சங்க கால கவி பூங்குன்றன் கலியனார் சொன்ன "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற பாடலில் இரு வினைகளை குறிப்பிடுவதை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். பிறப்பிற்கு மூல ஆதாரமான அறியாமையால் ஏற்படும் இருவினைகள் இறைவனை பணிந்தவர்களிடம் சேருவதில்லை. பெரியாரின் அடியார்கள் இந்த இருவினைகளை ஏற்றுக் கொள்வதில்லை. கடவுள் வாழ்த்து பகுதியில், மேலோட்டமாக பார்த்தால் திருவள்ளுவர் கடவுளை அடைவதை (அ) எப்படி அடைவது என்பதை பற்றி தீர்க்கமாக சொல்லாதது போல தோன்றினாலும். எதை பிடிக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். 10
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது. -மு வ உரை.
மேலும் கடவுளை பற்றி ஆதி பகவன், இறைவன், தெய்வம் என்ற பொதுவான வார்த்தைகளிலே சொல்லியிருக்கிறார். நாம் கடவுளை அடைய வில்லை எனில் நம்மை பிறவி தொடரும் எனவும் தீர்க்கமாக சொல்கிறார் திருவள்ளுவர்.
இந்த குறளில் வள்ளுவ பெருந்தகை அவர்கள் பிறவி பற்றியும் இறைவன் அடி பற்றியும் மேலும் இந்த இறைவன் அடியை சேராதவர்கள் பிறவி எனும் பெருங்கடலில் அதாவது மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து வாழ்க்கை சூழலில் நீந்தி கொண்டே இருப்பார்கள் என்கிறார்.
கற்றதனால்லாய பயனென் கொல் வாலறிவான்
நற்றாள் தொழார் யெனின் 2
நாம் என்னதான் கற்றாலும் "நற்றாள்" அதாவது இறைவனின் நல்ல திருவடிகளை தொழ வில்லை எனில் என்ன பயன் என்கிறார். கடவுள் வாழ்த்தில் உள்ள பத்து குறள்களில் உள்ள மாணடி, இலானடி, தாள்சேர்ந்தார்க், தாளை போன்ற இந்த வார்த்தைகளை நன்கு கவனித்தால், ஒவ்வொரு குறளிலும் ஒவ்வொரு வார்த்தைகளில் இறைவன் திருவடியை பற்றி எவ்வளவு தீர்க்கமாக வள்ளுவப் பெருந்தகை சொல்லியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்
ஏன் வள்ளுவர் இத்தனை முறை திருவடி பற்றி சொல்கிறார் என்று பார்த்தால் இறைவன் திருவடி வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
இந்த இறைவன் திருவடியை பிடித்தால் போதும் பிறவி என்னும் பெருங்கடலை நீந்தி விடலாம் என்கிறார். இவ்வாறு கடவுள் வாழ்த்தில் இறைவன் ஒருவன் உள்ளான் என்பதையும் இரு வினைகள் நம் அறியாமையால் சேர்வதை தடுக்க இறைவன் திருவடியை நாட வேண்டும் என்றும் உறுதியாக திருவள்ளுவர் கூறியுள்ளார். இவ்வாறு கூறியுள்ளதை ஏற்காத இந்த கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் தங்களது சித்தாந்தத்தின் முகமாக திருவள்ளுவரை வைத்து இருப்பது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. ஆக வள்ளுவரை தங்களது முகமாக காட்டிக் கொள்ளும் நாத்திக திராவிடக் கும்பலின் மூலக் கொள்கையான கடவுளை கற்பிப்பவன் காட்டுமிராண்டி என்ற கொள்கை இங்கே வேரறுக்கப் படுவது மட்டுமல்ல, இவர்களது கூற்றுப்படி வள்ளுவப் பெருந்தகை காட்டுமிராண்டியும் ஆவார்.
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்: மற்று
நிலையாமை காணப் படும். – 349
பொதுவாக இந்த குறளுக்கு விளக்கம் எந்த பற்றும் இல்லாமல் இருந்தால் இறைவனை காண முடியும் (அ) மீண்டும் பிறக்காமல் இருக்க முடியும் என்று சொல்ல படுகிறது. முன்பு பார்த்த குறளில் பிறவி பெருங்கடலை நீந்த, இறைவன் அடியை சேர வேண்டும் என்று சொன்னவர் இந்த குறளில் பற்றற்று வாழ்ந்தால் பிறப்பற்ற வாழ்வினைப் பெறலாம் என்று கூறுகிறார்.
திருமந்திரத்தில் திருமூலர் பல பாடல்களில் இறைவனது திருவடி பற்றி விளக்கியுள்ளார், அதில் ஒரு பாடல்,
திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.
இறைவன் திருவடியே நமது கண்கள்!
திருமூலர் நான்கு வரிகளிலும் திருவடி திருவடி என்று திருப்பி திருப்பி சொல்கிறார்
விளக்கம்
திருவடியிலே சிவமாகிய ஒளி உள்ளது. திருவடியே ஒளியுள்ள ஆத்ம ஸ்தானத்திற்க்கு நம்மை அழைத்து செல்லுமாதலால் அதுவே சிவலோகம். திருவடியே நமக்கு கதி மோட்சம் தரும். திருவடியே கதி என்று இருக்க வேண்டும். திருவடியே தஞ்சம் என பரிபூரணமாக சரணாகதியானாலே நம் உள்ளம் தெளிவாகும்!"
எல்லாவற்றுக்கும் தேவை திருவடி! எல்லாம் பெற தேவை திருவடி! நாம் நாட வேண்டியது திருவடி! இதுதான் மெய்பொருள்!
இன்னொரு பாடல்,
மந்திர மாவதும் மாமருந் ஆவதும்
தந்திர மாவதும் தானங்கள் ஆவதும்
சுந்தர மாவதும் தூய்நெறி ஆவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே"
இந்த பாடலில்
திருவடி தான் மருந்து என்று கூட சொல்லவில்லை மாமருந்து என்று சொல்கிறார். இந்த மருந்தே நம்முடைய பிறவி பிணியை தீர்க்கும் மருந்து.
பிறவி இல்லாத நிலை பற்றி மாணிக்கவாசகர் திருவாசகத்தில்,
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சி னீங்காதான் தாள் வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடி வாழ்க
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க
ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் மோய உரைப்பனியான்
இந்த அற்புதமான பாடலில் பிறவிப் பெருங்கடலை கடப்பது பற்றி,
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
எண்ணிலா பிறப்பெடுத்து கர்மவினையால் துன்புறும் நம்மை மீண்டும் பிறவாமல் தடுத்து காப்பது இறைவன் திருவடி – கழல்களே – கண்களேயாகும்!
இந்துக்களின் வேதங்களும், புராணங்களும் அதையே வலியுறுத்துகின்றன.
இதோ, காஞ்சிப் பெரியவர் பேசுகிறார்:
மற்ற மதங்களில் இல்லாத பல அம்சங்கள் நம் மதத்தில் இருக்கின்றன. அதில் கர்மக் கொள்கை (Karmattheory) என்று ஒன்று சொல்கிறார்கள்-நம் மதத்திலிருந்தே வந்த பெளத்தம் போன்ற மதங்கள் இதை ஒப்புக் கொண்டாலும், ஏனைய மதங்களில் இந்தக் கொள்கை இல்லை.
கர்மா தியரி' என்றால் என்ன?
எந்தச் செயலுக்கும் பிரதியாக ஒரு விளைவு உண்டு. Cause and Effect என்பதாகவும், Action and Reaction என்பதாகவும் இவை தவிர்க்க முடியாத விதிகளாக இருக்கின்றன என்றும் 'ஃபிஸிக்ஸில்' சொல்கிறார்கள். பெளதிகத்தில் சொல்வதையே மனுஷ்ய வாழ்க்கைக்கும் பொருத்தி கர்மக் கொள்கையை நம் ஆன்றோர்கள் கூறுகிறார்கள். பிரபஞ்சத்தில் ஜடமான பூதங்கள் போலவே சைதன்யம் என்ற அறிவுள்ள ஜீவர்களும் அடக்கம். இவை ஒன்று சேர்ந்தது தான் லோக வாழ்வு. எனவே ஒன்றுக்கு இருக்கும் நியதி, தர்மம் இன்னொன்றுக்கும் இருக்கத்தான் வேண்டும். மனிதனின் ஒவ்வொரு கர்மாவுக்கும் விளைவாக ஒரு பலன் உருவாக்கித்தான் தீர வேண்டும் என்பதே (Karma theory) பாவ கர்மம் செய்தால் அதற்கான தண்டனையை மனுஷ்யன் அனுபவிக்க வேண்டும். புண்ணிய கர்மம் செய்தால் அதற்கான நற்பலன் அவனை வந்தடையும்' என்கிறது நம் மதம்.
இம் மாதிரிப் பாவ-புண்ணியக் கர்மங்களை மனிதன் அனுபவிக்க வேண்டும் என்பதாலேயே அவனுக்கும் பல பிறவிகள் உண்டாகின்றன என்கிறது நம் மதம். நல்லது செய்ய வேண்டும். கெட்டது செய்யக் கூடாது என்பதைச் சகல மதங்களும் சொன்னாலும், அவை நம் மதம் மாதிரி இத்தனை அழுத்தம் கொடுத்து, காரணம், விளைவு (Cause and Effect) தொடர்பைச் சொல்லவில்லை. மறு பிறப்புக் கொள்கையை (Reincornation Theory) மற்ற மதங்கள் – பாரத தேசத்தில் தோன்றாத மற்ற மதங்களில் எதுவுமே – சொல்லவில்லை. அது மட்டுமில்லை, இதற்கு மாறாகப் பல தினுசான கருத்துகளைச் சொல்கின்றன. ஆனபடியால், அந்த மதஸ்தர்கள் மனிதனுக்குக் கர்மா தீருகிறவரை பல ஜென்மங்கள் உண்டு என்ற நம் கொள்கையைப் பலமாக ஆட்சேபிப்பார்கள்.
பொதுவாக அந்நிய மதத்தவர் கருத்து என்னவென்றால், 'இந்த ஒரே ஜென்மத்தோடு மனுஷ்யனுக்குப் பிறவி தீர்ந்து விடுகிறது. இந்த ஜென்மா முடிந்த பின் அவன் உயிர் என்றைக்கோ ஒரு நாள் ஸ்வாமி கூறுகிற தீர்ப்பைக் கேட்பதற்காக ஓரிடத்தில் போயிருக்கும்.
அந்த நாளில் (Judgement Day) ஸ்வாமி இவன் இந்தப் பிறவியில் செய்த பாவ – புண்ணியங்களைக் கணக்குப் பார்த்து இவனை நித்தய ஸ்வர்க்க வாசகத்துக்கோ அல்லது நிரந்தர நரக வாசகத்திற்கோ (Eternal Damnation) அனுப்பி விடுவார்' என்பதாகும்.
என்னிடம் வந்த ஒரு வெள்ளைக்காரர் – இப்போதெல்லாம் தான் என்னிடம் நிறைய வெள்ளைக்காரர்கள் வந்தபடி இருக்கிறார்களே, அவர்களில் ஒருத்தர் – இவர் புத்தகம் கித்தகம் எழுதிப் பிரசித்தி பெற்றவர் – வேடிக்கையாகச் சொன்னார், அவருக்குப் பைபிளில் எங்கு பார்த்தாலும் கடவுள் அன்பே உருவானவர் (God is Love) என்று சொல்லிவிட்டு, இப்படிப் பட்டவர் ஒரு தப்புப் பண்ணியவனைத் துளிகூடக் கருணையில்லாமல், மீளவே வழியில்லாமல் நித்திய நரகத்துக்கு அனுப்புகிறார் என்று சொல்வது பொருத்தமில்லாமல் தோன்றியதாம். எனவே ஒரு பாதிரியாரிடம் சமாதானம் கேட்டாராம். அதற்குப் பாதிரியார் 'நிரந்தரமாகக் காலியாகவே இருக்கிறது' என்றாராம்.
ஆனால், யோசித்துப் பார்த்தால் இதை நாம் ஏற்றுக் கொள்வது சிரமமாய் இருக்கும். சுவாமி கருணை காரணமாகப் பாவியைக் கூட நரகத்துக்கு அனுப்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் அவர்கள் சித்தாந்தப்படி அவர் பாவியின் உயிரை எங்கே அனுப்ப முடியும்? அவர்கள் கொள்கைப்படி மறு ஜென்மம் இல்லையாதலால் பூலோகத்துக்கு மறுபடி அனுப்ப முடியாது. அதனால் பாவியையும் ஸ்வர்க்கத்துக்குத் தான் அனுப்ப வேண்டியதாகும். அப்படியானால் நாம் லோகத்தில் எந்தப் பாவத்தை வேண்டுமானாலும், எத்தனைப் பாவங்கள் வேண்டுமானாலும் கூசாமல் செய்து கொண்டே போகலாம். முடிவில் எப்படியும் ஸ்வாமி நம்மை ஸ்வர்க்கத்துக்கு அனுப்பி விடுவார் என்று ஆகும். அதற்கப்புறம் லோகத்தில் சகலரும் ஒழுங்கு தப்பித்தான் நடப்பார்கள்.
நம் மதப்படியும் கர்ம பலனைத் தந்து தீர்ப்புத் தருகிற பலதாதாவான ஈஸ்வரன் பரம கருணாமூர்த்தி தான். ஆனால், அதற்காக லோகம் அதர்மத்தில் மனமறிந்து விழட்டும் என்று விடுகிறவன் அல்ல அவன்.
அதனால் என்ன பண்ணுகிறான்?
நம் பாவ பலனை (புண்ணிய பலனையும் தான்) அனுபவிப்பதற்காக நம்மை, இன்னொரு ஜென்மா கொடுத்து மறுபடி இந்த உலகுக்கே அனுப்பி வைக்கிறான். ஸ்வர்க்க ஆனந்தம், நரகக் கஷ்டம் இரண்டும் இந்த உலகத்திலேயே தான் இருக்கின்றன……..
எனக்கென்று முயற்சி என்ன இருக்கிறது; எல்லாம் உன் செயல்' என்று ஜீவன் சரணாகதி செய்கிற போது ஸ்வாமியே இவனை ஒரே தூக்காகத் தூக்கி விடுகிறார் என்பது வாஸ்தவம்.
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.361
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர். மு.வ உரை
எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும் வித்து – எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து: அவாஅ என்ப – அவா என்று சொல்லுவர் நூலோர். பரிமேலழகர் உரை
பிறவித்துன்பத்திற்கு ஆசையே காரணம் என்பது ஹிந்து மதத்தின் ஆணி வேர் ஆகும். ஹிந்து மதத்தின் மிகப்பெரிய நம்பிக்கை பிறவி எடுக்காமல் இருக்க இறைவனது திருவடியை நாட வேண்டும் என்பதை மாணிக்க வாசகர், திருமூலர் போன்றோருக்கு முன்னரே தெய்வப்புலவர் திருவள்ளுவர் கடவுளைப் பற்றியும் அவருடைய திருவடியை தொழுவது ஒன்றே சால சிறந்தது என்று தீர்க்கமாக கூறியுள்ளதையும் பின்பற்றாதவர்கள் திருவள்ளுவரை எப்படி தங்களது முகமாக வைத்துக் கொள்கிறார்கள்.
பெரியாரின் வழி வந்தவர்கள் பின்பற்றும் கொள்கை திருவள்ளுவருக்கு எதிரானது என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
நன்றி ; தர்மபூபதி ஆறுமுகம்
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.