* பிரதமராக பதவியேற்று, ஓராண்டை நிறைவு செய்துள்ளீர்கள்; இந்த ஓராண்டில், உங்களின் அனுபவம் என்ன?
நான் பிரதமராக பதவியேற்ற போது, சிவில் சர்வீசஸ் அதிகாரிகள், முற்றிலும் நம்பிக்கை இழந்த நிலையில் இருந்தனர்; முடிவுகள் எடுக்கத் தயங்கினர். அரசியல் சட்ட அமைப்புக்கு அப்பாற்பட்ட நபர்களின் செயல்பாடு, அமைச்சரவைக்குள் சில அமைச்சர்களின் செயல்பாடு போன்றவற்றால், கேபினட் அமைப்பு முறையே சீர்குலைந்திருந்தது. மத்திய, மாநில அரசுகள் இடையே பிளவு மற்றும் அவநம்பிக்கை நிலவியது. இந்தச் சூழ்நிலையை மாற்றுவது, எனக்கு சிக்கலான பணியாக இருந்தது. அதைச் செய்து, நம்பிக்கையான சூழலை உருவாக்கி உள்ளேன்.
* பிரதமராக பதவியேற்றதும், 'நான் டில்லிக்கு புதிது; அதனால், டில்லியை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்' என, தெரிவித்தீர்கள். இப்போது, டில்லியை புரிந்து கொண்டீர்களா?
நான் டில்லி எனக் குறிப்பிட்டது மத்திய அரசையே. நான் பதவியேற்ற போது, டில்லியில் அதிகார மையங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அதை ஒழித்து கட்டினால்தான், அரசு இயந்திரம் சிறப்பாக செயல்படும் என, நம்பினேன். இந்த சீரமைப்பு மற்றும் சுத்தப் படுத்தும் நடவடிக்கைகள் முடிய கொஞ்சகாலமாகும். அது முடிந்து விட்டால், பரிசுத்தமான மற்றும் நேர்மையான அரசு நிர்வாகத்தின் பலன்கள் மக்களுக்கு கிடைத்துவிடும்.
* ஓராண்டு ஆட்சியில், நீங்கள் புரிந்து கொண்டது என்ன?
மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஒருகட்சி (காங்கிரஸ்), நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுக்கிறது. ஆனால், அதே கட்சி, மத்தியில் எதிர்க்கட்சியாக உள்ளது. அவர்களோ, திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது, ஏன் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
* கடந்த ஓராண்டு ஆட்சியில் செய்ததை விட, வரும் ஆண்டுகளில், மாறுபட்டவகையில், எதையாவது செய்யமுடியும் என நினைக்கிறீர்களா?
என் முன், இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, அரசு இயந்திரத்தில் உள்ள குறைபாடு களை சீரமைத்து, அரசை திறமையாகவும், நேர்மையாகவும் செயல்பட வைத்து, அதனால் ஏற்படும் பலன்கள் மக்களை சென்றடைய வைப்பது. இரண்டாவது, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, மக்களை முட்டாளாக்குவது. இந்தப் பாதை எளிதானதும் கூட. ஆனாலும், இந்த இரண்டாவது பாதையை நான் பின்பற்றவில்லை. அதற்குப்பதிலாக, அமைதியாக வகையிலும், முறையான வகையிலும், குறைபாடுகள் உடைய அரசு இயந்திரத்தை சீரமைக்க, மிகக்கடினமான பாதையை பின்பற்றி உள்ளேன். கவர்ச்சி திட்டங்களை அறிவிக்கும் வழிமுறைகளை பின்பற்றினால், அது, என் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு துரோகம்செய்வதாகும்.
* கடந்த ஓராண்டில், 'தூய்மை இந்தியா, பள்ளிகளில் கழிப் பறைகள் கட்டுதல், ஏழைகளுக்கான வங்கிக்கணக்கு, இன்சூரன்ஸ் மற்றும் ஓய்வூதிய திட்டம்' என, பல திட்டங்களை துவக்கி உள்ளீர்கள். எதிர் காலத்தில் அறிமுகம் செய்ய உள்ள திட்டங்கள் என்ன?
தூய்மை இந்தியா மற்றும் பள்ளிகள் கழிப்பறைகள் கட்டும் திட்டத்தை துவக்கியது, நாடு சுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. பெண்களின் கவுரவத்தை காக்க, குறைந்தபட்ச தேவையாக, கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும் என, விரும்பினேன். நாடுசுதந்திரம் அடைந்து, பல ஆண்டுகளாக இது செய்யப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில், பெண்கள், விவசாயிகள், நகர்ப்புற ஏழைகள் விஷயத்திலும், வேலைவாய்ப்புகளை பெருக்குவதிலும், கவனம்செலுத்துவேன். மத்திய அரசின் திட்டங்கள் எல்லாம், நகராட்சி பகுதிகளுக்கும், கிராமங்களுக்கும் எடுத்து செல்லப்படவேண்டும். அத்துடன், நகரங்கள் மற்றும் நதிகள் சுத்தமாக இருக்கவும், தங்குதடையற்ற குடிதண்ணீர் வினியோகம் மற்றும் மின்சார வினியோகம் நடைபெறவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். வீடுகள் இல்லாத, 5ந்து கோடி பேருக்கு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு என, அனைத்து பகுதிகளும், சமமான வளர்ச்சி பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* பொருளாதார சீர்திருத் தங்கள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என, நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால், முக்கியமான சீர்திருத்த நடவடிக்கை களான, நிலம் கையகப் படுத்துதல் மசோதா, சரக்குகள் மற்றும் சேவைவரி மசோதாவை நிறைவேற்றுவதில், பிரச்னைகளை, தடைகளை எதிர்கொள்கிறீர்கள். இந்தத் தடைகளால், நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுமா?
சரக்குகள் மற்றும் சேவை வரி மசோதா, நிலம் கையகப்படுத்துதல் மசோதா போன்றவை எல்லாம், நாட்டிற்கு நன்மை தரக்கூடியவை. இந்த மசோதாக்களில் உள்ள முக்கிய அம்சங்களை, அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளை மறந்து, அனைத்து கட்சியினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாட்டின் நீண்ட கால நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* தற்போது ஏராளமான துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்துள்ளீர்கள். எதிர்காலத்தில், வேறு என்னென்ன துறைகளில், அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும்?
முதலீடு செய்வதற்கு ஏற்றநாடு இந்தியா என்ற நம்பிக்கை, அன்னிய நாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் உருவாகி உள்ளது. அதனால், வேலை வாய்ப்பை அதிகளவில் உருவாக்க கூடிய, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைகளில், அன்னியநேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். தேசிய உள்கட்டமைப்பு முதலீட்டு நிதியத்தை, மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதனால், உள்கட்டமைப்பு துறைகள் அனைத்திலும், அன்னிய நேரடி முதலீடு அதிகரிக்கும்.
* ரிசர்வ் வங்கி கவர்னர் அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துக்கள், நிதி அமைச்சகத்தின் செயல்பாட்டிற்கும், ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டிற்கும், தொடர்பு இல்லாதது போன்றதோற்றத்தை ஏற்படுத்துகிறதே. அது பற்றிய உங்களின்கருத்து என்ன?
ரிசர்வ் வங்கி, ஒருதன்னாட்சி அமைப்பு. நிதி அமைச்சகமும், மத்திய அரசும், எப்போதும் ரிசர்வ்வங்கியின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்கின்றன. அதனால், சர்ச்சை என்பதே இல்லை.
* சிறுபான்மை சமூகத்தினர் மீதோ ,சிறுபான்மை நிறுவனங்களின் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டால், உங்கள் அரசையும், சங்கப்பரிவார் அமைப்புகளையும், சிலதரப்பினர் கடுமையாக விமர்சிக்கின்றனர். இது குறித்த உங்களின் கருத்து என்ன?
எந்த ஒருசமூகத்தினர் மீதான பாரபட்சமான நடவடிக்கையையும், கிரிமினல் நடவடிக்கையையும் சகித்துகொள்ள முடியாது. அந்தச்செயல் கண்டனத்திற்கு உரியதே. ஜாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லாமல், 125 கோடி இந்தியர்களுக்காகவும், அவர்களின் முன்னேற்றத் திற்காகவும் நாங்கள் பாடுபடுகிறோம்.
* கடந்த ஓராண்டில், நீங்கள் அதிக அளவில், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக, எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. அது பற்றிய உங்களின் கருத்து என்ன?
உலக நாடுகள் எல்லாம், ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில், இந்தியா மட்டும் தனிமைப் படுத்தப்படுவது, நமக்கு நல்லதல்ல. நேபாளத்திற்கு, 17 ஆண்டுகளாக, இந்திய பிரதமர் ஒருவர் செல்லாதது, நல்ல விஷயமல்ல. நாம் பெரிய நாட்டை சேர்ந்தவர்கள் என்பதற்காக, மற்ற நாடுகளை புறக்கணிக்க கூடாது. சர்வதேச மாநாடுகள் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் கூட்டங்களில் எடுக்கும் முடிவுகள், நம்மை கட்டுப் படுத்துகின்றன. அந்த மாநாடுகளில், நாம் பங்கேற்காவிட்டால், அவற்றில் எடுக்கப்படும் முடிவுகளால், நம் நாடுபாதிக்கப்படலாம். நான் பதவியேற்றது முதல், என் வெளிநாட்டுப் பயணம் குறித்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. என் வெளிநாட்டுப் பயணங்களில் தோல்வி ஏற்பட்டிருந்தால், என் தலைமையிலான அரசு தவறுசெய்திருந்தால், அந்தப் பிரச்னையை எதிர்க் கட்சிகள் பெரிதாக்கி இருக்கும். அப்படிப்பட்ட எந்தப் பிரச்னையும் இல்லாததால், என் வெளிநாட்டுப் பயண நாட்கள் மற்றும் நாடுகள் பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. நம் நாட்டின் வெளிநாட்டு கொள்கைக்கு உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக, சமீபத்திய ஆய்வுகள் எல்லாம் தெரிவிக்கின்றன.
* விவசாயிகள் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் மசோதா பிரச்னைகளை, சமீபநாட்களாக, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் எழுப்பி வருகிறார். அது பற்றிய உங்களின் கருத்து என்ன?
லோக்சபா தேர்தலில் சந்தித்த, மோசமான தோல்வியை, ஓராண்டு ஆகியும், காங்கிரஸ் கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை. காங்கிரசார் செய்த குற்றங்களுக்காக, மக்கள் அவர்களை தண்டித்துள்ளனர். அதன் பிறகும், அவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. தாங்கள் முன்னேற்றத்திற்கு தடையானவர்கள் என்பதை, தங்களின் செயல்பாடுகள் மூலம், நிரூபித்து கொண்டிருக்கின்றனர்.
* ஆட்சிக்கு வந்தால், கறுப்பு பணத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்போம் என, தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்தீர்கள். அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்ன?
என் தலைமையிலான அரசு பதவியேற்றதும், முதல் நடவடிக்கையாக, கறுப்புபணம் குறித்து ஆய்வு செய்ய, சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தது. வெளிநாடுகளில் கறுப்பு பணம் டிபாசிட் செய்யப்படுவதைத் தடுக்க, புதியசட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. மத்திய அரசு எடுத்த முயற்சியால், 2014 நவம்பரில் நடந்த, ஜி-20 மாநாட்டில், வரி ஏய்ப்பை தடுப்பது தொடர்பாகவும், நாடுகளுக்கு இடையே வரி ஏய்ப்புதொடர்பான தகவல்களை பரிமாறி கொள்ளவும் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இது, கறுப்புபண பதுக்கலை கண்டறிய உதவும். இவை எல்லாம், பலமான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள்.
* அரசு பணிகளில் மாற்றம் கொண்டு வர, எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
அரசு பணியாளர்கள் எல்லாம், பொதுமக்களின் பணியாளர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்த முற்பட்டுள்ளோம். அரசு அலுவலகங்கள் ஒழுங்காகச் செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளோம். நாம் ஒரு குழுவாக பணியாற்றினால் தான், நாடு முன்னேற்றம் அடையும். பிரதமர், மாநில முதல்வர்கள் எல்லாம், ஒரே குழுவினர். கேபினட் அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் எல்லாம், மற்றொரு குழுவினர். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மாநில அரசு ஊழியர்கள் எல்லாம் மற்ற குழுவினர். இப்படி குழுக்களாகச் செயல்பட்டால் தான், நாடு முன்னேற்றம் காணும். இந்த அடிப்படையிலேயே, முந்தைய காலங்களில் இருந்த திட்ட கமிஷன் ஒழிக்கப்பட்டு, 'நிடி ஆயோக்' ஏற்படுத்தப்பட்டு உள்ளது. நிடி ஆயோக்கில், மாநில அரசுகள் எல்லாம், முழுமையான பங்குதாரர்கள்.
* அனைத்து அதிகாரங்களும், பிரதமர் அலுவலகத்தை மையப்படுத்தியே உள்ளதாக விமர்சிக்கப்படுகிறதே? அது உண்மையா?
இந்தக் கேள்வியை முந்தைய ஆட்சியாளர்களிடம் கேட்டிருந்தால், நன்றாக இருந்திருக்கும். அப்போதுதான், அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு அதிகாரமையம், பிரதமர் அலுவலகம் மீது, ஆதிக்கம் செலுத்தியது. பிரதமரும், பிரதமர் அலுவலகமும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு, செயல்படு பவர்களே; அதற்கு அப்பாற்பட்டு செயல்படுபவர்கள் அல்ல. ஒவ்வொரு அமைச்சகங்களுக்குமான அதிகாரங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளன. அதனால், அந்தந்த அமைச்சகங்களே, தற்போது முடிவுகள் எடுக்கின்றன. எனவே, அனைத்து அதிகாரங்களும், பிரதமர் அலுவலகத்தை மையப்படுத்தியே உள்ளது என கூறப்படுவது சரியானதல்ல.
* விவசாயிகள் தற்கொலைகளைத் தடுக்க, என்ன செய்ய போகிறீர்கள்?
விவசாயிகள் தற்கொலை, பல ஆண்டுகளாக கவலைக்குரிய விஷயமாக உள்ளது. எந்தெந்த ஆட்சியில், எவ்வளவு விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் எனக் கணக்கெடுப்பது பிரச்னைக்கு தீர்வாகாது. அதனால், விவசாயிகள் தற்கொலைகளைத் தடுக்க, அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாக, ஆலோசனைகள் தெரிவிக்கும்படி, அனைத்து கட்சியினரையும் கேட்டு கொண்டுள்ளேன். விவசாயிகள் நலனுக்கான அனைத்தையும், என் அரசு, காலதாமதமின்றி செய்யும்.
* நீங்கள் தொழிலதி பர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக, எதிர்க் கட்சிகள் குற்றஞ் சாட்டுகின்றன. ஆனால், தீபக் பரேக் போன்ற தொழிலதிபர்கள், தொழில் துறையில் ஒன்றுமே நடக்கவில்லை என்கின்றனரே? அது பற்றிய உங்களின் கருத்து என்ன?
உங்களின் கேள்வியிலேயே பதில் உள்ளது. நாங்கள் பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக, எதிர்க் கட்சிகள் கூறுகின்றன. ஆனால், எங்கள் அரசு எதையும் செய்ய வில்லை என, பெரிய நிறுவனங்கள் கூறுகின்றன என்றால், என் அரசு, மக்களுக்கு ஆதரவான, நாட்டிற்கு நீண்டகாலத்திற்கு, நன்மை தரக்கூடிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்று தானே அர்த்தம்!
* நிலம் கையகப்படுத்துதல் மசோதா விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் எதிர்ப்பு நியாயமானதா?
இந்த விவகாரத்தில், அரசியல் ரீதியாக சேற்றைவாரி வீசும் செயலில் ஈடுபட நான் விரும்ப வில்லை. ஆனால், நிலக்கரி சுரங்கங்களை, தாதுவளங்கள் நிரம்பிய வனநிலங்களை, தங்களுக்கு சாதகமான கம்பெனிகளுக்கு வழங்கியவர்கள், சமூகத்தின் அனைத்து பிரிவினரின் நலனுக்காகவும், ஓய்வின்றி பணியாற்றிவரும், இந்த அரசின் செயல்பாடு பற்றி கேள்வி எழுப்ப உரிமை இல்லை.
கிட்டத்தட்ட, 120 ஆண்டுகள் பழமையான, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில், முந்தைய அரசு திருத்தம் கொண்டுவந்தது. அந்த திருத்தங்கள் பற்றி பார்லிமென்டில், 120 நிமிடங்கள்கூட விவாதிக்கப்பட வில்லை. ஆனால், அந்த மசோதா விவசாயிகளுக்கு பலன் தரும் என, பா.ஜ., நம்பியதால், அதற்கு ஆதரவுஅளித்தது. அதன் பின், அந்த மசோதாதொடர்பாக, பல மாநிலங்களில் இருந்து புகார்கள் வந்தன. அந்த புகார்களை புறக்கணிக்க, மத்திய அரசு விரும்ப வில்லை. எனவேதான், எங்கள் அரசு புதிய நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை கொண்டுவந்துள்ளது. நிலம் கையகப்படுத்துதல் மசோதா தொடர்பாக, எதிர்க் கட்சிகள் தெரிவிக்கும் யோசனைகள், நலிந்த பிரிவினருக்கு சாதக மானதாக இருக்கும் என்றால், நாட்டிற்கு நன்மைதரும் என்றால், அதை ஏற்க நாங்கள் தயாராக உள்ளோம்.
இவ்வாறு, பிரதமர் மோடி பேட்டி அளித்தார்.
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
Leave a Reply
You must be logged in to post a comment.