ராகுல் தலையீடு: “ஆதாரங்களை வெளியிடுவேன்”

 இப்படியொரு திடீர் 'டைம் பாமை' காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கவில்லை. டெல்லி சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், காங்கிரசின் சாரதியான ராகுல் காந்தியை கலவரப்படுத்தி இருக்கிறார் ஜெயந்தி நடராஜன்!

'சுற்றுச்சூழல் இலாகா அமைச்சராக நான் இருந்தபோது, துறை ரீதியான சில கோரிக்கைகளை ராகுல் முன் வைத்தால்.. சோனியா உத்தரவுப்படி மன்மோகன்சிங் அமைச்சரவையில் இருந்து நான் நீக்கப்பட்டேன்!" என ஜெயந்தி தெரிவித்து வரும் கருத்துகள், சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

இது குறித்துப் பேச ஜெயந்தியை சந்தித்தோம்.

உங்கள் இலாகாவில் ராகுல் தலையிட்டார் என்பது சீரியசான குற்றச்சாட்டாக பார்க்கப்படுகிறதே?
"எனது இலாகாவில் ராகுல் தலையிட்டார்! என நான் சொல்லவில்லை 'வேண்டுகோள் வைத்தார்!' என்றேன். மீனவர் பிரச்சனை, மலைவாழ் பழங்குடி மக்களின் பிரச்சனை ஆகியவை தொடர்பான மனுக்களை எனக்கு அனுப்பி வைத்து, அவற்றில் கவனம் செலுத்தக் கூறினார். அதை நான் செய்தேன்!"

அப்படியானால், ராகுல் மீது உங்களுக்கு என்ன கோபம்?
"கோபமில்லை. என்னோட கேள்வி இதுதான். 'நீங்கதான இதையெல்லாம் பண்ணச் சொன்னீங்க! அதனால்தான நான் பண்ணினேன்! ஒரு புராஜெக்ட் முப்பதாயிரம் கோடி, இன்னொரு ஒரு புராஜெக்ட் இருபதாயிரம் கோடி… எத்தனையோ கோடிகள்! அவை சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், நிறுத்தி வைக்க உத்தரவு போட்டேன். ஜி.வி.கே. புராஜெக்ட் தவிர, வேற எல்லாவற்றிலும் உச்ச நீதிமன்றமும் நான் செய்ததைச் சரி என கூறியிருக்கிறது.

அப்படியிருக்கும்போது திடீரென 2013 டிசம்பர் 21-ம் தேதி தொழில் வர்த்தக சம்மேளன மாநாட்டில் போய், 'கட்சி கொள்கை மாறிவிட்டது. இனி சுற்றுச்சூழல் அனுமதி வேகமாகக் கிடைக்கும்' என (ராகுல்) பேசியது எப்படி சரியாகும்? ஒருநாள் முன்பாக, கட்சிப் பணிக்காக எனக் கூறி என்னை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, மறுநாள் அங்குபோய் அப்படி பேசியது நியாயமா? அதை என்னிடம் கூறியிருக்கலாமே?"
ஏன் அப்படிச் செய்தார்?

'"அது எனக்குத் தெரியாது. எப்பேற்பட்ட மகனாக இருந்தாலும் தேர்தலுக்கு நூறு நாட்களுக்கு முன்பு பதிவியில் இருந்து எடுத்தா, தவறான சர்ச்சை ஏற்பட வாய்ப்பு உண்டு. அதுதான் எனக்கும் நடந்துச்சு! அதனால்தான் எனது வருத்தங்களைக் கொட்டி, கடந்த நவம்பர் 5-ம் தேதி சோனியாவுக்கு கடிதம் எழுதினேன். ஜனவரி 30-ம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் உண்மைகளைச் சொன்னேன்"

உங்களது கடிதத்தால் நேரு குடும்பத்தின் உறுப்பினர்களான சோனியாவும் ராகுலும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்களே?
"சோனியாவைப் பார்க்க முயற்சி பண்ணினேன். திரும்பத் திரும்ப அப்பாய்ன்மென்ட் கேட்டேன். ராகுல்காந்தியிடம் பலதடவை கேட்டேன். 'பார்க்கவே மாட்டேன், பேசவே மாட்டேன்!ன்னா எப்படி? அப்புறம் என் சைடில் இருந்து பதிலே வரலைன்னா, என்னைப் பற்றி பேசுறதெல்லாம் உண்மைன்னு ஆயிடும் இல்லையா? ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்திக்கு அந்த துயரம் நிகழ்ந்தபோது, மேடம் குடும்பம் வந்து சேரும் வரை விடிய விடிய ஒரு காவலாளி மாதிரி ராஜீவின் உடல் அருகிலேயே நின்றிருந்தவள் நான். அவங்க பேருக்கு பாதிப்பு வரணும், அவங்களைத் தாக்கணும்னு நான் ஒருநாளும் நினைச்சது கிடையாது! அவங்க இப்படி பண்ணிட்டாகலேங்கிற வேதனையில்தான் இப்போ பேசுறேன்!"

'என்னை சோனியா ராஜனாமா செய்ய வைத்தார்' என வெளிப்படையாக நீங்கள் கூறியதால், சோனியா சர்ச்சையில் சிக்கி இருக்கிறாரே?
'அவர் ராஜினாமா செய்யக் கூறினார் என நான் சொல்லியதை இதுவரை சோனியா மறுக்கவில்லை. எனவே அது உண்மை! என்னோட ஆதங்கம், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட எனக்கு கட்சிப் பணி கொடுத்திருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும். அவங்க எதுவுமே சொல்லாவிட்டால், நான் பேசித்தானே ஆகணும்!"

உங்கள் இலாகா மீது தொழில் அதிபர்கள் புகார் சொன்னதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியிருக்கிறாரே?
எந்தத் தொழில் அதிபர்? (குரலை உயர்த்துகிறார்!) பெயரைச் சொல்லட்டும். நான் பதில் கூறுகிறேன். இதை சவாலாகே கோருகிறேன். நான் ராஜினாமா செய்வதற்கு நான்கைந்து மாதங்கள் முன்பு தொழில் அதிபர்கள் புகார் சொன்னதாகக் கூறுகிறார். அப்போ நான்கைந்து மாதங்கள் எதற்கு சைலன்டா இருந்தீங்க? எப்ப நான் தப்பு பண்ணியதா உங்க காதுக்கு வந்ததோ, உடனே என்னைக் கூப்பிட்டு கேட்கணும் இல்லை, என்னை டிராப் பண்ணியிருக்கணும் இல்லையா? எதுக்காக என்னை வச்சுகிட்டிருக்கணும். அது தேசத்திற்குச் செய்யுற துரோகம் இல்லையா? எதுவுமே நடக்கலைங்க! தொழில் வர்த்தக மாநாட்டுக்கு நாளைக்கு அவங்க (ராகுல்) போகணும். அதற்காக நடந்த விஷயம்தான், முன்தினம் என்னை ராஜினாமா செய்ய வைத்தது!"

அமைச்சக பைல்களை நீங்கள் சென்னைக்கு எடுத்து வழக்கமாக வைத்திருந்ததாக குற்றம் சாட்டுகிறார்களே?
"(ஆவேசமாகிறார்) இது அபத்தமான குற்றச்சாட்டு! சென்னைக்கு நான் கிளம்பினால், டெல்லியில் என்னை சென்ட் ஆப் பண்ண, புரோட்டோகால் இருந்தாங்க. சென்னைக்கு வந்ததும் என்னை ரிசீவ் பண்ண புரோட்டோகால் வந்தாங்க. ஸ்டேட் கவர்மென்ட் கார் வந்தது. போலீஸ் வந்தாங்க. இங்க லக்கேஜ் இல்லாமத்தான் நான் டிராவல் பண்ணினேன்.

பைல்களைக் கொண்டு வர முடியுமா? அது எங்கேயும் பதிவாகாதா? ஒரு சிங்கிள் பேப்பரைக்கூட நான் கொண்டு வந்ததில்லைங்க! இதெல்லாம் வெரிபை பண்ணக்கூடிய உண்மை! பைல்களை எடுத்து வந்திருந்தாள், அந்த பைல்களின் மூவ்மென்ட் டெல்லியில் ரெக்கார்ட் ஆகியிருக்கும் இல்ல? அதைக் கேளுங்க!"

நீங்கள் ராஜினாமா செய்த பிறகு சென்னையில் இருந்து நூறுக்கணக்கான பைல்களை சேகரித்ததாக ஆனந்த் சர்மா கூறியிருக்கிறாரே?
"ராஜினாமா செய்ததும் டெல்லியில் நான்தான் பைல்களைக் கொடுத்தனுப்பினேன். எங்கிருந்து சேகரிச்சாங்க! சொல்லச் சொல்லுங்க! ராஜினாமா செய்துட்டு பத்து நாட்கள் கழிச்சுதான் நான் சென்னைக்கே வந்தேன். எனவே, இது அபத்தமான குற்றச்சாட்டு!"

உங்கள் சிறப்புப் பணி அதிகாரியாக இருந்த முன்னாள் எம்.எல்ஏ. காயத்ரிதேவியின் பார்வைக்கு பைல்கள் வந்ததாகக் கூறுகிறார்களே?
"இதுவும் அபத்தமான குற்றச்சாட்டு, ஒரு சிறப்புப் பணி அதிகாரி என்ன செய்திருக்க முடியும்? 'பண்ணினாங்க, பண்ணினாங்க!' என்கிறார்களே தவிர, 'என்ன பண்ணினாங்க!' ன்னு சொல்லவே இல்லையே? நான் கூட சொல்லலாம். நீங்க பைல்களைஎல்லாம் இமாசலப் பிரதேசத்திற்கு எடுத்துட்டுப் போனீங்கன்னு! உடனே அது உண்மையாகிடுமா? சரி, இவ்வளவு நாளும் இதை ஏன் சொல்லல? இப்பத்தான் அது உங்களுக்கு ஞாபகம் வருதா? 'நீ தப்பு பண்ணிட்ட ஆனா நடவடிக்கை எடுக்கிற மாதிரியான சார்ஜஸ் இல்லை. ஆனா என்ன தப்புன்னு சொல்ல மாட்டோம்' ங்கிறாங்க, இதுக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்?"

ராகுல் உங்களிடம் வேண்டுகோள் வைத்ததாக நீங்கள் சொல்வதற்கு என்ன ஆதாரம்?
"ஆதாரம் இருக்கு. ஆனால் அரசியல் நாகரிகம் கருதி, நான் அதை வெளிப்படுத்தவில்லை! தேவைப்பட்டால் வெளிப்படுத்துவேன். ஆனால் அதற்கான தேவை ஏற்படக்கூடாது என ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்".

'ஜெயந்தி டேக்ஸ்' என உங்கள் இலாகா செயல்பாடு குறித்து கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் மோடி விமர்சனம் செய்தபோது, நீங்கள் இந்த ஆவேசத்தைக் காட்டவில்லையே?
'என் கட்சியே என்னை வெளியேற்றிடுச்சு! எதிர்க்கட்சியில சொல்றதைப் பற்றி நான் ஏன் வருத்தப்படனும்? மேடத்தை பற்றியும்தான் அவர் பேசினார். ராகுலைப் பற்றியும்தான் பேசினார். அதனால் ஏதாவது செஞ்சாங்களா? அரசியல்ல எதிர்க்கட்சியில் பேசுரதுக்கெல்லாம் பதில் சொல்லிடிட்டிருந்தா, அதுக்கு முடிவே கிடையாது. நம்மைப் பேசுரதுதானே எதிர்க்கட்சியின் வேலை?"

இப்போது குடும்ப பாரம்பரியம் பாதிக்கபடுவதாகச் சொல்லும் நீங்கள், அந்த கடுமையான குற்றச்சாட்டுக்கு ஏன் ஒரு அவதூறு வழக்கு கூட போடவில்லை?
"இது என்னோட குற்றச்சாட்டுகளுக்கும் என்னோட கடிதத்திற்கும் அப்பாற்பட்ட சர்ச்சை! எதிர்க்கட்சிக்காரர் என்ன வேணாலும் பேசிட்டுப் போறார். நீங்க பண்ணினதால்தானே அவர் பேசுறார். முதல்நாள் 'ஸ்னூப்கேட்' விஷயத்தில் அவரை அட்டாக் செய்ய வச்சீங்கல்ல, அதனாலதான் பேசுறாரு!'

ஸ்னூப்கேட் (குஜராத்தில் இரு பெண்ணை உளவு பார்க்க ஏற்பாடு செய்ததாக கிளம்பிய புகார்) விஷயத்தில் மோடியைத் தாக்கிப் பேசுவது உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றால், சோனியாவிடம் கூறியிருக்கலாமே?
"சொன்னேனே! அஜய் மக்கானிடம் சொன்னேன். முதலில், நான் ஒரு அமைச்சர்! இரண்டாவதாக, ஒரு லேடியைப் பற்றிப் பேசுவது எனக்கு பிடிக்கவில்லை. அதேசமயம், யாரும் கை கால்களைக் கட்டி தரதரவென இழுத்துட்டு போய், கன் பாயின்டில் பேச வைக்கவில்லை. கட்சியின் கட்டுப்பாடான தொண்டராக, அதைச் செய்தேன்.

2013 நவம்பர் 20-ல் ஸ்னூப்கேட் விஷயத்தைப் பேச வைத்தார்கள். டிசம்பர் 20-ல் என்னை ராஜினாமா செய்ய வைத்தனர். டிசம்பர் 21-ம் தேதி தொழில் வர்த்தக மாநாட்டில் ராகுல் பங்கேற்கிறார். இந்த திட்டமிட்ட சம்பவங்களின் தொடர்ச்சியைத்தான் நான் சொன்னேன்!'

அந்த மாநாட்டில் ராகுலின் பேச்சுதான் உங்களைக் காயப்படுத்தியிருக்கிறது?
"யு டியூப்பில் பார்த்துட்டு நான் அழுதுட்டேங்க! நீங்க சொன்னதைத்தானே செஞ்சேன்? அதுக்கு ஏன் இப்படி பேசுறீங்க! உடனே அவருக்கு இ – மெயிலில் கடிதம் எழுதினேன். 'ஒரு கொலைகாரனுக்குக்கூட கோர்ட்ல வாய்ப்பு கொடுப்பாங்களே! ன்னு கேட்டேன். 'உங்களை சந்திக்கிறேன்! ன்னு அவர் பதில் அனுப்பியதோடு சரி!"

பிரதமர் நரேந்திர மோடியின் தூண்டுதலில் நீங்கள் பேசுவதாக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சிக்கிறார்களே?
"ஏதாவது சொல்லியாக வேண்டும் என்பதற்காக அப்படி விமர்சிக்கிறார்கள். என்னால் அதை மறுக்க மட்டுமே முடியும். புகார் சொல்பவர்கள்தான் அதை நிரூபிக்க வேண்டும்."
காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தங்களின் தவறுகளில் இருந்து தப்புவதற்காக பா.ஜ.க. ஆதரவு நிலையை எடுப்பதாக வரும் விமர்சனங்கள் குறித்து?

"நான் பா.ஜ.க.வை ஆதரித்து எங்கும் பேசவில்லையே! அந்த விமர்சனம் எனக்கு பொருந்தாது. என்னைப் பொறுத்தவரை, இந்த வேதனையில் இருந்து நான் வெளியே வரணும். எதிர் காலத்தைப் பற்றி நினைக்கும் சூழலில் இப்போது நான் இல்லை."

'பா.ஜ.க.வுக்குப் போகமாட்டேன்!' என உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?
"எந்தக் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. பாலிடிக்ஸ் என்றாலே பயமாக இருக்கிறது. 'நம்மை என்ன சொல்வாங்களோ. அதைத் தாங்கும் சக்தி நமக்க இருக்கிறதா? என்கிற அளவுக்கு வேதனையாக இருக்கிறது."

நன்றி : குமுதம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...