இந்நிலையில், இறுதிக்கட்ட பிரச்சாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த பாஜக முடிவுசெய்தது. மொத்தம் 3 இடங்களில் பிரச்சாரம்செய்ய அவர் திட்டமிட்டு இருந்தார்.
ஆனால், ஜாதவ்பூர் உள்ளிட்ட இடங்களில் அமித்ஷா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்கவங்க அரசு அனுமதி மறுத்தது. ஏற்கெனவே பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்க இருந்த கூட்டங்களுக்கும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி மேற்குவங்க அரசு அனுமதி மறுத்தது. இதனால் பாஜகவினர் கொதிப்படைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஜாதவ்பூர் பொதுக்கூட்டம் நாளைய தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதேசமயம் மேற்குவங்க மாநிலம், ஜாய்நகர் மக்களவைத் தொகுதி பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
”ஜெய் ஸ்ரீராம் என்று யாராவது கோஷமிட்டால் மம்தா பானர்ஜிக்கு கோபம் ஏற்படுகிறது. ஜெய்ஸ்ரீராம் என்று நான் இன்று கோஷமிடுகிறேன். தைரியமிருந்தால் என்னை நீங்கள் கைதுசெய்யுங்கள். நாளை நான் கொல்கத்தாவில் இருப்பேன்.
மம்தா பானர்ஜி பயத்தால் பீடிக்கப்பட்டுள்ளார். இதனால்தான் நான் பிரச்சாரம் செய்வதைத் தடுக்க நினைக்கிறார். என்னை வேண்டுமானால் நீங்கள் தடுத்து நிறுத்தலாம். ஆனால் மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றிபெறுவதை உங்களால் தடுக்க முடியாது”.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.