அன்று காலை பள்ளி தொடங்கியதும், பதின்மூன்று வயது காலித்கான் உள்பட 150 மாணவர்களுக்கு முதலுதவி பற்றிய பாடத்தை தொடர்ந்கியிருந்தார், அந்த ராணுவப் பள்ளியின் டாக்டர். மாணவர்கள் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்க… வெள்ளை உடையும் கருப்பு மேலங்கியும் அணிந்தபடி இரண்டு துப்பாக்கிதாரிகள் வகுப்பறைக்குள் நுழைந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டபடி சுட்டுவிட்டுப் போய்விட்டனர்.
இராணுவ டாக்டரும் சில சிப்பாய்களும் தப்பி ஓடிவிட… வகுப்பறைக்குள் மாட்டிக்கொண்ட மாணவர்கள் உள்பக்கமாகத் தாளிட்டு, சாய்வுமேசைக்குக் கீழே பதுங்கிக்கொண்டார்கள். ஆனாலும் மீண்டும் அங்கு வந்த வெள்ளை உடை – கருப்பு அங்கி ஜந்துகள், கதவை உடைத்து, உயிரைக் கையில் பிடித்தபடி தரையோடு தரையாக ஒட்டிக்கிடந்த சிறுவர்களை, கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லத் தொடங்கினார்கள். அந்த வகுப்பிலிருந்த பெரும்பாலான மாணவர்களும் இரக்கமே இல்லாமல், மனித உருவில் வந்த அந்த கொடூரங்களால் கொல்லப்பட்டு விட்டார்கள்.
இரண்டு கால்களும் சுடப்பட்டு படுகாயம் அடைந்த பதினைந்து வயது சாருக்கான் அழுதபடியே சொல்கிறான்… "எங்கள் ஆசிரியை ஒருவரின் கையில் சுட்டிவிட்டார்கள். வலியால் அவர் கதறினார். உடனே அவரின் அருகில் சென்ற ஒரு பயங்கரவாதி, மீண்டும் அவர் மீது தொடர்ச்சியாக துப்பாக்கியால் சுட்டான். அவரிடமிருந்து சத்தம் வருவது நிற்கும்வரை அவன் சுட்டு முடித்தான். தடித்த பூட்சுகளுடன் வந்த ஒருவன், சுட்டுக் கொள்வதற்காக என் சக மாணவர்களைத் தேடியபடி நான் படுத்திருந்த இடத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தான். அடுத்த சூட்டுக்குப் பலியாகிவிடுவோமோ என பயந்தபடி, செத்தவனைப் போல கண்களை இறுகமூடிக் கொண்டேன். எப்படி உயிர் தப்பி, மருத்துவமனைக்கு வந்தேன் என்பது தெரியவில்லை. என்னுடைய நண்பர்கள் எல்லாரும் சூட்டுக்காயங்களுடனோ உயிரை இழந்தபடியோ என்னைச் சுற்றிலும் கிடந்தனர்" – இப்படித்தான், தாலிபான்களின் கொடூரத்தில் இருந்து தப்பிய நூற்றுக்கணக்கான சிறுவர்களும், கடந்த 16-ஆம் தேதியின் துயரகணங்களை, இன்னும் அதிர்ச்சியோடு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பயங்கரவாதத்தின் பாதிப்புகள், அப்பாவி பாகிஷ்தானியர்களுக்குப் பழகி போய்விட்டது என்றாலும், பெசாவர் இராணுவப் பள்ளியின் பிஞ்சுகளின் உயிர்கள் பொசுக்கப்படது, உலகத்தையே துடிதுடிக்க வைத்துவிட்டது. ஆனாலும் இந்தக் கொடூரத்தை நிகழ்த்திய ஜந்துகளோ, நியாயப் படுத்தவும் செய்கின்றன.
ஒற்றை ரோசா பூவை சிகரட்டால் சுட்டுப்பொசுக்கும் மனநோயாளிகளைப் போன்ற இந்தப் படுபாதகர்கள் யார்? மனிதகுலத்தை உலுக்கி எடுத்திருக்கும் 132 குழந்தைகளின் படுகொலையைச் செய்தவங்களுக்கு எப்படிதான் அதற்கு மனம் வந்தது? எனும் கேள்வி அலைகளுக்கு, அந்தக் கொடியவர்களின் பதில், மேலும் மேலும் கோபத்தையும் ஆவேசத்தையும் தான் உண்டாக்கியிருக்கிறது.
இந்த பச்சைப் படுகொலைகளைச் செய்தது நாங்கள் தான் எனக் கூறியிருக்கும், தெகிரிக்-இ-தாலிபான், பாகிஸ்தான் எனும் ஆயுதப்படையின் செய்தித்தொடர்பாளர் மொகமது கொரசானி, "வடக்கு வஜிரிஷ்தானில் உள்ள எங்கள் மக்கள் மீது பாகிஷ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் எங்களின் குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்டார்கள். அந்த வலியை பாகிஸ்தான் இராணுவம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, இராணுவப் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது" என, குற்ற உணர்ச்சியே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.
கடந்த ஜூன் மாதம் முதல் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் இராணுவமும் அமெரிக்காவின் ஆளில்லா விமானமும் நடத்திய தாக்குதல்களில், 1,270 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என கணக்கு சொல்கிறார்கள், இந்த பாகிஸ்தான் தாலிபான்கள். அதாவது, "எங்கள் குழந்தைகளைக் கொன்றார்கள்; பதிலடியாக அவர்களின் குழந்தைகளை நாங்கள் கொன்றோம்" என இந்த மனித உருவங்கள் குரூரத்தை வெளிப்படுத்தினாலும் கூட, அது முழுக்க உண்மையும் இல்லை.
கொடூரம் நிகழ்ந்த பெசாவர் நகரம், ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள எல்லைப்புற மாகாணம் மட்டுமல்ல, இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர மையமும் கூட. அதிக அளவில் இராணுவத்தினர் புழங்கும் இந்தப் பகுதியில், அவர்களின் குடும்பத்தினரும் பிற குடிமக்களும் சேர்ந்து வசிக்கும், பெசாவர் நகரியம், அதி உயர் பாதுகாப்புப் பகுதியாக வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் படுகொலை நடந்த பெசாவர் மத்தியப் பகுதியில் உள்ள இராணுவப் பள்ளி, அவ்வளவு இறுக்கமான இராணுவப் பாதுகாப்பு கொண்டது அல்ல. மொத்தம் ஆயிரத்து நூற்று மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளியில், இராணுவத்தினரின் பிள்ளைகள் மட்டுமல்ல, அந்தப் பகுடியின் படையினர் அல்லாத குடும்பப் பிள்ளைகளும் கணிசமாகப் படித்து வருகின்றனர். வழக்கமான செவ்வாய்க்கிழமை போலத்தான் அன்று காலையிலும் அந்தப் பள்ளியில் வழக்கமான குதூகலத்துடன் பிள்ளைகள், வகுப்பறைகளில் இருந்துள்ளனர்.
கொடூரத்தை முதலில் பார்த்தவர்களில் ஒருவரான பள்ளியில் சோதனைக்கூடப் பணியாளர் முடாசீர் அவான், "பள்ளிக்கூடச் சுவரின் மீது ஆறு பேர் இருந்ததைப் பார்த்தேன். மாணவர்கள் ஏதோ விளையாடுவதாகத்தான் முதலில் நினைத்தேன். சிறிது நேரத்திலேயே அவர்களிடம் துப்பாக்கிகள் இருப்பதைப் பார்த்ததும் பயந்துபோனோம். 9, 10- ஆவது மாணவர்களுக்கு ஒரு பார்ட்டி நடந்துகொண்டு இருந்தது. அதனால் வகுப்பறைகளில் அதிகம் பேர் இல்லை. மாடியில் 11, 12ஆவது வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடந்துகொண்டிருந்தது. துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதுமே, எல்லாரும் வகுப்பறைகளை நோக்கி ஓடினோம். ஆனால், அவர்கள் ஒவ்வொரு வகுப்பரைக்குள்ளும் போய், குழந்தைகளைச் சுட்டுக் கொன்று விட்டார்கள்" என்கிறார் பதைபதைக்க.
தேர்வு நடந்துகொண்டிருந்த கலையரங்கத்தில் தான் முதலில் பயங்கரவாதிகள் நுழைந்திருக்கின்றனர். முன்னதாக, நுழைவாயிலில் இருந்த கம்பிவலையை அறுத்தெறிந்துவிட்டு வந்துள்ளனர். கலையரங்கத்தை அடுத்து ஒவ்வொரு வகுப்பரையாகச் சென்று கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுருக்கின்றனர். தலைமை ஆசிரியர் அறையைத் தாக்கி விட்டுச் செத்துப்போனான், ஒரு தற்கொலைத் தாக்குதலாளி. கலையரங்கத்தில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த மொகமது கிலாலின் கையிலும் காலிலுமாக மூன்று முறை சுடப்பட்டுள்ளான். பிபிசிக்குப் பேட்டியளித்த அந்தச் சிறுவன், நான் இறந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அது கனவாக இருக்கும் என்று நினைத்தேன். நகர முயற்சி செய்தேன், சுத்தமாக முடியவில்லை. அப்போதுதான் நடந்ததை உணரமுடிந்தது. இரண்டு மாணவர்கள் என் மீது விழுந்திருந்தார்கள். ஆனால், அவர்கள் உயிரோடு இல்லை" என்கிறான் கண்ணீருடன்.
கணிதத்துறையின் தலைமை ஆசிரியரான சுல்பிகர் அகமது மீது நான்கு முறை சுட்டிருக்கிறார்கள். "அன்று என் வகுப்பிலிருந்த 18 மாணவர்களில் யாரும் எஞ்சியிருக்கவில்லை" என விம்முகிறார்.
விரைவில் பள்ளியை முற்றுகையிட்ட இராணுவத்தினர், பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை முடிக்க, எட்டுமணி நேரம் ஆனது. அதற்குள் 132 மாணவர்களும் 10 ஆசிரியர், பணியாளர்களும் பயங்கரவாதிகளுக்குப் பலியாகிவிட்டனர். காயமடைந்த 150 பேருக்கும் மேற்பட்டவர்கள், பெசாவர் லேடி டீடிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரத்தமும் சதையும் வெளியேறியபடி இருந்த அவர்களின் உயிரைக் காப்பாற்ற, இராணுவ மருத்துவர்கள் போர் வேகத்தில் செயல்பட்டனர். ரத்ததானம் வழங்குமாறு அறிவித்தல் விடப்பட்டது. குறிப்பாக, ஓ நெகட்டிவ் ரத்தம் போன்ற அரியவகை ரத்தம் கேட்டு, பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கேட்க… ஒருங்கிணைந்த இராணுவ மருத்துவமையில் ரத்த தானம் வழங்க பொதுமக்கள் திரண்டனர். தாடி வைத்தவன் எல்லாம் தீவிரவாதி என உலக அளவில் பரப்பப்படும் ஒரு பிம்பத்துக்கு நேர்மாறாக இருந்தது, இந்தக் காட்சி. மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாதிகளை, அவர்கள் சார்ந்த குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த அனைவரும் ஆதரிக்கிறார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை பொய்யென நிரூபித்துள்ளனர். பெசாவர் முஸ்லிம் மக்கள்.
ஆனால், அந்த மக்களில் இருந்துதானே தாலிபான்கள் உருவானார்கள். ஆம், 1980-களில் ஆப்கானிஸ்தானில் இருந்த ரசிய ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கு எதிராக, பாகிஸ்தானில் முஜாகிதீன்கள் உருவாக்கப்பட்டனர். அமெரிக்க, பாகிஸ்தான் அரசுகள் அவர்களுக்குப் பின்னணியில் இருந்தன. பின்னர் ஆப்கன் முஜாகிதீன்கள் அவர்களின் நாட்டுக்குப் போய்விட, பாகிஸ்தான் முஜாகிதீனால் பாக். பழங்குடி மக்கள் வாழும் வடமேற்குப் பகுதிக்குள் முகாமிட்டனர்.. 2001 இரட்டைக் கோபுரத் தாக்குதலை அடுத்து, ஆப்கன் தாலிபான்களை அமெரிக்கா அழிக்கத் தொடங்க, தாலிபன்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் தாலிபன்கள் களமிறங்கினர். அமெரிக்க – நோட்டோ படைகளை ஆதரித்ததால் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும் உள்நாட்டு தாலிபன்கள் தாக்குதலைத் தொடங்கினர். 13 தனிக் குழுக்களாக இருந்தவர்களை, தெகிரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் என்ற பெயரில் 2007-ல் ஒரே அமைப்பாக்கி, வலுவான ஆயுதப் படையை உருவாக்கியது, பைதுல்லா மெக்சுது என்னபவ்ர். பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார். 2009 ஆகஸ்டில் பைதுல்லாவும், அடுத்து வந்த டி.டி.பி. தளபதி ககிமுல்லா மெக்சுது, கடந்த ஆண்டு நவம்பரிலும் அமெரிக்காவின் ஆளில்லாத விமானத் தாக்குதலில் கொல்லப்பட, மௌலானா பசுலுல்லா என்பவர் தலைமையில் செயல்பட்டு வருகிறது, தெகிரிக் தாலிபான் ஆயுதப்படை.
பாகிஸ்தானின் தென்பகுதியான பஞ்சாபிலும் காலூன்றிவிட்ட இந்தப் படையில், 30 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பாக், அமெரிக்கா, கனடா, பிரிட்டனை அடுத்து, ஐ.நா.விலும் தெகிரிக் ஆயுதப்படையை 'பயங்கரவாத இயக்கம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்ற சிறுமி மலாலா, இந்த தாலிபான்களால்தான் கொலைத்தாக்குதலில் சுடப்பட்டு, உயிர் மீண்டவர். பதிலுக்கு அமெரிக்க ஆளில்லா விமானங்களும் பாகிஸ்தான் இராணுவமும் நடத்தும் தாக்குதலில், தெகிரிக் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அப்பாவி பாகிஸ்தான் பழங்குடி குழந்தைகள், நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டு வருகின்றனர். பெண்களையும் சேர்த்து, கடந்த ஜூன் முதல் இதுவரை 1,279 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற புள்ளி விவரத்தையும், நாம் ஒதுக்கிவிட முடியாது.
உலகின் எந்தப் பகுதி குழந்தையையும் எந்தவித இராணுவமோ ஆயுதப் படையோ தாக்குவதைத் தடுப்பதுதான், மனிதப்பண்பாக இருக்கமுடியும்!
நன்றி : நக்கீரன்
இரா.தமிழ்கனல்
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.