தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதை எதிர்த்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலும், தனியார் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் அறிவித்திருக்கிறார்கள். அரசு மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரம் வேலை நிறுத்தம் செய்யப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். ஆக, இவ்வேலை நிறுத்தத்தின் மூலம் பாதிக்கப்படப் போவது பொது மக்கள் தான்.
எந்தத் துறையில் ஊழல் இருந்தாலும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அதை அகற்றுவதே முதற்கண் கடமையாக செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. முன்பிருந்த அகில இந்திய மருத்துவ கவுன்சில் (MCI) எந்த அளவிற்கு ஊழல் புரையோடி, ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதன் தலைவராக இருந்த கேதன் தேசாய் அவர்களின் வீட்டில் கட்டிக் கட்டியாக கிடைத்த தங்கமும், கட்டுக் கட்டாக கிடைத்த கரன்சிகளுமே அதற்கு சான்று. இதனால் பாமர மக்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ உதவிகள், தேவைகள் கிடைக்காமல் இருந்தது. இதனை அறிந்த மத்திய அரசு, பொது மக்களுக்கு உதவும் நோக்கத்தோடு, ஊழலற்ற, பாமர மக்கள் பயன் பெறும் வகையில், யாருடைய தலையீடும் இல்லாத, தூய்மையான நிர்வாகம் கொடுக்கும் நோக்கத்தில் தான் “தேசிய மருத்துவ ஆணையம்” (National Medical Commission) என்ற அமைப்பை உருவாக்கியது. இது ஏழை, எளியவர்களுக்கு அடிப்படை மருத்துவ உதவி கிடைக்கச் செய்யும் திட்டம். இதற்கு முந்தைய தேசிய மருத்துவ கவுன்சில், மருத்துவக் கல்லூரிகளை தனது கோரப் பிடியில் வைத்து, ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. வசதியே இல்லாத மருத்துவக் கல்லூரிகளுக்கு மறைமுக உதவி செய்து கொண்டிருந்தது. இந்நிலை மாறி, தரமான மருத்துவ உதவிகள் கிராமத்தை சென்றடைய செய்வதே தேசிய ஆணையத்தின் நோக்கமாகும்.
இந்தியாவில் பதிவு செய்திருக்கும் மருத்துவர்கள் 10 லட்சம் பேர். முறையான சிகிச்சையில் 8 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளார்கள். உலக சுகாதார அமைப்பின் படி, 1000 பேருக்கு ஒரு மருத்துவராவது இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் 1000 பேருக்கு 0.6 சதவீத மருத்துவர்களே உள்ளனர். பயிற்சி முடித்து கிராமத்திற்கு சென்று பணி புரியச் சொன்னாலும் அதற்கும் எதிர்ப்பு கிளம்புகிறது. இதனால் கிராம மக்கள் ஐந்தாவது, பத்தாவது படித்திராத போலி மருத்துவர்களிடம் தங்கள் வாழ்க்கையை, உயிரை பணையம் வைக்கும் அவல நிலை உள்ளது.
தரமான மருத்துவர்கள் எண்ணிக்கையை உயர்த்தி, போலி மருத்துவர்களை ஒழித்து, பாமர மக்களுக்கு தரமான மருத்துவ வசதி கிடைக்கச் செய்வதே இந்த புதிய ஆணையத்தின் நோக்கமாகும். விஞ்ஞான அடைப்படையிலான மாற்று மருத்துவங்களான ஆயுர்வேதம், சித்தா, யுனானி போன்ற மருத்துவப் படிப்பை பயிலும் மருத்துவர்கள், அதோடு ஆங்கில மருத்துவ படிப்பின் அடிப்படை பகுதிகளையும் சேர்த்துப் படித்து, குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் அவர்களும் ஆங்கில மருத்துவர்களைப் போல் சிகிச்சை அளிக்கலாம் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும், வருடந்தோறும் 40000க்கும் மேற்பட்ட மக்கள் பாம்புக் கடியால் உரிய சிகிச்சை இன்றி இறக்கிறார்கள். இது போன்ற உதவிகளை, மக்களை காப்பாற்றும் பணியை மேற்சொன்ன மருத்துவர்கள் செய்ய முடியும். அது கிராம மக்களுக்கும், பாமரர்களுக்கும் மிகுந்த உதவியாக இருக்கும். இது எப்படி ஆங்கில மருத்துவர்களின் பணியை பாதிக்கும் ? மக்களே சிந்தியுங்கள் !.
கிராமங்களில் மருத்துவர்கள் இல்லாத சூழ்நிலை , உதவி செய்பவர்களும் போலிகள். தரமற்ற மருத்துவ உதவி, உயிர் பலி தான் ஏழைக்கு பரிசு. மாற்று மருத்துவம் படிக்கும் மருத்துவர்கள், அதோடு ஆங்கில மருத்துவத்தின் அடிப்படையையும் தெரிந்து கொண்டால் கிராம மக்களுக்கு தரமான, மலிவான மருத்துவ வசதி கிடைக்கும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஆணையம் தவறா ?
ஆங்கில மருத்துவம் படித்த மருத்துவர்கள் இந்த முறையில் ஏதேனும் தவறு இருந்தால் அதை அரசிடம் தெரிவிக்கலாம். அந்நிய நாடுகளில், செவிலியர்களே சிற்சில அடிப்படை மருத்துவ உதவிகள் மக்களுக்கு அளிக்கலாம் என்ற நிலை உள்ளது. மாற்று மருத்துவம் படிக்கும் மருத்துவர்கள் இதை மக்களுக்கு செய்யலாம் என்பது தவறா ? பாமர மக்கள் போலி மருத்துவர்களிடம் உயிர் விட வேண்டுமா ?.
இதற்கு முந்தைய தேசிய மருத்துவ கவுன்சில், ஆரம்ப மருத்துவக் கல்வி, மருத்துவ மேற்படிப்பு, மருத்துவக் கல்லூரி நிர்வாகம், மருத்துவ துறையிலான பிரச்சனைகள் என அனைத்தையும் தன்னிடமே வைத்திருந்தது. நிர்வாக சீர்கேடு, மருத்துவக் கல்வியில் ஊழல், தரமற்ற மருத்துவக் கல்லூரிகள் , அடிப்படை வசதிகளே இல்லாத கல்லூரிகளுக்கு அங்கீகாரம் என ஒரு சீர் கேட்டை செய்து வந்தது. தனியார் மருத்துவக் கல்லூரி ஆய்வு என்ற பெயரில் எப்படி எல்லாம் ஊழல் நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது, மருத்துவக் கல்லூரிகள் தங்கள் வசதிக்கேற்ப, நோயாளிகளின் தேவைக்கேற்ப மருத்துவ படிப்பிற்கான சீட்டுகளை அதிகரித்துக் கொள்ளலாம். இது நியாயமாக இருப்பின் இந்த தேசிய ஆணையம் அதை அங்கீகாரம் செய்யும். தவறு இருந்தால் அபராதம் விதிக்கப்படும். குறிப்பிட்ட கால அவகாசத்தில் தொடர் கண்காணிப்பு நடந்து கொண்டிருக்கும். ஆகவே உண்மையான நோக்கில், நேர்மையை கடைபிடித்தால் மருத்துவ கல்லூரிகளும், மருத்துவ மனைகளும் மக்களுக்கு தரமான, மலிவான மருத்துவ வசதியை அளிக்க முடியும். ஆரோக்கியமான இந்த சூழலை உருவாக்கும் இந்த ஆணையம் தவறா ?.
இந்த ஆணையத்தின் மூலம் புதிய மருத்துவ படிப்புகள் , புதிய மருத்துவ கல்லூரிகள், அதிக மருத்துவர்கள் உருவாக்கப்படும். மருத்துவமனைகளில் அதிக அளவில் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும். தரமான, விஞ்ஞான அடிப்படையிலான மருத்துவம் கிராம மக்களுக்கு கிடைக்கும்.
இந்த ஆணையத்தின் நிர்வாக குழுவில் மருத்துவர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசிடம் எடுத்துச் சொல்லப்படும். ஊழலின் ஊற்றாக இருந்த முந்தைய மருத்துவக் கவுன்சிலை குற்றம் சாட்டிய அரசியல் கட்சிகள், இன்று சுயநலத்திற்காக தேசிய ஆணையத்தை எதிர்ப்பது மக்களுக்கு விரோதமான செயல்.
மலிவு விலை மருந்தகத்தின் தொடர்ச்சியாக, நிறைய மருத்துகளின் விலையும் சமீபத்தில் குறைக்கப்பட்டுள்ளது. கிராம மக்களுக்கு தரமான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதே இந்த புதிய ஆணையத்தின் நோக்கம். பணக்கார நோய்கள் பாமரனை தாக்கும் போது , உதவிக் கரம் நமது பாரதப் பிரதமரின் இந்த திட்டமே. ஆகவே சமூக ஆர்வலர்களும், பொது அமைப்புகளும் மக்களிடையே இந்த ஆணையம் குறித்த சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டும்.
மருத்துவத் துறையில் ஊழல் ஒழிக்கப்பட்டு, தரமான, நியாயமான மருத்துவ வசதி கிராம மக்களுக்கு கிடைக்கச் செய்வதே ஏழை எளியவர்களுக்கு நாம் ஆற்றும் மிக பெரிய பங்காகும். இந்த புதிய ஆணையம் இத்திசையில் பயணிக்க உதவும் ஒரு மிகப் பெரிய மைல் கல்லாகும்.
Dr. தமிழிசை சௌந்தரராஜன்
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.