ஆர்.எஸ்.எஸ். என்று பலராலும் அழைக்கப்படுகி்ற ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் 1925ஆம் வருடம் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்களால் நாகபுரியில் துவக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். துவங்கப்பட்டு 95 வருடங்கள் ஆகிவிட்டது. விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில இளைஞர்களைக் கொண்டு துவங்கப்பட்ட இவ்வியக்கம் இன்று மிக பிரம்மாண்டமான பேரியக்கமாக உருவெடுத்து நாடெங்கும் பரவி விரிந்து தழைத்து வருகிறது.
டாக்டர் ஹெட்கேவார் (1925-40) காலத்தில் பிளவுபடாத பாரதத்தின் அனைத்து மாகாணங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். சென்றடைந்தது. அவரையடுத்து வந்த ஸ்ரீ குருஜி கோல்வால்கர் காலத்தில் (1940-73) பல இன்னல்களையும், இடையூறுகளையம், அரசியல் சதிகளையும் முறியடித்து ஆர்.எஸ்.எஸ்.கிளைகள் (ஷாக) சுதந்திர பாரதத்தில் மாவட்ட அளவிற்கு பரவி வளரத் துவங்கியது. தற்போது நாடெங்கிலு முள்ள பஞ்சாயத்து மட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். கிளைகளின், தொண்டர்களின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உடல், மனம், நேரம் & பொருள் என அனைத்தையும் கொடுத்து வாழ்நாள் முழுவதும் இயக்கத் திற்காகவே வாழ்ந்த, இயக்கமாகவே வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற பல ஆயிரக்கணக் கான தொண்டர்கள், பிரச்சாரகர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும்தான் இயக்கத்தின் இத்தகைய வளர்ச்சிக்குக் காரணமாகும். ஆர்.எஸ்.எஸ்.ஸின் விரிவாகத்திற்கு பிரச்சாரகர்கள் ஆற்றியுள்ள பங்கினை வார்தைகளால் விலக்கிட இயலாது.
ஆர்.எஸ்.எஸ்.பிரச்சாரக் என்றால் ஏதோ மாத சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள் என்று கருத வேண்டாம். இந்துக்களை ஒருங்கிணைக்கும் வேலை. இயக்க வேலைக்காக தனது வீட்டைத்துறந்து இயக்கம் சொல்கின்ற இடத்திற்கு அல்லது வெளிமாநிலத்திற்கோ சென்று வேலை செய்வது. இம்மாதிரி முதல் பிரச்சாரக்காக 1926 ஆம் வருடம் வந்தவர்தான் பாபாசாஹேப் ஆப்டே. 1971 செப்டம்பர் 2 அவரது இறுதிக்காலம் வரை 45 வருடகாலம் ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சி அதன் விரிவாக்கத் திற்காகவே தனது வாழ்வை அற்பணித்தவர் அவர். பாபாசாஹேப் ஆப்டே அவர்கள் துவங்கிய பிரச்சாரக் என்கிற இந்த கங்கோத்ரி இன்றும் பாய்ந்துகொண்டிருக்கிறது. 1926 துவங்கி இன்றுவரை பலர் பிரச்சாரகர்களாக வந்துகொண்டிருக்கின்றனர். மஹாராஷ்டிராவிலிருந்து தாதா ராவ் பரமார்த்த எனும் இளைஞர் 1939 ஆம் வருடம் நம் தமிழகத்திற்கு (சென்னைக்கு) ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக வந்து வேலையைத் துவக்கினார். ஆரம்ப காலத்தில் நாடெங்கிலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பணிகளை துவக்கிட மஹாராஷ்டிராவிலிருந்து குறிப்பாக நாகபுரியிலிருந்து நல்ல படித்த இளைஞர்கள் பலர் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றனர். அந்தப் பாரம்பரியமும் இன்றும் தொடர்கிறது.
சிவராம் கேசவ ஆப்டே 1903 ஏப்ரல் 3 அன்று விதர்பா மாகாணத்தில் யவத்மாலில் பிறந்தவர். சிறுவயது முதல் கதைப் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். படித்த புத்தகங்களில் எதைக்கேட்டாலும் சரியான பதில் சொல்வதிலும் வல்லவர். ஈசாப் நீதிக்கதைகள் அவருக்கு தலைகீழ் பாடம். வகுப்பில் அதிலிருந்து ஏதாவது கதை களை எடுத்து சொல்வதில் ஆசிரியர்களிடையே நல்ல பெயர் கிடைத்தது. இவர் கரஞ்சியா என்கிற ஊரில் படித்து வந்தார். அவ்வூரின் வழியே லோகமான்ய பால கங்காதர திலகர் ரயிலில் பயணம் செய்கின்றார் என்றும், அந்த ரயில் கரஞ்சியா ஸ்டேஷனில் நிற்கின்ற இடைவெளி நேரத்தில் திலகர் உரை நிகழ்த்தப் போகின்ற செய்தியையும் அறிந்தார். திலகரின் உரையைக் கேட்டிட வேண்டும் என்கிற ஆவல் 12 வயது சிறுவனான ஆப்டேவிற்கு எழுந்தது. ரயில் நிலையம் சென்று திலகரைக் காண வேண்டும் அவரது பேச்சினைக் கேட்கவேண்டும் என்று ஆசைப்பட்ட ஆப்டேவின் எண்ணம் நிறைவேறாமல் போயிற்று. காரணம் அவரது பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளியின் கதவுகளை இழுத்து மூடி பூட்டுப்போட்டு மாணவர்கள் யாரும் இந்நிகழ்ச்சிக்கு போகாதவாறு தடுத்துவிட்டார். இதனால் மிகுந்த கோபம் கொண்டு தன்னைத்தானே இகழ்ந்து கொண்டார். 1919 வருடம் திடீரென இவரது தந்தை இறந்துவிட குடும்ப சுமை இவர் மீது விழுந்தது. மிகுந்த கஷ்டங்களுக்கிடையே இவரது தாய் இவரது படிப்பை தொடரச் செய்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்ற ஆப்டேவிற்கு ஒரு பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. மாணவர்களால் மிகவும் நேசிக்கப்படும் ஆசிரியராக விளங்கினார். தேசபக்தர்கள் பற்றி அடிக்கடி மாணவர்களுக்கு எடுத்துரைப்பார். 1924இல் பால கங்காதர திலகரின் நினைவுநாளை முன்னிட்டு பள்ளியில் ஒரு கலாச்சார நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார். இந்த செய்தி அதிகாரத்தில் இருந்த ஆங்கிலேயர்களுக்கு தெரியவர அவர்கள் தலைமையாசிரியரைக் கண்டிக்க அவர் அதை ஆப்டே மீது மாற்றினார். இதை சகித்துக்கொள்ள முடியாத ஆப்டே தனது வேலையை ராஜினாமா செய்தார். வீட்டில் இவரை நம்பி அம்மாவும் உடன்பிறந்தவர் களும் இருக்கின்றனர் என்பதை உணர்ந்த ஆப்டே யவத்மாலிளிருந்து நாகபுரிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு ‘உதயம்’ என்கிற பத்திரிக்கையில் வேலைக்கு சேர்ந்தார். நாகபுரியிலும் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் இவரால் ஈர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தேசபக்தர்களைப் பற்றி உணர்ச்சியூட்டும் சம்பவங்களை எடுத்துரைப் பார். அவர்களைக் கொண்டு ‘வித்யார்த்தி மண்டல்’ என்கிற அமைப்பை உருவாக்கி மாணவர்களிடையே புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த தேசபக்தர்களைப் பற்றி தொடர்ந்து பேசிவந்தார். அக்காலக்கட்டத்தில்தான் (1925) டாக்டர் ஹெட்கேவார் அவர்களும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை துவக்கியிருந்தார். டாக்டர் ஹெட்கேவார் அவர்களை ‘வித்யார்த்தி மண்டல்’ நிகழ்ச்சியொன்றில் உரை நிகழ்த்துவதற்காக அழைத்திருந்தனர். அந்த உரை ஆப்டேவை டாக்டர் ஹெட்கேவாரின் பக்கம் தள்ளியது. இருவரும் அடிக்கடி சந்திக்கத் துவங்கினர். அந்நேரத்தில் டாக்டர் ஹெட்கேவாருக்கு வயது 36 ஆப்டேக்கு வயது 23. தனது ‘வித்யார்த்தி மண்டல்’ அமைப்பை ஆர்.எஸ்.எஸ். உடன் இணைத்தார். டாக்டர் ஹெட்கேவாருடன் ஆர்.எஸ்.எஸ். லட்சியம், குறிக்கோள், செயல்முறைகள் பற்றி நீண்ட விவாதங்கள் செய்தார். ஹிந்து ராஷ்டிரம், ஹிந்து பண்பாடு, ஹிந்து நாகரிகம், ஹிந்து சமுதாயத்தின் பலம் & பலவீனங்கள், ஹிந்து சமுதாயம் கண்ட வெற்றிகள் & தோல்விகள், ஹிந்து சமுதாயத்தின் முன் உள்ள சவால்கள் மற்றும் ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைப்பதின் தேவை போன்றவற்றைப் பற்றியெல்லாம் விவாதம் செய்தார். அதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தையே தனது வீடாகக் கருதி அங்கேயே தங்கத் துவங்கினார். ஆர்.எஸ்.எஸ். வேலையே தனது வேலையாகக் கொண்டார். இயக்கத்தின் முதல் முழுநேரத் தொண்டராக (பிரச்சாரக்) தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டார்.
மகாராஷ்டிராவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சிக்கும் அதைத் தொடர்ந்து நாட்டின் பிற பகுதிகளிலும் சங்க வளர்ச்சிக்காக திட்டமிட்டு வேலை செய்து சுற்றுப்பயணம் செய்து வந்தார். சங்கத்தில் முக்கிய பொறுப்புகளை ஏற்று செயல்பட்டுள்ளார்.
மெக்காலே புத்திரர்கள், மார்க்ஸீயவாதிகள் மற்றும் கிறித்துவ மிஷினரிகளால் மூடிமறைக்கப்பட்ட பாரத நாட்டின் உண்மையான சரித்திரத்தை வெளிக்கொண்டு வருவதற்கு தகுந்த நபர்களைக் கண்டறிவதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பலருடன் பேசி அவர்களை அந்தப்பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.
சாதாரண மனிதனும் ஸம்ஸ்க்ருதம் தெரிந்துகொள்ள வேண்டும், அதில் பேசிட வேண்டும் என்று கருதியவர். அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் பிற்காலத்தில் ஸம்ஸ்க்ருத பாரதி என்ற அமைப்பு உருவாகிட வழிவகுத்தது. பாபா சாஹேப் ஆப்டேவைப் போன்று எண்ணற்றோர் ஆர்.எஸ்.எஸ். கொள்கை, செயல் முறைகளால் ஈர்க்கப்பட்டு ‘சங்க ப்ரச்சாரகர்களாக’ தங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்துள்ளனர். தற்போது கூட ஆண்டுதோறும் ஏராளமான இளைஞர்கள் ஹிந்து ஒற்றுமைப் பணி செய்வதற்காக ‘சங்க ப்ரசாரகர்களாக’ பணியாற்றிட வந்துகொண்டு இருக்கின்றனர். சிலர் ஓரிரு ஆண்டுகள் இருப்பர், மேலும் சிலர் 5 லிருந்து 10 ஆண்டுகள் வேலை செய்வார்கள். சிலர் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் இந்த வேலையை செய்திட உறுதியேற்று வேலைசெய்து வருகின்றனர். இதற்கெல்லாம்.
வித்திட்டவர் பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார். அவரது அடியொற்றி முதல் அடியை எடுத்துவைத்து இறுதிவரை அயராது பயணம் செய்தவர் பாபா சாஹேப் ஆப்டே. இன்று அவருடைய நினைவு தினம்.
பாபாசாஹேப் ஆப்டேவின் அடியொற்றி நாம் பயணித்திடுவோம்.
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |