“மராத்தியச் சிங்கம் பாலகங்காதர திலகர்

 விடுதலைப் போராட்ட காலம்
வரலாற்றாசிரியர்கள் சிலர் விடுதலைப் போராட்ட காலத்தை மிதவாதிகளின் காலமெனவும், தீவிரவாதிகளின் காலமெனவும், காந்தியடிகளின் காலமெனவும் பாகுபாடு செய்வர். காந்தியடிகள் காலத்திற்கு முற்பட்ட காலப்பகுதியில் மிதவாதிகளின் தலைவராக கோபால கிருஷ்ண கோகலே அவர்களும் தீவிரவாதிகளின் தலைவராக திலகர் அவர்களும் விடுதலைப் போராட்ட வீரர்களை வழி நடத்திச் சென்றனர். 1901 முதல் 1918 வரை திலகருடைய தலைமையில் போராட்ட திட்டங்கள் தீட்டி செயல்படுத்தப் பெற்றன. பின்னர், 1919 முதல் எல்லாக் கட்டங்களிலும் காந்தியடிகளே போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.

மராத்தியச் சிங்கம்
“சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை” என முதன்முதலாக முழக்கம் செய்த அஞ்சா நெஞ்சத்தினரான திலகர், மராத்தியச் சிங்கம் எனப் பெருமையுடன் எல்லோராலும் அழைக்கப் பெற்றார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவராக லாலா லஜபதிராய் “பஞ்சாலச் சிங்கம்” என்றழைக்கப் பெற்றார். இவ்விருவருமே தீவிரவாதிகள் ஆவர்.

பிறப்பும் இளமையும்
புகழ் வாய்ந்த இந்திய தேசியத் தலைவரும் சிறந்த அறிஞருமான திலகர் 1856-ஆம் ஆண்டு மராத்தியத்தில் இரத்தினகிரியில் பிறந்தார். திலகரின் தந்தை கங்காதர சாஸ்திரி வடமொழிப் புலமை வாய்ந்தவர். அவருடைய தாயார் பார்வதிபாய்.

1876-ஆம் ஆண்டு பி.ஏ. பட்டம் பெற்றுப் பின்னர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்றார். பூனாவிலுள்ள டெக்கான் கல்லூரியில் படிக்கும் போது, பேராசிரியர் வேர்ட்ஸ் வொர்த், பேராசிரியர் ஷூட் ஆகியோர் முறையே கற்பித்த ஆங்கிலம், வரலாறு அரசியல் பொருளாதாரம் அவருக்குத் தெளிவை ஏற்படுத்தின. வால்டேர், ரூசோ போன்றோரின் தத்துவக் கருத்துக்கள் அவருக்குப் புதிய சிந்தனைகளைத் தோற்றுவித்தன. அரசியல் தேவையும் தந்தன.

கணிதப் பேராசிரியர்
எல்லாத் துறைகளிலும் இந்தியர்களும் கல்வியறிவு பெற்றுத் சிறந்து விளங்க வேண்டும் என்பது அவருடைய விருப்பம் ஆகும். எனவே கல்விக்கூடங்கள் நாடெங்கும் நிறுவ வேண்டும் எனக் கருதி, 1880-ஆம் ஆண்டு பூனாவில் ஓர் ஆங்கிலப் பள்ளியை நிறுவினார். இப்பள்ளி 1885-ஆம் ஆண்டு பெர்குசன் கல்லூரியாக மாறியது. அங்கு திலகர் கணிதப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

கல்வியெனும் வலிமை கொண்ட
கோட்டை கட்டினான்
எனப் பாரதியார் திலகரை போற்றியுள்ளார்.

திலகரின் அரும்பணிகள்
ஆங்கிலேயர்கள் அடக்கு முறையையும், முறை தவறிய செயல்களையும் திலகர் மிகக் கடுமையாகக் கண்டித்துத் தாக்கிப் பேசினார். மராட்டா என்ற ஆங்கில இதழைத் தொடங்கிய திலகர், அவ்விதழின் வாயிலாக மற்ற மாநிலங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். கேசரி என்ற மராத்தி இதழ் ஒன்றைத் தொடங்கி அதன் வாயிலாக மக்களுக்கு எழுச்சியூட்டினார். சட்டக் கல்லூரி ஒன்றும் இவரால் தொடங்கப் பெற்றது.

1889- ஆம் ஆண்டு திலகர் இந்திய தேசியக் காங்கிரசில் சேர்ந்தார். ஆங்கிலம் அறிந்தவர்களே காங்கிரசு உறுப்பினர்களாக முடியும் என்ற விதியை மாற்றிக் கல்லாதவரும் காங்கிரசு உறுப்பினராவதற்கு வழிவகை செய்தார்.

பூனாவில் 1896 – 1898 இல் பிளேக் நோய் ஏற்பட்ட போது, சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனபதைச் சுட்டிக் காட்டிக் கடுமையாகக் கண்டித்தார். ஆங்கில அரசோ திலகர் போராட்டத்தைத தூண்டி விடுகிறார் என்று காரணம் காட்டி 1897 சூலைத் திங்கள் அவரைக் கைது செய்து 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது.

தீவிரவாதிகள் மாநாடு
தீவிரவாதிகளின் தலைவரான திலகர் தீவிரவாதிகள் மாநாடு ஒன்றை 1907 –ஆம் ஆண்டு சூரத்தில் கூட்டினார். கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய் நௌரோஜி, சித்தரஞ்சன் தாஸ் போன்றவர்களின் மிதவாதப் போக்கைத் திலகர் ஏற்கவில்லை. “போராட்டத்தின் வாயிலாகவே விடுதலை பெற முடியும்” என்பது திலகர் நம்பிக்கை எனவே காங்கிரசை விட்டு வெளியேறினார்.

1905-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசின் அரசப் பிரதிநிதியாக இருந்த கர்சன் பிரபு இந்தியர்களின் விருப்பத்திற்கு மாறாக வங்காளத்தை இரண்டாகப் பிரித்தபோது, அதைத் திலகர், விபின் சந்திரபால், லாலா லஜபதிராய் ஆகியோருடன் சேர்ந்து தீவிரமாக எதிர்த்தனர். வங்கப் பிரிவினையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் தொடங்கக் காரணமாக இருந்தார்.

“அந்நியர்களான ஆங்கிலேயரின் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும். கள்ளுக் கடை மறியல் நடத்த வேண்டும். ஆங்கிலேயர் இயற்றும் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். தீவிரமாகப் போராடியே ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்து அகற்ற வேண்டும்” என்றெடுத்துரைத்தார். இக்காரணங்களால் 1908 சூலை 13-ஆம் நாள் மறுபடியும் கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பர்மாவில் உள்ள மாண்டலே சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 1914 சூன் திங்கள் திலகர் விடுதலை செய்யப் பெற்றார்.

1915-ஆம் ஆண்டு கோகலே மறைவுக்குப் பின், தம் ஆதரவாளர்களுடன் மீண்டும் காங்கிரசில் சேர்ந்து 1916 –ல் இலட்சுமண புரியில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் கலந்து கொண்டார். அதே ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு ஓராண்டுக் காலம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். டெல்லி, பஞ்சாப் செல்ல அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.

திலகருக்கு ஆதரவு
திலகரது கருத்துக்கு ஆதரவாகத் தம் வீரம் செறிந்த கவிதைகளால் பாரதியார், தமிழக மக்களிடையே விடுதலை உணர்வை ஊட்டினார். கோழையும் வீரனானான் எனக் கூறுமளவுக்கு எல்லோரும் அந்நியர் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தைப் பெற்றனர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் 18 ஆண்டுகள் மிதவாதிகள் தீவிரவதிகள் ஆகிய இருசாராரும் ஒற்றுமையுடன் செயல்படாததால், அக்கால கட்டத்தில் இந்திய விடுதலை இயக்கம் ஒரே சீராக அமையவில்லை எனலாம். ஆனால் தீவிரவாதிகளின் போராட்டம் காட்டுத் தீ போல் நாடெங்கிலும் பரவியது.

1916-ஆம் ஆண்டு இலட்சுமனபுரியில் நடைபெற்ற காங்கிரசு மாநாடு திலகரின் தன்னாட்சிக் கொள்கையை ஆதரித்தது. பஞ்சாப் படுகொலையை எதிர்த்துக் காந்தியடிகளால் நடத்தப் பெற்ற ஒத்துழையாமை இயக்கத்திற்கு திலகர் தம் ஆதரவை நல்கினார். ஒத்துழையாமை இயக்கம் தீவிரம் அடைந்த கால கட்டதில் நாடு அவருடைய தலைமையை இழக்க நேரிட்டது. 1920 –ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 31-ஆம் நாள் அவர் இயற்கை எய்தினார்.

மராத்தியச் சிங்கம் என்று அழைக்கப் பெற்ற திலகர், நம் நாடு விடுதலைபெரும் பொருட்டு ஆற்றிய அரும் பணிகள் போற்றுதற்குரியன. நாட்டு மக்கள் அறியாமை நீங்கி உலக அரங்கில் விடுதலை பெருவதன் வாயிலாகத் தம் விருப்பம் நிறைவேறும் என்ற செயலில் அவர் காட்டிய வீரமும், விடாமுயற்சியும் அவர் வாழ்ந்த காலத்தைத் ‘திலகர் சகாப்தம்’ என வரலாற்றாசிரியர்கள் சுட்டிக் காட்டும் நிலையை உருவாக்கியது.

இந்திய விடுதலை வரலாற்றில் “மராத்தியச் சிங்கம்” என்றால் அது பால கங்காதர திலகரையே குறிக்கும்.

நன்றி ; செல்வி சிவகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரல ...

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரலாறு – அமைச்சர் ஜெய் சங்கர் ''அனைத்து சமூகத்திலும் வரலாறு என்பது சிக்கலானது. அன்றைய அரசியல் ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அம ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அமைச்சர்களுடன் பார்த்த பிரதமர் மோடி குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து ...

கவலை அளிக்கும் டிஜிட்டல் மோசடி ...

கவலை அளிக்கும் டிஜிட்டல் மோசடிகள் – மோடி பேச்சு 'டிஜிட்டல்' மோசடிகள், 'சைபர்' குற்றங்கள், ஏ.ஐ., தொழில்நுட்பங்களால் அரங்கேறும், ...

உலக எய்ட்ஸ் தினம்

உலக எய்ட்ஸ் தினம் ​1988 முதல் ஆண்டுதோறும் டிசம்பர்1ஆம் தேதிஅனுசரிக்கப்படும் உலக எய்ட்ஸ் ...

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரல ...

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் -ஜிதேந்திர சிங் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் ...

சிறுபான்மையினரை பாதுகாக்ககும் ...

சிறுபான்மையினரை பாதுகாக்ககும் பொறுப்பு வாங்க தேசத்துக்கு உள்ளது – ஜெய் சங்கர் வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், ...

மருத்துவ செய்திகள்

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...