மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்துசெய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது.
ஆனால், மாநிலங்களவையில் இந்தமசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது.
கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதற்காக எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு, மத்திய அமைச் சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது.
ஆனாலும், கட்சிகளிடையே ஒரு மித்த கருத்தொற்றுமை ஏற்படாததால் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பியபின் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்ததால், முத்தலாக் மசோதா மீண்டும் கிடப்பில் உள்ளது. எனவே, அவசர சட்டம் மூலம் முத்தலாக் நடைமுறைக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது.
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அவசரசட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை அடுத்து அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.