ஜெயலலிதாவின் உடலை எடுத்துபரிசோதிக்க வேண்டும் என்று பேசுவதை நான் விரும்பவில்லை. அதை ஏற்கவும், ஜீரணிக்கவும் முடியவில்லை என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறினார்.
சிறப்பு பேட்டி
சென்னை தினத்தந்தி தலைமை அலுவலகத்தில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தலைமைசெய்தியாளர் டி.இ.ஆர். சுகுமாருக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:–
கேள்வி:– மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, எப்போதுமே நீங்கள் தமிழகத்தின் ஒருசிறந்த நண்பராக மத்திய அரசில் இருக்கிறீர்கள் என்பார். தமிழகத்தின் நண்பர் என்றமுறையில் காவிரி மேலாண்மைவாரியம் அமைக்கவும், இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கவும் விசேஷ அக்கறை எடுத்துக்கொள்வீர்களா?
பதில்:– தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றி எதிர்கட்சியில் இருந்தபோது அவ்வப்போது பேசியிருக்கிறேன். இந்த பிரச்சினையின் தீர்வுக்காக பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரிடமும் பேசியிருக்கிறேன். இதற்கு ஒரு நிரந்தரதீர்வு கண்டாக வேண்டும்.
கச்சத்தீவில் உள்ள தேவாலயத்துக்கு செல்லும்விஷயத்தில் கூட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 100 மீனவர்கள் இங்கிருந்து செல்ல முடிவு செய்யப்பட்டது. இது சின்னவிஷயம்தான். ஆனால் நாங்கள் இதில் அக்கரை கொண்டிருக்கிறோம் என்பதற்கு அடையாளமான விஷயமாகும்.
காவிரி பிரச்சினையில் நான் எதையும் செய்யமுடியாது என்பதை வெளிப்படையாகச் சொல்ல விரும்புகிறேன். மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினையில் ஒருமத்திய மந்திரி தலையிடுவதை யாரும் எதிர்பார்க்க முடியாது. இதில் வாரியம் அமைப்பதற்கு கோர்ட்டு முடிவைத்தான் நாம் ஏற்றாகவேண்டும். அப்போதுதான் தமிழகம், கர்நாடகா மாநிலங்களில் பஸ்கள், நிறுவனங்கள் தாக்கப்படுவது போன்ற பதற்றம் முடிவுக்குவரும். இதில் நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
கேள்வி:– ஜல்லிக்கட்டு விளையாட்டை சுப்ரீம் கோர்ட்டு தடை செய்துவிட்டது. வரும் பொங்கல் தினத்துக்கு ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த வேண்டுமென்றால், சில திருத்தங்களுடன் மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட வேண்டும். அதன்படி விலங்குகள் வதைத் தடுப்புச்சட்டம் 1960–ல் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். அதன்படி, வித்தை காட்டும் விலங்குகளின் பட்டியலில் இருந்து காளை விடுவிக்கப்பட வேண்டும். மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்குமா?
பதில்:– இது மிகவும் கடினமான விஷயம். கோர்ட்டு உத்தரவிட்ட பிறகு, அதை மாற்றும் வகையில் மத்திய அரசு செயல்படும் என்று எதிர்பார்க்கமுடியாது. அதன் பின்விளைவுகள் உங்களுக்குத் தெரியும். ஆனால் அந்த விளையாட்டுக்கு மிகுந்தபாரம்பரியம் உண்டு என்பது மக்களின் உணர்வில் ஒன்றாகும். இதில் என்ன விதமான சட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதெல்லாம் ஆலோசிக்கப் படுகிறது.
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கான தடையை நீக்கவேண்டும், அதற்கு ஏதாவது செய்யுங்கள் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் என்னை கேட்பதுண்டு. கேட்பது எளிதானது, ஆனால் அதை செய்துமுடிப்பதில்தான் மிகுந்த சிரமம் இருக்கிறது. இதில் ஒருதீர்வை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
கேள்வி:– அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சைபெற்று வந்தபோது நீங்கள் அங்கு வந்தீர்கள். அவர் இறந்தபிறகு ராஜாஜி அரங்கத்தில் உடல் வைக்கப்பட்ட போது நாள் முழுவதும் அங்கு நீங்கள் இருந்தீர்கள். மெரினாவில் நடந்த இறுதிச்சடங்கிலும் நீங்கள் பங்கேற்றீர்கள். ஆனால் தமிழகத்தில் சிலர், சிலகட்சிகள், ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக சில சந்தேகங்களை எழுப்புகின்றனர். அதில் ஒருதெளிவைப் பெற விரும்புவதாக கூறுகின்றனர். இதுபற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்:– சந்தேகம் கொள்ளும் தோமாக்கள் பலர் உள்ளனர். நாங்கள் வெவ்வேறு கட்சியில் இருந்தாலும், வெவ்வேறு கருத்துகளை கொண்டிருந்தாலும் எங்களுக்கு இடையே நல்லநட்பு நிலவியது. அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றதும் விசாரித்தோம். உடல்நிலை மோசமாக உள்ளது என்பதால் உடனே அங்குவந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடம் விசாரித்தேன். அங்கேயே நீண்டநேரம் செலவழித்தேன்.
ஆஸ்பத்திரி விஷயத்தைப் பற்றி பேசவேண்டுமென்றால் முதலில் நான் டாக்டர் அல்ல. இரண்டாவது, ஜெயலலிதாவை தினமும் நான் சென்றுபார்க்கவில்லை. ஆனால் டாக்டர்களை நம்பாமல் போவதற்கு எந்தக் காரணமும் இல்லை.
ஆனால் லண்டன், சிங்கப்பூர் டாக்டர்கள் வந்து ஜெயலலிதாவை பரிசோதித்தனர். எய்ம்ஸ் டாக்டர்கள் வருகை தந்தனர். என்ன முடியுமோ அனைத்துவகை மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. எனக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியின் நிர்வாகி டாக்டர் பிரதாப் ரெட்டியைத் தெரியும். ஜெயலலிதா தேறிவருவதாக என்னிடம் அவர் கூறினார். அது மிகுந்த மகிழ்ச்சித் தகவலாக இருந்தது.
இந்த நிலையில் திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்வந்தது. அதுவும் உண்மைதான். அதை நாம் மறுக்க முடியாது. குணமாக்கக் கூடிய அனைத்து வகையான சிகிச்சைகளையும் அளித்த பிறகும் ஜெயலலிதாவுக்கு உடல்நலன் ஏற்படவில்லை. இறந்து விட்டார். இதில் டாக்டர்களை நம்பாமல் இருப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை.
தற்போது சிலர் கோர்ட்டை நாடியிருக்கின்றனர். கோர்ட்டும் பதில் கேட்டு நோட்டீசு அனுப்பியிருப்பது ஆச்சரியமாக உள்ளது. கோர்ட்டு குறித்து நான் எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை. முரண்பாடுகளில் இருந்து கோர்ட்டுகளை விலக்கி வைக்கவே விரும்புகிறேன்.
ஆனால் மீண்டும் உடலை எடுத்து அதைபரிசோதிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் பேசுவதை நான் விரும்பவில்லை. எனது மனதளவில் அதை ஏற்கவும் ஜீரணிக்கவும் முடியவில்லை.
ஏன் யாரையும் அவரைப் பார்க்கவிட வில்லை என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு நான் எந்த பதிலையும் தரமுடியாது. ஆனால் அதற்கு கூறப்பட்ட காரணம், கிருமித் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதாகும்.
கேள்வி:– ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்த திட்டத்துக்கு எதிராக ராகுல்காந்தி நடத்திய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கவில்லை. இதன் மூலம் அ.தி.மு.க. உங்களை நோக்கி நெருங்கி வருகிறார்கள் என்றும் அவர்களின் 50 எம்.பி.க்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா?
பதில்:– மத்திய அரசுக்கு பிரச்சினைகளின் அடிப்படையில் அ.தி.மு.க. ஆதரவளித்து வருகிறது. சில பிரச்சினைகளில் தேசிய நலனுக்கான நிலைப்பாட்டை அவர்கள் எடுத்திருக்கிறார்கள். அதனடிப்படையில் ஆதரவு அளித்துள்ளனர். சிலவற்றை எதிர்க்கவும் செய்தனர்.
ராகுல்காந்தி நடத்திய கூட்டத்துக்கு வேறு கட்சிகள் மட்டுமல்ல, அவர்களின் நட்புக்கு உட்பட்ட கட்சிகளும் கலந்து கொள்ளவில்லையே. அதுவே, ராகுல்காந்தி மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது.
கேள்வி:– அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுகிறது என்று பேசப்படுகிறதே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:– நிச்சயமாக இல்லை, இல்லவே இல்லை. இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டது எனக்கு மகிழ்ச்சி. ஏன் நாங்கள் தலையிட வேண்டும்? அது தேர்வு செய்யப்பட்ட அரசு. மக்கள் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். எனது முன்னிலையில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் பிரதமர் நரேந்திர மோடி, என்ன பிரச்சினை என்றாலும் எப்போது வேண்டுமானாலும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், நாங்கள் நிச்சயம் உதவி செய்வோம் என்று தெரிவித்தார்.
அ.தி.மு.க.வின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிடுவதாக எந்தக் கேள்வியும் எழவில்லை.
கேள்வி:– ஆனால் மற்ற மாநிலங்களில் இருப்பதுபோல தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சியாக பா.ஜ.க. இல்லையே? அதை பலப்படுத்துவதற்கு என்னென்ன சிறப்பு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கிறீர்கள்?
பதில்:– இங்கு பா.ஜ.க. வளர்ச்சி ஏற்படாததற்கு ஒரு காரணம் உண்டு. அது, அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள்தான். இரண்டு கட்சிகளுக்கும் அடிமட்டத் தொண்டர்கள் அதிகம் உள்ளனர். ஒரு கட்சி வேண்டாம் என்றால் அடுத்த கட்சிக்கு ஆதரவளிப்பது இங்குள்ள நிலைப்பாடாக உள்ளது. பா.ஜ.க.வுக்கு ஓட்டுபோட்டால் தி.மு.க. ஜெயித்துவிடும் என்பதுபோன்ற பயமும் மக்களிடம் உள்ளது.
ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் ஓட்டு சதவீதம் கூடியிருக்கிறது. தமிழகத்தில் ஜெயலலிதாவின் உறுதியான தலைமைத்துவம் போன்றவற்றால் தமிழகத்தில் அதிக இடங்களில் நாங்கள் வெற்றிபெற முடியவில்லை. ஆனால் இனிவரும் நாட்களில் இந்த நிலை மாறும். இங்கு எங்கள் கட்சிக்கு நல்ல தலைமை உள்ளது. கட்சியினரும் நன்றாக பணியாற்றுகின்றனர். எங்கள் அடித்தளத்தை உறுதியாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
கேள்வி:– ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்ததால் எதிர் காலத்தை நினைத்து மக்கள் மனச்சோர்வுடனும், எரிச்சலாகவும், ஏமாற்றமுடனும் இருப்பதாக முன்னாள் மத்திய நிதித் துறை மந்திரி ப.சிதம்பரம் கூறியிருக்கிறாரே?
பதில்:– எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. ஒருவேளை அவர் தனது மற்றும் தனதுகட்சியின் எதிர்காலத்தைப் பற்றி பேசியிருக்கலாம். ஆனால் இந்தியாவின் எதிர்காலம் பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் உள்ளது. உலகத்தின் எல்லா நாடுகளிலும் பொருளாதார மந்தநிலை உள்ளது. ஆனால் பிரகாசமாக இருக்கும் ஒரே இடம் இந்தியாதான். இதை நான் சொல்லவில்லை. உலகபொருளாதார அமைப்பு, உலக வங்கி, ஏ.டி.பி. கூறியிருக்கின்றன.
இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்துவரும் புகழை காங்கிரஸ் கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. அதனால் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறிவருகின்றனர். காங்கிரஸ் தெளிவற்ற நிலையில் உள்ளது. தனிப்பட்ட முறையில் கூட அவரை தாக்கி பேசுகின்றனர். கடாபி, ஹிட்லர், முசோலினி என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர்.
ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்த விஷயத்தில் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் நம்பவில்லை. மன் மோகன் சிங் மூன்றாவதாகத்தான் அழைக்கப்பட்டார். பல்வேறு உயர்பதவிகளில் இருந்து பொருளாதார ஆலோசனைகளை அளித்து வந்த அவருக்கே இந்த நிலை. முதலில் ஆனந்த் சர்மா, பிரமோத் திவாரி ஆகியோர்தான் அழைக்கப்பட்டனர்.
கேள்வி:– ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு நீங்கள் அளித்த பேட்டியில், பிரதமரின் ‘‘ஆவாஸ் யோஜனா’’ திட்டத்தின்படி 14.70 லட்சம் வீடுகளை அனுமதித்திருப்பதாக கூறியிருக்கிறீர்கள். மாநிலங்கள் அதை தேர்வு செய்து கொள்ளலாம். உத்தரபிரதேசம் ஒரு வீட்டைக்கூட பெறவில்லை. மாநிலங்கள் சாதகமாக செயல்பட்டால், விரும்பிய எண்ணிக்கையில் வீடுகளைப் பெறலாம் என்றும் கூறியிருக்கிறீர்கள். தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?
பதில்:– தமிழகத்துக்கு ஒரு லட்சத்து 69ஆயிரத்து 356 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள சேதத்துக்குப் பிறகு இதுபற்றி ஜெயலலிதாவிடம் ஏற்கனவே பேசினேன். என்னை சந்திப்பதற்காக அவர் ஒரு நாளும் இல்லாத வகையில், ஞாயிற்றுக்கிழமையன்று தலைமைச்செயலகத்துக்கு வந்தார். எவ்வளவு வீடுகள் வேண்டுமானாலும் கேளுங்கள் என்று கூறினேன். தமிழகத்துக்கு முன்னுரிமை அளிப்பேன் என்றேன். அந்த உறுதிமொழியில் நாங்கள் நிற்கிறோம்.
நன்றாக செயல்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இந்த அரசு மட்டுமல்ல தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தலைமையிலான அரசும் சிறப்பாக செயல்பட்டது. இருவரது ஆட்சி காலத்திலும் வீடுகள் கட்டப்பட்டன. வீட்டுவசதி விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாட்டில் மத்திய அரசு திருப்திகரமாக உள்ளது. கூடுதல் வீடுகள் கேட்டால் அதை மத்திய அரசு அளிக்கும்.
இவ்வாறு மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பதிலளித்தார்.
நன்றி தினத்தந்தி
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.