ஐ.ஏஎஸ். சாதனையாளர் பெளோசபைன் “எனது தொலைநோக்குப் பார்வைதான் சூட்மம்”

 உடல் ஊனம் ஒரு தடை அல்ல, உள்ளத்தின் ஊனமே தடை என்பதைத் தன் வாழ்க்கையில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த 24 வயது செல்வி பெளோசபைன். இரண்டு கண்களும் 100% பார்வையற்று இருந்தாலும், கடின உழைப்பின் மூலம் IAS தேறி உயர்ந்து நிற்கிறார். இவரைப் போன்ற சாதனையாளர்கள், உடல் ரீதியில் பாதிக்கப் பட்டவர்களுக்கு மட்டுமன்றி, நம்பிக்கை இழந்த சாமானியர்களுக்கும் பெரிய எழுச்சி தரும் சக்தி.

வணக்கம், உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.
வணக்கம், என் பெயர் பெளோசபைன். அப்பா சார்லஸ், ரயில்வே துறையில் பணிபுரிகிறார். அம்மா மேரி பத்மஜா. அனைத்து இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தற்போது அறிவிக்கப்பட்ட ரிசல்ட்டில் 343ம் ரேங்கு வாங்கி தேர்வாகியதால், அடுத்து, பயிற்சிக்குச் செல்லவுள்ளேன்.

படித்து பார்வையற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வென்டில். 2011ம் ஆண்டு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.ஏ. (ஆங்கில இலக்கியம்) படித்தேன். பின், லயோலா கல்லூரியில் 2013ம் ஆண்டு எம்.ஏ. படித்தேன். தற்போது, பாரதியார் பல்கலைக் கழகத்தில் டாக்டரேட்; ஸ்டேட் பாங்க ஆப் இந்தியாவில் பணியாற்றி வருகிறேன்.

உங்கள் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயணம் எவ்வாறு தொடங்கியது?
எனக்குக் கண் பார்வை இல்லாமல் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் IAS ஆக வேண்டுமென்ற தொலைநோக்குப் பார்வை இருந்தது.

நாம் ஒவ்வொருவரும் இந்நாட்டில் இருக்கும் வரை, நம்மால் முடிந்த ஏதாவது நல்ல பங்கினை அளிக்க வேண்டும். நம் நாட்டில் எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் அனைவருக்கும் தேசபக்தியும் தேசத்தின் மீது பற்றும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த எண்ணம் எனக்குள் ஆழமாக என்றுமே இருந்து வருகிறது. இந்த மாதிரி சமுதாயம் குறித்த சிந்தனைகள் தான், என்னை IAS அதிகாரி ஆக வேண்டுமென்ற ஆசையை விதைத்தது என நினைக்கிறேன்.

சமுதாயம் குறித்த விழிப்புணர்வை எவ்வாறு தெரிந்துகொள்வீர்கள்?
"நம் நாட்டில் என்ன நடக்கிறது?" என்பதைத் தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பேன். நிறைய தகவல்களை தினசரிகளின் மூலம் தெரிந்து கொள்வேன். நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிய ஆரம்பிக்கும் போதுதான், நமக்குள் நல்ல தாக்கம் வரும்.

IAS ஆகியவுடன் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?
எனக்கு, குறிப்பிட்ட சர்வீஸ் ஒதுக்கியபின் இரண்டு முதல் இரண்டரை வருடங்கள் வரை பயிற்சி இருக்கும். பயிற்சி முடிந்தபின், என்னால் எத்தனை சிறப்பாகச் செயலாற்ற முடியுமோ, அனைத்தையும் செய்வேன். என்னுடைய ஒவ்வொரு கையெழுத்தும் ஆக்கபூர்வமானதாக நிச்சயம் இருக்கும்.

இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்பிகிறீர்கள்?
நம் நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. நம் நாட்டை நேசிக்க வேண்டும். நாட்டில் உள்ள உயர்ந்த விஷயங்களை வியந்து பார்க்க வேண்டும். இங்கு ஊழல் இருக்கிறது, பல பிரச்சினைகள் இருக்கிறது என்று கூறி நின்றுவிடாமல், இங்குள்ள நிறைய நல்ல சாதனைகளையும், சாதனையாளர்களையும் இளைஞர்கள் காணவேண்டுமென நினைக்கிறேன்.

இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்கிறீங்களா?
நான் மேலே கூறியது போல், ஒரு வேலை செய்யும் முழுத் தகுதியையும் நாம் வளர்த்துக் கொண்டால், அந்த வேலை கிடைக்கவில்லை என்றாலும், நாமாகவே ஒரு தொழிலையே உருவாக்கலாம். நம் நாட்டில் வேலை வாய்ப்புகள் இல்லை என சொல்வது மிகத்தவறு. இங்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதைச் சரியான நேரத்தில், சரியான இடத்தில் சென்று பிடித்துக் கொள்ளும் பக்குவத்தையும், திறமையையும், நம் இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு இந்தளவு தன்னம்பிக்கையும் வேகமும் வரக் காரணமாய் இருந்தது எது?
சிறு வயதிலிருந்தே, உன்னால் இந்த விஷயத்தைச் செய்ய முடியாதென்று யாராவது சொன்னால், கண்டிப்பாக அதை செய்து முடித்து விடுவேன். மேலும், எனது குடும்பமும், உறவினர்களும், நண்பர்களும் முக்கிய காரணம். நாம் ஒரு வேலையை நன்றாகச் செய்யும்போது, அதைப் பலர் பாராட்டுகையில், அந்த வேலையை இன்னும் சிறப்பாகச் செய்ய முடிகிறது.

எத்தனை தூரம் சுயமாக ஊக்கப்படுத்திக் கொண்டாலும், பிராக்டிக்கலாக உள்ள பெரும் சவாலை நினைத்து, ஏதாவது ஒரு தருணத்தில் வருந்தியது உண்டா? அத்தனை சோதனைகளையும் தாண்டி எவ்வாறு வெற்றி கண்டீர்கள்?
சிலர், கேலி, கிண்டல், எல்லாம் எவ்வாறு கடந்து வந்தீர்கள் எனக் கேட்பார்கள். எனக்கு அதுபோல் யாரும் கேலி செய்ததாக நினைவில் இல்லை. அப்படி ஒரு சூழ்நிலை வந்ததாகக் கூடத் தெரியவில்லை. ஏனெனில், நான் அவைகளைப் பெரியதாக எடுத்துக் கொண்டதும் இல்லை.

யார் என்ன சொன்னாலும், என் தகுதி மீதி எனக்கு நம்பிக்கை இருந்தது. "என்னைப் பற்றிக் குறைவாக சான்றளிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை" என்ற மனநிலை இருந்தால், இந்த மாதிரியான விஷயங்களுக்கு நாம் நேரம் கொடுக்கமாட்டோம்.

IAS படிப்பிற்கு கடின உழைப்புடன், நிறைய படிக்க வேண்டுமென சொல்கிறார்களே? அதைப் பற்றி?
"IAS பரீட்சைக்காக இவ்வாறு படித்தேன்" அவ்வாறு படித்தேன்; எந்த விழாக்களுக்கும் செல்லாமல் தியாகம் செய்தேன்" இப்படியெல்லாம் சொல்வார்கள். பரீட்சைக்காக எதையும் நான் பெரிதாக இழக்கவில்லை. வேலைக்குச் சென்றுகொண்டுதான் படித்தேன். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் தான் படிப்பேன். ஒருநாளில் படித்தது கொஞ்சம் தான் என்றாலும் மிகவும் ஈடுபாட்டுடன் படிப்பேன். படித்த விவரங்களை நன்றாகப் புரிந்துகொண்டு, ஆய்வு செய்து, தொகுத்து, விளக்கமாகச் சொல்கின்ற அளவிற்குப் படிப்பேன்.

IAS தேர்விற்கு படிக்கும் மாணவர்களுக்கு நீங்கள் தரும் அறிவுரைகள்?
IAS தேர்விற்கு தன்னைத் தயார் செய்ய வேண்டும் என்று ஒருவர் நினைத்தாலே பெருமையான விஷயம் தான். மேலும் அந்த முடிவை முழு நம்பிக்கையுடன் விடா முயற்சியுடன், எடுத்துச் செல்லும்போது வெற்றி நிச்சயம்.

உடல் ரீதியாக எந்தக் குறையும் இல்லாத சிலர், பல காரணங்களைக் காட்டி சவால்களை ஏற்கத் தயங்குகின்றனர். அவர்கள் எண்ணத்தை உடைப்பதற்கு சில உபாயங்கள் கூறுங்களேன்…

மனரீதியில் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். என் வாழ்வில் என்னைக் கீழே தள்ளுவதற்கு நான் உட்பட எவருக்குமே அதிகாரம் கிடையாது. அப்படி இருக்கையில், ஒரு கஷ்டம் என்னை கீழே இழுத்தது, என்று சிலர் சொல்வதை ஏற்க முடிவதில்லை.

"உனக்கும் கீழே உள்ளவர்கள் கோடி" போன்ற வரிகளை நினைத்து பாருங்கள். உங்களிடம் உள்ள தனிப்பட்ட சிறந்த விஷயங்களை வைத்து மேலே வாருங்கள். எத்தனை தூரம் சூழ்நிலை நம்மைப் பின்னே தள்ளுகிறதோ, அத்தனை தூரம் முன்னே வருவேன் என்ற வேகம் வேண்டும்.

எல்லா வெற்றியாளர்களுக்குப் பின்னும் மிகப்பெரிய நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் இருந்துள்ளது. இது இரண்டும் இருந்தால், எந்த மாதிரியான மனரீதியான பிரச்சினைகளையும் தாண்டிவிடலாம். சவால்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையென்றால், வாழ்க்கையில் சுவை இருக்காது. அந்தச் சவால்களை எதிர்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நமது சமுதாயத்திற்கு ஏதேனும் கருத்து சொல்ல நினைக்கிறீர்களா?
சமுதாயம் எப்போது ஆரோக்கியமாக இருக்குமென்றால், அறநெறிகளைக் கடைபிடிக்கப்படும்போது தான். முழுமனதோடு, அடுத்தவர்களுக்கு எவ்வாறு உதவி செய்யலாம் என்ற கேள்விக்கு விடையளித்துக் கொண்டே, தனக்குள்ள இலக்குகளை அடையும் தருணம் ஒரு சிறந்த சமுதாயத்தின் துவக்கமாக இருக்குமென நினைக்கிறேன்.

இந்தியா வரும் ஆண்டுகளில் எவ்வாறு இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்?
எதிர்காலம் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. அனைவருக்கும் நல்ல வேலை இருக்க வேண்டும். அவற்றை உருவாக்கித் தரும் தகுதியும், வேலை செய்யக் கூடிய ஆற்றலும் அனைவர்க்கும் இருக்க வேண்டும். தொழிற்சாலைகள் வளர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று ஆசை. நம்பிக்கை தானே எல்லாம்.

IAS ஆக வேண்டும் என்று விரும்பி ஆகிவிட்டீர்கள், அடுத்த நோக்கம் என்ன?
IAS ஆக வேண்டும் என்பது தொடக்கமே தவிர, முடிவல்ல. இது தான் செய்யணும் என்ற ஒரு சிறு வட்டத்திற்குள் என்னை அடைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஒவ்வொரு நாளும் செய்கின்ற வேலையில் என்னால் முடிந்தளவிற்கு சிறப்பாக செய்ய விரும்புகிறேன்.

நன்றி : விஜய பாரதம்
-விமல் தியாகராஜன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

இந்தியாவில் கூட்டுறவு துறையை வ ...

இந்தியாவில் கூட்டுறவு துறையை வலுப்படுத்தி வருகிறோம்-மோடி பெருமிதம் '' இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறோம், '' ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...