நாடாளுமன்றத்தில் கறுப்புப் பண விவகாரம் மீண்டும் புயல் அடிக்கத் துவங்கி விட்டது. எதிக்கட்சிகள், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மீது, "ஆட்சிக்கு வந்து 1௦௦ நாட்களில், வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவோம்" எனக் கூறி வாக்கு வாங்கியவர்கள், ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் முடிந்த பின்னரும் அதற்குரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். இந்த பிரச்சினையின் ஆழத்தை சற்றே காண வேண்டும். முதலில் பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில், BJP is committed to initiate the process of tracking down and bringing black money stashed in foreign banks and offshore accounts, என்பதாக குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பாரதிய ஜனதா கட்சி, வெளி நாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என போராடி வருகிறது. 2009-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், இந்தப் பிரச்சினையை பாரதிய ஜனதா கட்சி கையில் எடுத்தபோது, வழியில்லாமல் காங்கிரஸ் கட்சியும், தனது தேர்தல் வாக்குறுதியில், ஆட்சிக்கு வந்தால் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவோம் என வாக்குறுதி கொடுத்தார்.
2009-ல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, "கறுப்புப் பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவோம்" என கொடுத்த வாக்குறுதியை கண்டு கொள்ளவில்லை. பல்வேறு காலகட்டங்களில், கறுப்புப் பணத்தைப் பற்றிய விவரங்களைக் கூட நாடாளுமன்றத்தில் முறையாகத் தெரிவிக்கவில்லை. ரூ. 36,000 கோடி வரி ஏய்ப்பு செய்த குதிரை வியாபாரி ஹசன் அலி மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டியதின் காரணமாக, அவர் அந்நிய நாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டார். வரி ஏய்த்த பணத்தை வெளி நாட்டு வங்கியில் முதலீடு செய்துள்ளதாகத் தகவல் வந்த போதும் நடவடிக்கை இல்லை. 2008ல் அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியும், ஆட்சி முடிவுக்கு வரும் வரையில், அக்கடிதத்திற்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை. 2009-ல் ராம் ஜெத்மாலனி தொடுத்த வழக்கிற்குப் பின்னர் தான், கறுப்புப் பணத்தை பற்றிய விவரங்கள் வெளியே வரத் துவங்கின. இதற்கு முன்னர், பல்வேறு ஊடகங்கள் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களில் கறுப்புப் பணத்தின் அளவு பற்றிக் கொடுத்த விவரங்கள் முன்னுக்கு பின் முரணாகவே இருந்தன.
2011ல் உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு, கறுப்புப் பணம் சம்பந்தமாக ஒரு வினாவை எழுப்பியது. சுவிஸ் வங்கியான லீச்டென்ஸ்டெயின் வங்கியில் கறுப்புப் பணத்தை போட்டவர்களின் பெயர்களை ஏன் வெளியிட தயக்கம் காட்டுகிறார்கள் என்று வினா எழுப்பியது. இதற்கு மத்திய அரசு முறையான பதில் கொடுக்கவில்லை. 2012 பிப்ரவரியில், சி.பி.ஐ. இயக்குநர் ஏ.பி.சிங் ஒரு நிகழ்ச்சியில் கலந்து சொண்டு தெரிவித்த கருத்து, வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் சேமித்து வைத்துள்ள கறுப்புப் பணத்தின் அளவு ரூ. 24.5 லட்சம் கோடி என்பது. இது மட்டுமில்லாமல், இந்தியாவிலிருந்து பணம் எவ்வாறு சுவிஸ் வங்கிக்குச் செல்கிறது என்பதையும் சிங் விளக்கினார். இந்தியாவிலிருந்து துபாய் வழியாக சிங்கப்பூர், மொரீஷியஸ் தீவு வழியாகவும் சுவிஸ் வங்கிக்கு செல்வதாக தெரிவித்தார். (ஆதாரம் 14.2.2012 எக்கனாமிக் டைம்ஸ் )
ஆகவே, சுவிட்சர்லாந்து நாடு அங்கம் வகிக்கும், ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பு, 17 நாடுகளுக்கிடையேயான பொருளாதாரக் கூட்டுறவுக் கூட்டமைப்பு இவை மூலமாக நிர்பந்தப்படுத்தித்தான் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும் வெளிநாட்டு வங்கிகளில் குறிப்பாக இந்தியா இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நாடுகளில் உள்ள கறுப்புப் பணம் குவித்துள்ளவர்கள் பற்றிய தவல்களை வெளியிட முடியாது. இதற்கு அந்த நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதன் காரணமாக ஜெர்மனி அரசு, "லீச் டென்ஸ்டெயின் எல்.ஜி.டி" வங்கியில் பணம் டெபாசிட் செய்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிட எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இம்மாதிரியான நிகழ்வுகளும் நடந்துள்ளன.
காங்கிரஸ் ஆட்சியில் உச்ச நீதிமன்றம், கறுப்புப் பணம் சம்பந்தமாக ஒரு உத்திரவை பிறப்பித்தது. இந்த உத்திரவிற்கு எதிராக அன்றைய காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில், பிறப்பித்த உத்திரவை மறுபரிசீலனை செய்யுமாறு மனுதாக்கல் செய்தது. (மனு எண் 8 – 2011) மனு தாக்கல் செய்த பின்னரும் கூட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவில்லை. இன்று குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜி, நிதி அமைச்சராக இருந்தபோது, 2011 டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில், கறுப்புப் பணம் பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்தார். இதில் அவர் தெரிவித்த கருத்துக்கள், அயல் நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட்டால், பிறகு அவர்கள் மீது நாம் எப்படி திடீர் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினார். அந்த அறிக்கையின் 14-ம் பக்கத்தில் 2006-ல் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள தொகை ரூ.23,373 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2014ல் ஆட்சியிலிருந்து இறங்கும் வரை இது சம்பந்தமான நடவடிக்கை எடுக்க முயலவில்லை.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 4.7.2011-ல் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், முன்னாள் நீதிபதிகள் பி.பி.ஜீவன் ரெட்டி மற்றும் எஸ்.எஸ்.நஷீர் ஆகிய இருவரும் கறுப்புப் பணம் சம்பந்தமாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நியமிக்கப்பட்டார்கள் இவர்கள் கொடுத்த அறிக்கையில், "The two judge bench observed that the failure of the government to control phenomenon of Black Money is an indication of weakness and softness of the government" என்று சொன்னதை மறந்து விட்டுப் பேசுகிறார்கள்.
2012-ம் வருடம் அக்டோபர் மாதம் 17 அன்று வளர்ந்த நாடுகளிடையேயான பொருளாதாரக் கூட்டுறவுக் கூட்டமைப்பில் கலந்து கொண்ட ஜெர்மனியும் பிரான்சும் வங்கிக் கணக்குகளை ரகசியமாக வைத்திருந்து பகிர்ந்து கொள்ளாத சுவிஸ் நாட்டைக் கண்டிக்க வேண்டும்; மேற்படி அமைப்பிலிருந்து தடைசெய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். இதன் காரணமாக மற்ற நாடுகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தின. இதற்கிடையே ஜி-20 மாநாட்டில் ஜெர்மனியும், பிரான்சும் மீண்டும் இதே கோரிக்கையை எழுப்பின. துவக்கத்தில் இங்கிலாந்து அமைதியாக இருந்தாலும், பின்னர் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால், இந்தத் தீர்மானத்தைப் பற்றி இந்தியா மட்டும் ஏனோ மவுனமாக இருந்தது.
இதற்கு மாறாக, பிரதமர் மோடி கலந்து கொண்ட பிரிக்ஸ் மாநாட்டில், கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், குறைந்த பட்சம் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் தங்களுகுக்கு கிடைக்கும் தகவல்களைப் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வெற்றி கண்டார். இதன் காரணமாக, மொரீஷியஸ் நாடு, தங்கள் நாட்டில் முதலீடு செய்துள்ள இந்தியர்களின் கணக்கு குறித்த விவரங்களைக் கொடுப்பதாக உறுதியளித்தது.
ஆகவே, கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர முடியுமா என்ற கேள்வி எழுந்தபோது, முடியும் என தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது நல்ல அறிகுறியாகும்.
– ஈரோடு சரவணன்
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.