தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி நீரை காவிரியில் இருந்து கர்நாடகம் திறந்துவிடவேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செவ்வாய்க் கிழமை உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரியில் கர்நாடக அரசு மொத்தம் 177.25 டிஎம்சி நீரை விடுவிக்கவேண்டும். அதன்படி, ஜூன் மாதத் தவணையாக 9.19 டிஎம்சி நீர் வழங்கப்பட வேண்டும். இந்நிலையில், கடந்த வியாழக் கிழமை தில்லியில் நடைபெற்ற காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுக்கூட்டத்தில் ஜூன் மாதத்திற்கான நீரை கர்நாடக அரசு அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், தில்லியில் உள்ள மத்திய நீர் வள ஆணையத்தின் அலுவலகத்தில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் மூன்றாவது கூட்டம் அதன் தலைவர் எஸ். மசூத் ஹுசேன் தலைமையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.
கடந்த ஆண்டு ஜூலை 2, டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. செவ்வாய்க்கிழமை சுமார் மூன்றரை மணிநேரம் நடைபெற்ற மூன்றாவது கூட்டத்தில், ஆணையத்தில் இடம் பெற்றுள்ள காவிரி நதி நீர் பயன்பெறும் மாநிலங்களான தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப் படுவதை விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்திருப்பதால், தமிழகத்துக்கு ஜூன் மாதத்திற்குரிய 9.19 டிஎம்சி நீரையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணைப்படி மாதம் தோறும் தமிழகத்திற்கான நீரையும் கர்நாடக அரசு விடுவிக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக பிப்ரவரி முதல் மே வரையில் ஒவ்வொரு மாதமும் 2.5 டிஎம்சி வீதம் தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு முழுமையாக அளிக்க வில்லை. இதனால், ஏற்பட்டுள்ள குறைபாடு நீரான 2 டிஎம்சியை இம்மாத இறுதிக்குள் உடனடியாக திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டு கொள்ளப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு தமிழக பொதுப் பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்கே. பிரபாகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குறுவை சாகுபடிக்கான நீரை மக்கள் எதிர் பார்த்துக் காத்திருக்கும் நிலையில், ஜூன் மாதத்திற்கான 9.19 டிஎம்சி நீரை எவ்வித குறைவுமின்றி விடுவிக்க தமிழகத்தின்தரப்பில் கோரப்பட்டது. ஆணையம் அந்த நீரை தருவதற்கு உறுதியளித்துள்ளது என்றார்.
கர்நாடக அரசின் சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் அந்த மாநில அணைகளில் உள்ள நீரின் அளவு, காவிரியில் திறந்து விடப்பட்ட நீர் விவரங்கள் குறித்தும், பருவமழைச் சூழல், நீரியல் சூழல் குறித்து எடுத்துக் கூறினர்.
இக்கூட்டத்திற்குப் பிறகு ஆணைய தலைவர் எஸ். மசூத் ஹுசேன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆணையக் கூட்டம் சுமுகமாக நடைபெற்றது. கூட்டத்தில், முக்கியமாக பிலி குண்டுவில் இருந்து தமிழகத்துக்கு விடுவிக்க படும் காவிரி நீர் தொடர்பான விவாதிக்கப் பட்டது. ஜூன் மாதத்துக்கு வரையறுக்கப்பட்ட ஒதுக்கீடான 9.19 டிஎம்சி நீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு பிலிகுண்டுவில் இருந்து விடுவிக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்ய பட்டது. மேலும், வரையறுக்கப்பட்ட அளவின்படி தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு ஜூனில் விடுவிக்கப்பட வேண்டிய நீரை ஏற்கெனவே உள்ளதுபோல வழங்குவது தொடரவேண்டும் எனவும் ஆணையம் முடிவு செய்துள்ளது.
கர்நாடக அரசு 9.19 டிஎம்சி நீரை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கும். வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, பருவமழை வழக்கமாக இருக்கும் என நம்புகிறோம். இதன் நிலைமை குறித்து அடுத்த கூட்டத்தில் மீளாய்வு செய்யப்படும். இதுதொடர்பாக கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக தரப்பும் முடிவை ஏற்றுக் கொண்டுள்ளது என்றார் அவர்.
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |