பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்று கிழமையில் நாட்டுமக்களுக்கு வானொலி மூலமாக உரையாற்றி வருகிறார். இந்தநிகழ்ச்சிக்கு ‘மன் கி பாத்’ பெயரிடப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தின் இறுதி ஞாயிறான இன்று பிரதமர் இந்நிகழ்ச்சியில் பேசினார். அப்போது தமிழ்புலவரான மூதாட்டி அவ்வையாரின் பாடல் வரிகளை பிரதமர் மோடி மேற்கோள் காட்டினார்.

 

நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, ‘மகத்துவம் மிகுந்த பெண்புலவரான அவ்வையார் ‘கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு’ என்றார். இந்தியாவின் பன்முகத்தன்மை விஷயத்திலும் இது தான் உண்மை. ஆனால் அது பற்றி நாம் அறிந்திருப்பது மிகக்குறைவு. நமது பல்லுயிர்த்தன்மையும் மனித சமுதாயம் முழுவதற்குமான ஒரு அற்புதமான பொக்கிஷம். இதை நாம்பாதுகாத்து பராமரிப்பதோடு  ஆய்வுசெய்யவும் வேண்டும்’ என்றார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து நமது இளைஞர்கள் ஆர்வத்துடன் பேசி வருகிறார்கள். சந்திராயன்-2 விண்கலம் ஏவப்பட்ட நிகழ்ச்சியை பார்க்க இஸ்ரோ சென்ற போது குழந்தைகளின் உற்சாகத்தை காண முடிந்தது.

இளைஞர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ராக்கெட் ஏவப்படுவதை ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து நீங்கள் நேரடியாக பார்க்கலாம். இதற்காக 10 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது

 

தனது பேச்சில் பல்வேறு நபர்களை குறிப்பிட்ட மோடி, கேரளாவில் 105 வயதில் தனது படிப்பை மீண்டும் துவங்கியதுடன் 4-ம் நிலை தேர்வில் 70 சதவீத மதிப் பெண்களை பெற்ற பகிரீதி அம்மாள் என்கிற மூதாட்டியை பாராட்டினார். அனைவருக்கும் முன் மாதிரியாக விளங்கும் அவருக்கு தனது மரியாதையை செலுத்துவதாக மோடி பேசினார். தென் அமெரிக்காவின் அன்டெஸ் மலைகளின் 7000 மீட்டர் உயரத்தில் ஏறி மூவர்ண கொடியை பறக்க விட்ட 12 வயதுச் சிறுமி காம்யா கார்த்திகேயனையும் பிரதமர் பாராட்டினார்.

 

பிரதமர் மோடி தனதுபேச்சில் தமிழ் புலவரான அவ்வையாரை மேற்கோள் காட்டியிருப்பது தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன் கடந்த நவம்பரில் மகாகவி பாரதியாரை குறிப்பிட்டார். அவ்வப்போது பொதுநிகழ்ச்சிகளில் பிரதமர் திருக்குறளையும் மேற்கோள்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.