வளைகுடா நாடுகளுடன், அதிலும் குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்துடனான இந்திய உறவு என்பது நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பரிமாற்றம் 6,000 கோடி டாலர்களுக்கும் அதிகம். 2013-இல் 7,300 கோடி டாலராக இருந்த வர்த்தகப் பரிமாற்றம் 6,000 கோடி டாலராகக் குறைந்திருக்கிறது என்றாலும்கூட, இப்போதும் ஐக்கிய அரபு அமீரகம்தான் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தகக் கூட்டாளி. இரண்டாவது அதிகமான இந்திய ஏற்றுமதி ஐக்கிய அரபு அமீரகத்துக்குதான்.
வளைகுடா நாடுகளைத்தான் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா எதிர்நோக்கி இருக்கிறது. நாம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் 9% ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்துதான் வாங்குகிறோம். பிரதமரின் பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியின் அளவை அதிகரிப்பது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏறத்தாழ 26 லட்சம் இந்தியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்கள் அந்த நாட்டின் மக்கள்தொகையில் 30%. அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்களைப்போல அல்லாமல் இவர்களில் பெரும்பாலோர் தொழிலாளர்கள். கார் ஓட்டுநர்கள், மெக்கானிக்குகள், பிளம்பிங், எலக்ட்ரீஷியன், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்கள் என்கிற பிரிவினர். அவர்கள் வாழும் குடியிருப்புக்குப் பிரதமர் மோடி சென்று குறைகளைக் கேட்டறிந்தது, அவர்களுக்கு மட்டுமல்ல, இந்திய அரசியலுக்கே புதிய அனுபவம்.
உயர் கல்வித் தேர்ச்சி பெறாத இந்தத் தொழிலாளர்களின் நலன் பற்றித் தாய்நாடான இந்தியா எப்போதுமே அதிக அக்கறை எடுத்துக் கொண்டதில்லை. உலகிலேயே அயல்நாடு வாழ் குடிமக்கள் தாயகத்திலுள்ள குடும்பங்களுக்கு மிக அதிகமாகப் பணம் அனுப்பும் தேசமாக இந்தியா திகழ்கிறது. 2012-ஆம் ஆண்டுப் புள்ளிவிவரப்படி, 6,900 கோடி டாலர் இந்தியாவுக்கு அயல்நாட்டு வாழ் இந்தியர்களால் அனுப்பப்பட்டிருக்கிறது. இதில் வளைகுடா நாடுகளின் பங்கு 3,100 கோடி டாலர் என்றால், அதில் 1,570 கோடி டாலர் ஐக்கிய அரபு அமீரக இந்தியர்களால் அனுப்பப்பட்டது.
வர்த்தகரீதியாகவும் சரி, நமக்கு அன்னியச் செலாவணியை வழங்குவதாலும் சரி, இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவை வைத்துக் கொண்டிருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குக் கடந்த 34 ஆண்டுகளாக இந்தியப் பிரதமர்கள் யாருமே அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. சிறிய நாடுதானே என்கிற அசிரத்தை காரணமா அல்லது வெளியுறவு அமைச்சகத்தின் மெத்தனம் காரணமா என்று தெரியவில்லை. இந்திரா காந்தியின் 1981 பயணத்துக்குப் பிறகு எந்தப் பிரதமரும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவில்லை. அந்தத் தவறைப் பிரதமர் நரேந்திர மோடி திருத்தியிருக்கிறார் என்பதற்காக அவரைப் பாராட்டலாம்.
அமெரிக்க நியூயார்க் மேடிசன் சதுக்கத்திலும், ஆஸ்திரேலிய சிட்னி ஒலிம்பிக் பூங்காவிலும் அந்நாடுகளில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதற்கும், பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்கள் மத்தியில் துபை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பேசியதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அயல்நாடு வாழ் தொழிலாளர்கள் நலனிலும் இந்தியா பெரிதும் அக்கறை கொண்டிருக்கிறது என்கிற சமிக்ஞையை வளைகுடா நாடுகள் அனைத்துக்குமே இது தெரியப்படுத்தி இருக்கும்.
நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு அமீரகப் பயணம் இந்தியாவுக்கு இன்னொரு நன்மையையும் உருவாக்கக் கூடும். ஐக்கிய அரபு அமீரகத்திடம் சேமிப்பாக இருக்கும் 80,000 கோடி டாலர் நிதி இந்தியாவின் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கப் பேருதவியாக இருக்கும். அந்த நிதியிலிருந்து அமீரகம் இந்தியாவில் சில நூறு கோடி டாலர்களை முதலீடு செய்ய முனைந்தால்கூட, அது பல கட்டமைப்புத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த உதவும்.
உலகளாவிய அளவில் பழைய வெளியுறவுச் சிந்தனைகள் சிதைந்துவிட்டிருக்கின்றன. இஸ்ரேலுடன் தொடர்பு ஏற்படுத்துவது அரபு நாடுகளுக்கு எதிரானது என்றும், அரபு நாடுகளுடன் நல்லுறவாக இருப்பது இஸ்ரேலுக்கு எதிரானது என்றும் கருதப்பட்ட காலம் மலையேறிவிட்டது. அரசியல், பொருளாதார, பாதுகாப்பு அவசியங்கள் அமெரிக்காவையும், சீனாவையுமே மத்திய கிழக்காசிய உறவை அரேபிய – இஸ்ரேல் பிரச்னையை அகற்றிவைத்துப் பார்க்கும் அணுகுமுறையைக் கையாள வைத்திருக்கிறது எனும்போது இந்தியாவும் மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதன் தொடக்கமாகத்தான் பிரதமரின் இந்தப் பயணத்தை நாம் பார்க்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்த நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவராக இருந்த நரேந்திர மோடி இப்போது பாரதப் பிரதமராகப் புதிய பரிணாமம் எடுத்திருப்பது போலவே, அவரது சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டிருப்பதன் அறிகுறிதான் "ஜாதியம், வகுப்புவாதத்துக்கு இந்தியாவில் இடமில்லை' என்கிற சுதந்திர தின உரையும், ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தின்போது உலகின் மூன்றாவது பெரிய மசூதியான ஷேக் சயீது மசூதிக்கு அவர் பயணம் செய்ததும். அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்கிற பிரதமரின் அணுகுமுறை மாற்றத்தை நாம் வரவேற்றாக வேண்டும்!
பொருளாதாரரீதியாகவும், ராஜதந்திரரீதியாகவும், நட்புறவு அடிப்படையிலும் பிரதமரின் ஐக்கிய அரபு அமீரக அரசு முறைப் பயணம் வெற்றி பெற்றிருக்கிறது என்பதுதான் உண்மை.
நன்றி ; தினமணி
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.