விபீஷணன், சுக்ரீவன், அங்கதன், நீலன், நலன் மற்றும் ஏனைய வானரங்கள் எல்லாரும் கூடியிருக்கின்றனர்.
விபீ: நமக்கெல்லாம் மகிழ்ச்சியளிக்கும் செய்தி வந்திருக்கிறது. ஸ்ரீராமனுக்கு விரைவில் பட்டாபிஷேகம் நடக்கப் போகிறது! நாள் கூட
குறித்தாயிற்று. இந்த விழாவை மிகச் சிறப்பாக நாம்தான் நடத்த வேண்டுமென கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே இது குறித்து நாம் ஆலோசிக்கவே இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறேன்.
சுக்: ஆஹா! மிக்க மகிழ்ச்சி! எல்லா வேலைகளையும் நமக்குள் பிரித்துக்கொண்டு, அவற்றை ஒழுங்காகச் செய்ய வேண்டும்.
எல்லாரும்: அப்படியே ஆகட்டும். நீங்களே பிரித்துக் கொடுத்து விடுங்கள். அதன்படியே செய்கிறோம், தலைவா!
நலன்: ஒரே ஒரு சின்ன விஷயம்……
சுக்: சொல் நலா! ஏன் தயங்குகிறாய்? தைரியமாகச் சொல். இதில் பங்கு பெறுவது நமக்கெல்லாம் பெருமை மட்டுமல்ல; இது நம் கடமையும் கூட!
நலன்: அதெல்லாம் சரிதான், தலைவா. எனக்கென்ன தோன்றுகிறதென்றால், இதுவரை நடந்த ராம காரியங்கள் எல்லாவற்றிலும் முதலிடம் வகித்தவன் அனுமன் தான். நமக்கெல்லாம் வேலையே இல்லாமல் அவனே அனைத்தையும் செய்து பெயர் வாங்கிக்கொண்டு போய்விட்டான். இப்போது ஊர் உலகமெல்லாம் அனுமனையே கொண்டாடுகின்றன. அதனால்…
விபீ: அதனாலென்ன? நீ என்ன சொல்ல வருகிறாய்?
அங்: நலன் இதைப் பற்றி முன்னமேயே என்னிடம் பேசிவிட்டான். அவன் சொல்லத் தயங்குவதால் நானே சொல்கிறேன்….. இந்த முறை இந்த பட்டாபிஷேக விஷயத்தில் ஒரு வேலையும் விடாமல் அனைத்தையும் நாமே பங்கு போட்டுக் கொள்ள வேண்டும். நல்ல வேளையாக அனுமன் இந்தக் கூட்டத்துக்கு இன்னும் வராமல் இருப்பது நல்லதுக்கே! அவன் வருவதற்குள் எல்லா காரியங்களையும் நமக்குள் பிரித்துக் கொண்டுவிட்டால், அவன் வந்து கேட்டால், அடடா… ஒண்ணுமே இல்லையேப்பா! எனச் சொல்லி சமாளித்து விடலாம். சரிதானே நலா?
நலன்: அதே! அதே!
சுக்: ம்ம்ம்ம். இதுவும் நல்ல யோசனையாகத்தான் படுகிறது. நானும் இது பற்றிக் கேள்விப் பட்டேன். சரி, நான் ஒரு பட்டியல் தயார் செய்து கொண்டு வந்திருக்கிறேன். அதன்படி எல்லா வேலைகளையும் ஒவ்வொருவரும் பார்த்து அதன்படியே சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும். இந்தாருங்கள்.
[பட்டியலை நீட்ட, அனைவரும் தங்கள், தங்கள் வேலையைக் குறித்துக் கொள்கிறார்கள்.
அப்போது அனுமன் அவசர அவசரமாக உள்ளே நுழைகிறான்.]
அனு: ஸ்ரீராமனுக்கு ஜெய்! மன்னிக்கவும் தலைவா! ராம பிரான் குளிப்பதற்காகத் தண்ணீர் எடுத்து வைத்து வந்தேன். அதனால், சற்று தாமதமாகி விட்டது. பட்டாபிஷேக வேலை பற்றிய கூட்டம்தானே? எனக்கென்ன பணி கொடுத்திருக்கிறீர்கள்? எதுவானாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு முடிக்கிறேன்.
[ஆவலுடன் பட்டியலை வாங்கிப் பார்க்கிறான். முகத்தில் ஏமாற்றம் தவழ்கிறது!]
அனு: என்ன? எனக்கு ஒரு வேலையும் இல்லையா? என் பெயரே இதில் இல்லையே?
விபீ: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஆஞ்சநேயா! ஒவ்வொரு பணியாகச் சொல்லச் சொல்ல, ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டுவிட்டனர். அதனால் உனக்குகெனக் கொடுக்க ஏதுமில்லாமல் போயிற்று. அதனாலென்ன? நீதான் இத்தனைக் காலமாய் பணி செய்து களைத்துப் போயிருக்கிறாயே! சற்று ஓய்வெடுத்துக் கொள்ளேன். விழாவை நன்றாக ரசித்து, வயிறார உண்டு மகிழ்வுடன் இரு!
அனு: [கலக்கத்துடன்] எனது ராமனுக்கு பட்டாபிஷேகம்! நான் ஓய்வெடுப்பதா? இதென்ன கொடுமை? எப்படி என்னால் இந்த நல்ல காரியத்தில் ஒரு வேலையும் செய்யாமல் இருக்க முடியும்? தலைவா! ஏதாவது ஒரு சின்ன வேலையாவது கொடுத்து அருளுங்க!
சுக்: இல்லையே அனுமந்தா! அப்படி ஏதாவது இருந்தால் கொடுக்க மாட்டேனா? இந்தக் காரியத்தில் உன் பணி என ஏதுமில்லை என்பதே என் முடிவு! அப்படி ஏதேனும் விட்டுப் போயிருப்பதாக நீ நினைத்தால், நீயே சொல்லேன். தருகிறேன்.
[அனுமன் பட்டியலை வாங்கிப் படிக்கிறான். அவன் முகம் மலர்கிறது!
]
அனு: முக்கியமான ஒன்றை மறந்து விட்டீர்களே!
சுக்: [திகைப்புடன், பட்டியலை வாங்கியபடியே] இல்லையே! ஒரு சின்ன வேலைகூட விடாமல் எல்லாவற்றையும் குறித்திருந்தேனே. அப்படி எதை விட்டு விட்டேன் அனுமா?
அனு: [மலர்ச்சியுடன்} ஸ்ரீராமன் எவ்வளவு பெரிய பதவியில் உட்காரப் போகிறார்? அப்படிப்பட்ட அவருக்கு எத்தனை காரியங்கள் காத்திருக்கும்? அப்போது அவருக்குக் கொட்டாவி வந்தால், அவர் என்ன செய்வார்? சொடக்குப் போடக்கூட நேரமில்லாத அவரால், அதை எப்படி செய்ய முடியும்? எனவே, அவர் எப்போதாவது …. எப்போதாவதுதான், சரியா?…கொட்டாவி விடும்போது, அவர் வாயருகே சொடக்கு போடும் பணியை எனக்குக் கொடுங்களேன், தலைவா!
சுக்: [இதெல்லாம் ஒரு பணியா? சரி, சரி, இருந்தாலும் அதையே தருகிறேன். போய் வா!
அனு: மிக்க வந்தனம் தலைவா! நான் வருகிறேன். இந்நேரம் குளித்திருப்பார். போய் துவட்டிவிட வேண்டும். நான் வருகிறேன். அனைவருக்கும் வணக்கம்.
[அனுமன் வேகமாக ஓடுகிறான்!]
நலன்: நன்றாக ஏமாந்தான் அனுமன்! கொட்டாவிக்கு சொடுக்கு போடுவதெல்லாம் ஒரு பணியா? ராமபிரானுக்கு எப்போது கொட்டாவி வருவது? இவன் எப்போது சொடக்கு போடுவது? முக்கியப் பணிகளெல்லாம் நம்மிடமே! இந்த முறை அவனுக்கு பெயர் கிடைக்கப் போவதில்லை!
அனைவரும்: ஆமாம், ஆமாம்!
[சிரிக்கிறார்கள்.]
————
காட்சி -2.
[பட்டாபிஷேக நாள். அவரவர் மும்முரமாகப் பணிகளில் ஈடுபட்டு அலைகின்றனர். அனுமன் மட்டும் ஸ்ரீராமன் எங்கே சென்றாலும் நிழலாகத் தொடர்கிறான்.]
ஸ்ரீராமன்: [சற்று கேலியாக] என்ன ஆஞ்சநேயா! உனக்கு ஒரு வேலையும் கிடையாதா? அதோ பார்! விபீஷணன் கிரீடத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறான். அங்கதன் என் உடைவாளைக் கவனமாகப் பிடித்துக்கொண்டு நிற்கிறான். சுக்ரீவன் வந்தவர்களையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறான். நலன், நீலன் இன்னும் மற்ற வானரர்கள் எல்லாம் மாலை, தோரணம், வாத்திய இசை, பந்தி உபசரிப்பு என ஆளாளுக்கு ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நீ மட்டும் என் பின்னாலேயே அலைகிறாயே! என்ன சமாச்சாரம்?
அனு: இல்லையே என் பிரானே! நானும் ஒரு முக்கியமான வேலையைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
ஸ்ரீராமன்: அப்படியா? அதென்ன அத்தனை முக்கியமான வேலை?
அனு: [[பணிவுடன்] உங்களுக்கு கொட்டாவி வரும்போது சொடக்கு போடும் வேலை என்னுடையது எம்பிரானே!
ஸ்ரீராமன்: [சிரிப்பை அடக்க முடியாமல்] என்னது? என்னது? இன்னொரு முறை உரக்கச் சொல்! இங்கிருக்கும் அனைவரும் நன்றாகக் கேட்கட்டும். என்ன பணி உன்னுடையது?
[அனைவரும் ஆவலுடன் கவனிக்கின்றனர்… அனுமனை எட்டிப்போய் நில் எனச் சொல்வாரென எதிர்பார்த்து!]
அனு: [பணிவுடனே] தங்களுக்கு எத்தனை முக்கியமான காரியங்கள் இருக்கும்! அப்போது,… எப்போதாவது உங்களையும் அறியாமல், களைப்பினால் கொட்டாவி விட்டால், நான் உடனே சொடக்குப் போடுவேன். அதற்குத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்.
ஸ்ரீராமன்: ஓ! அப்படியா சமாச்சாரம்! எனக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை. சற்று விளக்கமாகச் சொல்லேன். அதற்கு ஏன் இப்படி என் பின்னாலேயே அலைந்து கொண்டிருக்கிறாய்? அப்படி தொலைவில் ஒரு ஓரமாக நிற்கலாமே!
அனு: அதில்லை மஹா ப்ரபோ! நான் ஒரு ஓரமாக நிற்கலாந்தான்! ஆனால் அப்படி நிற்கும்போது சட்டென உங்களுக்குக் கொட்டாவி வந்துவிட்டால் நான் எப்படி சொடக்கு போட முடியும்? அதற்காகத்தான் இப்படி….!
ஸ்ரீராமன்: சபாஷ்! உனக்கு ஒரு வேலையும் கொடுக்காமல் மற்றவர்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு விட்டதால், இப்படி ஒரு சமயோசிதம் செய்தாயோ அனுமந்தா! என் கூடவே இருப்பதற்கு இப்படி ஒரு தந்திரம் செய்தாயே! செய்யும் பணி முக்கியமல்ல! யாருக்காக அதைச் செய்கிறோம் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்ட இந்த நாடகம் ஆடினாயோ? தீர்க்காயுஷ்மான் பவ!
அனு: [மேலும் பணிவுடன்] தாங்களே இப்படி நாடகமெனச் சொல்லலாமா, மஹராஜ்! ராம காரியமென்றால் அதில் பெரிது, சிறிது என்ற பேதம் இருக்கலாமோ! என்ன பணியானாலும் அதைச் சிரத்தையுடன் செய்ய வேண்டாமோ! அனைத்தும் தங்கள் மஹிமையே!
நெடுஞ்சாண்கிடையாக விழுந்து பணிகிறான்.
ஏனைய வானரர்கள் எல்லாரும் அனுமனின் இந்த சாதுர்யத்தைக் கண்டு வெட்கித் தலை குனிகின்றனர்.
ஜெய் விஜயீ பவ!
கோஸலேந்த்ரனுக்கு ஜெய மங்களம்! என்னும் கோஷம் விண்ணைப் பிளக்கிறது!
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்!
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.