எனக்கு ஸ்வாமிஜி சித்பவானந்த மஹராஜ் அவர்கள் அவர் இயற்றிய நூலின் வாயிலாகத்தான் அறிமுகமானார்கள். பிறகு அவர்களை நேரில் சந்தித்தேன். அவர்களிடமிருந்துதான் துறவற தீக்ஷை சந்தித்தேன். அவர் கடைசியாக தீக்ஷை கொடுத்தது எனக்குதான்.
எனது பூர்வாச்ரமத் தந்தையாருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால், பதினோரு வயது முதலே பேரூர் சிவாலயத்தில் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நான் வேலை செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டுதான் பெற்றோர்களைக் காப்பாற்ற வேண்டும். மாதம் முப்பது ரூபாய் சம்பளம். கோயிலில் நாள்தோறும் மஹந்யாஸத்துடன பதினோரு முறை ஸ்ரீருத்ர ஜபம் செய்வது என் வேலை. அதனை உற்சாகமாகச் செய்து வந்தேன்.
கோவை விஜயா பதிப்பகத்தினர் கோயிலில் புத்தகக்கடை ஒன்று ஆரம்பித்தனர். அதில் சித்பவானந்த ஸ்வாமிஜி இயற்றிய நூல்கள் பல இருந்தன. முதன் முதலில் ஞானபோக விளக்கம் நூலை வாங்கிப் படித்தேன். அவர் பேரூர் கோயிலில் அந்தர்யோகம் நிகழ்த்தியதைப் பார்த்திருக்கிறேன். திருப்பராய்த்துறை பள்ளி மாணவர்களுடன் அவர் வருகை புரிந்தது எனக்கு நினைவிருக்கிறது.
சித்திரச்சாவடி ஆச்ரமத்தில் 1984 ஜூன் மாதம் 10ம் தேதி அவரைச் சந்தித்தேன். துறவற தீக்ஷை பெற எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். அவரது ஆணைப்படி, ஸ்வாமி ஷதானந்தர் அவர்கள் என்னை திருப்பராய்த்துறைக்கு அழைத்துச் சென்றார். நள்ளிரவில் தபோவனத்தை அடைந்து, அதிகாலையில் ஸ்வாமிஜி அவர்களை சந்தித்து நமஷ்கரித்தேன். மிகவும் மகிழ்ந்தார்.
ஸ்வாமிஜி அவர்களின் குரல் தெய்வீகமாக இருக்கும், அழுத்தமாக இருக்கும் மனதை தொடும். ஒரு வாரம் அங்கு இருந்தேன். பிறகு, உங்களுக்குச் சரியான இடம் திருவேடகம் என்று கூறி, அவரது காரிலேயே என்னை அழைத்துச் சென்றார். பிறகு, ஸம்பாஷன ஸம்ஸ்க்ருதத்தில் நான் தேர்ச்சி பெற, என்னைக் காசிக்கு அனுப்பினார். காசியில் இரண்டு மாதங்கள் பயிற்சி பெற்ற பிறகு, நான் திரும்பி வந்து, ஸம்ஸ்க்ருத வகுப்புகள் நடத்தி வந்தேன்.
நான் வேதாந்தம் கற்க வேண்டும் என்று எனது ஆவலை வெளியிட்டபோது, உங்களுக்கு உண்மையிலயே ஆர்வம் இருப்பின், இறைவன் அதற்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பார் என்றார். அவ்வாறே வாய்ப்பும் அமைந்தது.
மொத்தத்தில் இருபது நாட்கள்தான் சேர்ந்தாற்போல் நான் அவருடன் இருந்திருப்பேன். ஆனால் அது பல வருடங்கள் அவரோடு பழகிய நிறைவை இன்றும் தருகிறது. அவர் மஹாஸமாதி அடைந்து 29 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், இன்றும் அவர் கூடவே இருப்பது போன்ற உணர்வுதான் இருக்கிறது. திறந்த மனத்துடன் கருத்துகளை ஏற்றுக் கொள்வார், பிடிவாதம் அற்றவர். ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் ஸ்வாமி துரியானந்தரைப் போன்று நீங்கள் இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார்.
தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் சகாப்தம் ஸ்வாமி சித்பவானந்தர் அவர்கள்.
தமிழ்நாட்டில் நாத்திகம், பிராம்மணர் எதிர்ப்பு, ஸம்ஸ்க்ருத எதிர்ப்பு வளர்ந்த காலகட்டத்தில், ஸ்வாமி சித்பவானந்தர் வந்தார் என்று அவரைப் பற்றி அழகாகக் கூறினார் பரம்பூஜ்ய ஸ்ரீதயானந்த சரஸ்வதி ஸ்வாமிஜி அவர்கள். நாத்திகத்தையும், ஸம்ஸ்க்ருத எதிர்ப்பையும் தனது செயலாற்றலால் அவர் முறியடித்தது உண்மை.
பெரியார் ஸ்வாமி சித்பவானந்தருடன் கலந்து உரையாடியிருக்கிறார். 'இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க' என்ற வாக்கியத்திற்கு நிகராக ஒரு வரி தமிழ் இலக்கியத்தில் இல்லை என்று அவரிடம் கூறினார் பெரியார்.
ஸ்வாமிஜி அவர்களின் பெருமைகள் சொல்லில் அடங்காதவை. ஒழுக்கத்தோடு கூடிய உயர் கல்வி அளிக்கும் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தினார், தமிழகமெங்கும் பட்டிதொட்டிகளிலெல்லாம் அந்தர்யோகங்கள் நடத்தினார், மதமாற்றத்தைக் குறைத்தார், நிறைய துறவிகளை உருவாக்கினார், பெண்களுக்குத் துறவறம் வழங்கினார், சாரதா மடத்தை நிறுவினார், பல நூல்கள் இயற்றினார். கடுமையான உழைப்பாளி, அறமே வடிவெடுத்தவர் அவர்.
நன்றி ; விஜய பாரதம்
– ஸ்வாமி ஓங்காரனந்தா
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.