பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பலூசிஸ் தானைச் சேர்ந்த மக்களால் பேசப்படும் பலூச்சிமொழியின் செய்தி சேவையை மேலும் வலுப்படுத்த அகில இந்திய வானொலி திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பலூசிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திவரும் அட்டூழியங்கள் தொடர்பாக பிரதமர் மோடி, தனது சுதந்திர தின உரையில் கவலை தெரிவித்திருந்தார்.
சுதந்திரதின உரையின்போது, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் குறித்து இதுவரை எந்தபிரதமரும் பேசியதில்லை. தற்போது முதல்முறையாக மோடி பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து பலோச் மக்களால் பேசப்படும் பலூச்சி மொழியின் அகில இந்திய வானொலிசெய்தி சேவையை வலுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய வானொலியின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது: பலூச்சி மொழியில் வானொலி சேவை கடந்த 1974-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளும், செய்தித்துளிகளும் ஒலிபரப்பப்பட்டு வந்தன.
பிரதமரின் உரையைத்தொடர்ந்து, பலூச்சி மொழியின் செய்திசேவையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் தற்போது அந்த மொழியில் 10 நிமிடங்களாக ஒலிபரப்பப்படும் செய்தித்துளிகளின் நேரத்தையும் அதிகரிக்கவுள்ளோம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, பலோச் குடியரசுக் கட்சி தலைவர் பிரஹம்தாக் புக்தியை, பேட்டிகாண்பதற்காக தூர்தர்ஷன் செய்தி சேனல் சுவிட்ஸர்லாந்தில் உள்ள ஜெனீவாவுக்குச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.