தமிழகத்தில் பாஜக.,வுக்கு எதிர்பார்த்தவெற்றி கிடைக்கவில்லை என்றாலும், அங்கு கட்சியின் வாக்குவங்கி சதவீதம் குறையவில்லை என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பெருமிதப்பட்டார்.
தேர்தல் முடிவுகள் குறித்து தில்லியில் பாஜக தலைமை யகத்தில் செய்தியாளர்களிடம் அமித்ஷா கூறியதாவது:
வடகிழக்கு மாநிலத்தில் பாஜக.,வுக்கு நல்லசெய்தி கிடைத்துள்ளது. அங்கு ஆட்சி அமைக்கும் தகுதியை பாஜக பெறுகிறது. கடந்த மக்களவை தேர்தலுடன் ஒப்பிடுகையில் மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக செயல் பாட்டில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. அங்கு பாஜகவின் வாக்குவங்கி சதவீதம் 4.6 சதவீதத்தில் இருந்து 10.7 ஆக அதிகரித்துள்ளது.
கேரளத்தில் வெற்றி பெற பாஜக கடுமையாக உழைத்தது. அதன்பலனாக அம்மாநிலத்திலும் பாஜக கூட்டணியின் வாக்குவங்கி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகம், புதுச்சேரி ஆகியவற்றில் எங்களுக்கு எதிர்பார்த்தவெற்றி கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால், எங்கள் கட்சியின் வாக்குவங்கி சதவீதம் குறையவில்லை என்பதை பெருமிதத்துடன் கூறமுடியும்.
அஸ்ஸாம் மாநில மக்களின் நலன்களில் கவனம்செலுத்தும் வகையில், அங்கு ஆட்சி அமைக்கவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். கேரளத்தில் நிலவி வந்த வன்முறை அரசியலை எதிர்கொண்டு இத்தேர்தலை பாஜக சந்தித்தது.
மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசின் கடந்த இரண்டு ஆண்டுகால ஆட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாக பாஜகவின் வாக்குவங்கி உள்ளது. கேரளம், புதுச்சேரி, தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கை வலுப்படுத்தி 2019-இல் வரும் மக்களவை தேர்தலில் இந்தமாநிலங்களில் மிகச்சிறந்த முறையில் செயல்படுவோம் என உறுதியளிக்கிறேன் என்றார் அமித் ஷா.
Leave a Reply
You must be logged in to post a comment.