தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மத்திய அரசின் துணையோடு தமிழக அரசு ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடக்க அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த அவசர சட்டம் கொண்டு வருவதற்கான உந்துதலையும், ஊக்கத்தையும் கொடுத்தது நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு மோடி அவர்கள். நம் நாட்டின் நடைமுறைப்படி சாதாரண தனி மனிதரோ, அரசோ நாட்டின் சட்டத்தையும், நீதித் துறை நடவடிக்கைகளையும் மீற முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் உச்ச நீதி மன்றத்தை மீறி மத்திய அரசு சட்டம் கொண்டு வர முடியாது.
ஆனால் பல்வேறு கலாசாரமுள்ள நம் நாட்டில் ஒவ்வொரு மாநிலமும் தன் கலாசாரத்தை பாதுகாத்துக் கொள்ள சட்டம் உரிமை வழங்கி உள்ளது. அந்த அடிப்படையில், தமிழ்நாட்டின் தொன்மையான கலாசாரமான “ஜல்லிக்கட்டு” நடைபெற, 2015, 2016ல் எடுத்த தொடர்முயற்சிகள் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டாலும், தமிழர்கள் மேல் உள்ள அன்பினால், இந்த அவசர சட்டத்திற்கான முயற்சியை நமது பிரதமர் முன்னேற்பாடாகவே தொடங்கினார். நமது முதல்வர் மாண்புமிகு பன்னீர்செல்வம் அவர்கள் டெல்லி சென்று சேருவதற்கு முன்னதாகவே, மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று நமது பிரதமர் உறுதி அளித்தார். அவரின் ஆதரவும், உறுதுணையும் தான் இந்த அவசர சட்டம் வருவதற்காக பக்க பலமாய் இருந்தது. இந்த அவசர சட்டத்திற்கான வரைவு சட்டத்தை மத்திய அமைச்சகங்கள் மூலம் ஆலோசனை நடத்தி, மத்திய அமைச்சர்களை தலைநகரிலேயே இருக்க செய்து, உள்துறை, கலாசாரம், சட்டம், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அனுமதியை விரைவாக பெற்று தந்துள்ளார். இவை அனைத்தும் ஒரே நாளிலேயே நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அவசர சட்டத்திற்கு எவ்வகையிலும் பாதிப்பு வராமல் இருக்க, மத்திய தலைமை வழக்கறிஞர் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி 7 நாட்களுக்குள், நிலுவையில் இருக்கும் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கிற்கு தீர்ப்பு சொல்ல கூடாது என்ற வலியுறுத்தலின் பேரில், நீதி மன்றமும் இதற்கு இசைந்துள்ளது.
27 பக்கங்களை கொண்ட இந்த அவசர சட்டம், தமிழக மந்திரி சபையின் ஒப்புதலுக்காக இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. ஒப்புதலுக்கு பின் மேதகு கவர்னர் அவர்களின் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்படும். அதற்காக கவர்னரும் இன்று தமிழகம் வர உள்ளார்.
தமிழக மக்களுக்காக இவ்வளவு முயற்சிகளை நமது பிரதமர் எடுத்துள்ள போதிலும், இது நிரந்தரமல்ல என்று வதந்திகளை கிளப்பி விடுகிறார்கள். தமிழ் நாட்டின் வீர விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்றவற்றிக்கு தடையாக இருந்த ஒரே காரணம், காங்கிரஸும், திமுகவும் காளையை காட்சிபடுத்தக்கூடாத பட்டியலில் சேர்த்தது தான். தற்போது இந்த அவசர சட்டத்தில், காளை விலங்கின வாரியத்தின் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கான அடிப்படை இருப்பதால் இது தான் நிரந்தர தீர்வுக்கான வழி. இருந்தும் தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய அயராது உழைக்கும் நமது பிரதமர் தொடர்ந்து விமர்சிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. போராட்டத்தை திசை திருப்ப தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது என்பதை தமிழக மக்களின் கவனத்திற்கு கொண்டுவர கடமைபட்டுள்ளேன்.
2 தினங்களுக்கு முன் கூட, ரூ.150 கோடி செலவில் இந்தியாவில் முதியவர்களுக்கான மருத்தவமனை திறக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது, அதில் ஒரு மருத்துவமனை, கிண்டியில் கவர்னர் மாளிகைக்கு அருகில் வர உள்ளது என்பதை தமிழக மக்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தமிழக மக்கள் மீது பாரதப் பிரதமர் அவர்கள் கொண்டுள்ள அன்புக்கு இது ஒரு சான்று.
அதோடு, நமது பிரதமர் இன்று ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், மத்திய அரசு மாநில அரசின் முன்னேற்றத்தில் கொண்டுள்ள அக்கறையையும், அவசர சட்டத்திற்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று தனது உறுதியை வெளியிட்டுள்ளார்.
மேலும், “நான் தமிழக கலாசாரத்தின் பழமை மிக்க விளையாட்டை நினைத்து பெருமைப்படுகிறேன். தமிழர்களின் பண்பாட்டை பாதுகாக்க உறுதுணையாக இருப்பேன்’ என்று பதிவிட்டுள்ளார். இதிலிருந்து அவர் தமிழர்கள் மேல் கொண்டுள்ள பரிவும், அன்பும் வெளிப்படுகிறது.
இந்த அவசர சட்டம் நிரந்தரமானது. இத்துணை மத்திய அமைச்சர்களும், அமைச்சகங்களும் தமிழக மக்கள் நலனுக்காக நேரம் செலுத்தி, கவனம் எடுத்து உழைத்துள்ளார்கள். கவர்னர் அவர்கள் கையெழுத்திட்டவுடன் இது நடைமுறைக்கு வரும்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் நானும், மத்திய அமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களையும், இந்த விளையாடு நடக்க தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டிருக்கும் தன்னார்வ தொண்டர்களையும் டில்லிக்கு எங்களுடன் அழைத்துச் சென்று, ஒவ்வொரு மத்திய அமைச்சகத்துக்கும் அவர்களையும் அழைத்துச் சென்று, அவர்களையும் இணைத்துக்கொண்டு இந்த சட்டம் நிறைவேறி, ஜல்லிக்கட்டு நிறைவேற கடுமையாக உழைத்துள்ளோம். தமிழக பாரதிய ஜனதா கட்சி தமிழர்கள் முன்னேற்றத்திற்கும், கலாசார பாதுகாப்பிற்கும் என்றும் உறுதுணையாக இருக்கும்.
தாங்கள் ஆட்சியில் இருந்த போது நிரந்தர தீர்வை தர முடியாதவர்களெல்லாம் இன்று உண்ணாவிரதம், ரயில் போராட்டம் என்று நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் இந்த நிரந்தர சட்டத்தை ஜீரணிக்க முடியவில்லை என்பதே உண்மை. இத்தருணத்தில் தமிழக இளைஞர்களும், மாணவர்களும் போலியானவர்களை அடையாளம் கண்டு, உங்கள் மேல் அதிக அக்கறையும், அன்பும் கொண்டுள்ள நமது பிரதமர் மோடி அவர்களின் அன்புக்கு ஒத்துழைக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.
இன்று தமிழக வறட்சி நிலையை மேற்பார்வையிட மத்திய குழு வந்திருப்பதும் பிரதமர் தமிழகத்தின் மீது வைத்துள்ள அன்பையே பிரதிபலிக்கிறது.
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.