குஜராத் ஏதோ ஒரு துறையில் மட்டும் பலமாக முன்னேறி யுள்ளது என்று குறிப்பிட்டு கூற முடியாது. அது முன்னேறாத துறைகளே இல்லை என்று தான் கூற வேண்டும். கல்வி, விவசாயம்,குடிநீர், தொழில் முன்னேற்றம், நகர்ப்புற முன்னேற்றம், கிராமப்புற முன்னேற்றம், ஏற்றுமதி, விஞ்ஞான வளர்ச்சி என்று எந்தக் கோணத்தில் பார்த்தாலும், குஜராத் மாநிலத்தைக் கொஞ்சம் அண்ணாந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.
பல துறைகளில் குஜராத் 'சர்ப்ளஸ்' உள்ள மாநிலமாக இருக்கிறது. ஆனால், குஜராத் அதோடு திருப்திப்பட்டுக் கொள்ளவில்லை. மேலும் மேலும் சர்ப்ளஸ் கிட்ட கவனம் செலுத்துகிறது. "இதற்குக் காரணம், குஜராத் தன்னைப் பற்றி மட்டும் சிந்திப்பதில்லை. எப்போதும் இந்தியாவைப் பற்றியும் சேர்த்தே சிந்திக்கிறது" என்றார் அங்குள்ள ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. 'இந்தியாவின் என்ஜின்' என்ற ஸ்லோகனோடு, இந்தியாவின் தேவைகளுக்குக் கணிசமான பங்களிப்பை வழங்குவதில் குஜராத் ஆர்வமாக இருந்து வருகிறது.
இந்தியா சுதந்திரம் பெற்ற போது குஜராத் தனி மாநிலமாக உருவெடுக்கவில்லை. மகாராஷ்டிராவும், குஜராத்தும் இணைந்து 'பாம்பே ஸ்டேட்' என்றுதான் இருந்தது. 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது கூட குஜராத் உருவாகி விடவில்லை. 1956 முதல் தொடர்ந்து நடந்த போராட்டங்களால் 1960 மே முதல் தேதிதான் குஜராத் தனி மாநிலமானது.
சுதந்திரம் பெற்றது முதல் 1995 வரை காங்கிரஸ்தான் தொடர்ந்து அங்கு ஆட்சி செய்து வந்தது. எமர்ஜென்ஸிக்குப் பிறகு குஜராத்தைச் சேர்ந்த மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனாலும் கூட, குஜராத்தில் காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வந்தது. 1995-ல்தான் காங்கிரஸிடமிருந்து பா.ஜ.க. ஆட்சியைப் பறித்துக் கொண்டது. கேåûபாய் படேல் முதல்வரானார். ஆனால், பி.ஜே.பி.யில் பிளவு வந்ததை ஒட்டி, 1998-ல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது குஜராத். மீண்டும் பி.ஜே.பி.யே ஆட்சியைப் பிடித்தது. மீண்டும் கேåûபாய் படேல்தான் முதல்வர் ஆனார்.
ஆனால், அடுத்தடுத்த இரு இடைத்தேர்தல்களில் பி.ஜே.பி. தோல்வியடைந்ததை அடுத்து, கேåûபாய்க்கு எதிர்ப்பு வலுத்தது. இதையடுத்து அவர் ராஜினாமா செய்ய, 2001 அக்டோபரில் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வர் ஆக்கப்பட்டார். அவரும் ஒரு வருடம்தான் நீடிக்க முடிந்தது. 2002-ல் கோத்ரா ரயில் எரிப்பும், அதையடுத்து நடந்த முஸ்லிம்கள் மீதான தாக்குதலும் மோடிக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்தன. ஆட்சியைக் கலைக்க கவர்னரிடம் கடிதம் கொடுத்த மோடி, 2002 டிஸம்பரில் மீண்டும் தேர்தலை எதிர்கொண்டார். அந்தத் தேர்தலில் 1998-ஐ விடக் கூடுதலான ஸீட்டுகளைக் கைப்பற்றி மோடி முதல்வரானார். 2007-ல் நடந்த தேர்தலிலும் மோடி தலைமையிலான பி.ஜே.பி.யே வெற்றி பெற்று, மோடியே மீண்டும் முதல்வரானார். தற்போது 'குஜராத்தின் நீண்ட கால முதல்வர்' என்ற பெருமையுடன் இந்த வருடம் மீண்டும் தேர்தலைச் சந்திக்க இருக்கிறார் மோடி.
நரேந்திர மோடியின் கடந்த 11 ஆண்டு கால ஆட்சியில்தான் குஜராத் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது என்றால், அதை யாரும் மறுக்க மாட்டார்கள். நான் குஜராத்தில் சுற்றி வந்தபோது முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உட்பட யாரும் அதை மறுக்கவில்லை. அதே நேரம் மோடிக்கு முன்பும் கூட ஒரு ஆரோக்கியமான, சீரான பாதையிலேயே குஜராத் பயணம் செய்தது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.
இயற்கையாகவே குஜராத் மக்கள் தேசியத்திலும், மாநில வளர்ச்சியிலும் ஆர்வம் கொண்டவர்கள். காந்தியடிகள், வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய், கே.எம்.முன்ஷி… என்று ஒரு நீளமான பட்டியல், குஜராத் மாநிலத்துக்குப் பெருமை சேர்க்கிறது. நல்லவர்கள் அதிகம் இருந்ததாலோ என்னவோ, ஆரம்பம் முதலே குஜராத் தரம் குன்றாத வகையில் தன்னைப் பராமரித்துக் கொண்டு வந்துள்ளது.
தமிழகத்தில் பல பத்தாண்டுகளாக தலைநகர் மாற்றம், துணை நகரம் என்று பேசிக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால், குஜராத்தில் 1970-லேயே அகமதாபாத் நகருக்கு 20 கி.மீ. தள்ளி, காந்தி நகர் என்ற துணை நகரத்தை அழகாகத் திட்டமிட்டு உருவாக்கி, அதையே தலைநகராகவும் ஆக்கி விட்டனர். ட்ராஃபிக் சிக்னல்கள் இல்லாத நிலையில், தாங்களாகவே போக்குவரத்தைக் கையாள்கிறார்கள் காந்திநகர் மக்கள். ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு முட்டிக் கொள்ளாமல், விட்டுக் கொடுத்து வாகனங்களை ஓட்டுகிறார்கள். 4 லேன், 6 லேன் என்று, எல்லா சாலைகளும் பிரமாண்டமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் என்பது துளியும் இல்லை.
1946-லேயே வல்லபாய் படேலின் ஆலோசனையின் பேரில் பல மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் முன்னோடியாக குஜராத்தில் பால் கூட்டுறவுச் சங்கம் துவக்கப்பட்டது. அந்தப் பால் கூட்டுறவுச் சங்கத்தைத் தெரியாதவர்கள் இன்று இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. பிரபலமான 'அமுல்' நிறுவனம்தான் அது.
அதேபோன்று விவசாயத்திலும் குஜராத் பெரும்பாலும் நம்பர் ஒன் மாநிலமாகவே திகழ்ந்து வந்தது. பருத்தி, நிலக்கடலை இவையெல்லாம் அதிகம் விளைந்து வந்தன. உப்பு உற்பத்தியில் குஜராத்தான் எப்போதும் நம்பர் ஒன்.
ஆனாலும், குஜராத்தில் நிலத்தடி நீர், கால்வாய் நீர் ஆகியவை குறைவாகவே இருந்தன. அதனால் அடிக்கடி வறட்சி தாக்கியது. குடிநீருக்காக பெண்கள் 5 முதல் 7 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது. மின் தட்டுப்பாடும், மின்சாரத்தில் தரக்குறைபாடும் இருந்தன. கிராமப்புறக் கல்வியில், குறிப்பாகப் பெண்கள் கல்வியில் குஜராத் பின்தங்கியே இருந்தது. சாலை வசதிகள் போதுமானதாகவும், தரமானதாகவும் இல்லை.
ஆனால், அந்தக் குறைபாடுகளெல்லாம் கடந்த 11 வருடத்தில் காணாமல் போயின. நிலத்தடி நீர், குடிநீர் என்று தனித்தனியே வசதி செய்து தரப்பட்டுள்ளது.
மின்தட்டுப்பாடு என்பது அறவே இல்லை. கிராமங்களுக்குக் கூட 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது. விவசாயத்துக்கு என்று தனி ஃபீடர் மூலம் மின்சாரம். 16 மாநிலங்களுக்கு மின்சாரம் விற்கப்படுகிறது. மின்சாரம் தடையின்றிக் கிடைக்கிறது என்பதைவிட, அது முழு தரத்தோடு கிடைக்கிறது என்பதுதான் மிக முக்கியம். குஜராத்வாசிகள் யாரும் டி.வி., ஃபிரிட்ஜ் வாங்கும்போது ஸ்டெபிலைஸர்களையும் சேர்த்து வாங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
கல்வியில் பெரிய முன்னேற்றம். குறிப்பாக பெண் குழந்தைகள் அதிக அளவில் கல்வி கற்று வருகின்றனர். இந்தியாவில் வேறெங்கும் இல்லாத பல படிப்புகள், பல சிறப்புப் பல்கலைக் கழகங்கள் குஜராத்தில் இருக்கின்றன.
அங்கு மாநில அரசின் சார்பில் பல்வேறு எக்ஸ்பிரஸ் ஹைவேஸ் இருப்பதே நம்மை வியக்க வைக்கும்போது, அதையும் தாண்டி, தேசிய நெடுஞ்சாலைகளைக் கூட குஜராத் அரசு தன் பங்குக்கு விரிவுபடுத்திக் கொடுத்து மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்கிறது.
இதெல்லாம் எப்படி நடந்தன? ஏற்கெனவே நான் சொன்னபடி இது மோடிமஸ்தான் வேலை இல்லை. நரேந்திர மோடி என்ற முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் முளைத்த முன்னேற்றங்கள்.
குஜராத்தில் மட்டும் இவை எப்படிச் சாத்தியமாயின? மோடியால் மட்டும் இவற்றை எப்படிச் செய்ய முடிந்தது? வரும் வாரங்களில் அலசுவோம்.
குஜராத்தின் பங்களிப்பு!
குஜராத்தின் மக்கள் தொகை (2011 சென்ஸஸ் படி) 6 கோடி. இது இந்திய மக்கள் தொகையில் 4.99%. குஜராத்தின் பரப்பளவு 1,96,024 சதுர கி.மீ. இது இந்தியப் பரப்பளவில் 6%. இப்படி பரப்பளவில் 6%. மக்கள் தொகையில் 4.99% கொண்ட குஜராத், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அளித்து வரும் பங்களிப்பு என்ன தெரியுமா?
ஆடை தயாரிப்பில் 25%
மருந்துகள் தயாரிப்பில் 26%
நிலக்கடலை உற்பத்தியில் 27%
இயற்கை எரிவாயு தயாரிப்பில் 30%
பெட்ரோ கெமிக்கல் தயாரிப்பில் 35%
கெமிக்கல் தயாரிப்பில் 41%
உப்பு தயாரிப்பில் 66%
சோடா தயாரிப்பில் 90%
நன்றி; துக்ளக்
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.