கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 3-ஆவது வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதாதளம் (ஆர்ஜேடி) கட்சித்தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
இதேபோல், பிகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ராவுக்கும் 5 ஆண்டு கடுங் காவல் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பிகார் மாநில முதல்வராக லாலு பதவிவகித்தபோது, கால்நடைகள் தீவனத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ.940 கோடியை போலிரசீதுகள் தயாரித்து முறைகேடு செய்ததாக 5 வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதில் சைபாஸா கருவூலத்தில் போலி ரசீதுகள் மூலம் ரூ.37.7 கோடி முறைகேடு செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர்மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது லாலுவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ஜெகந்நாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டு சிறைதண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, லாலு பிரசாத் தனது எம்.பி. பதவியை உடனடியாக இழந்தார். மேலும், தேர்தலில் போட்டியிடும் தகுதியும் பறிபோனது.
இதனிடையே, தேவ்கர் கருவூலத்தில் போலிரசீதுகள் மூலம் ரூ.89.27 லட்சம் முறைகேடு செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், கடந்த 6ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் லாலுவுக்கு மூன்றரை ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்ற 3ஆவது வழக்கான, சைபாஸா கருவூலத்தில் ரூ.37.62 கோடி முறைகேடு செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து நீதிபதி எஸ்எஸ். பிரசாத் தனது தீர்ப்பை புதன் கிழமை வெளியிட்டார். அப்போது நீதிபதி கூறுகையில், 'லாலு, ஜெகந்நாத் மிஸ்ரா, முன்னாள் அமைச்சர் வித்யாசாகர் நிஷாத், சட்டப்பேரவை பொது கணக்கு குழு முன்னாள் தலைவர் ஜெகதீஷ் சர்மா, முன்னாள் எம்எல்ஏக்கள் துருவ் பகத், ஆர்.கே. ராணா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் பூல் சந்த் சிங், மகேஷ் பிரசாத், சஜல் சக்கரவர்த்தி உள்ளிட்ட 50 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகின்றனர்' என்றார்.
இதைத் தொடர்ந்து, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டோருக்கு தண்டனை விவரங்களை நீதிபதி பிற்பகலில் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:
இந்திய தண்டனையியல் சட்டத்தின் 120பி, 409, 420, 467,468,471, 477ஏ ஆகிய பிரிவுகளின்கீழ் லாலுவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. ஊழல் தடுப்புச் சட்டம் 13(2)ஆவது பிரிவின்கீழும் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது. இதற்காக அவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த 2 தண்டனைகளை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும்.
ஜெகந்நாத் மிஸ்ராவுக்கும் 5 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை விதிக்கப்படுகிறது. அபராதத் தொகையை லாலுவும், ஜெகந்நாத் மிஸ்ராவும் கட்டாத பட்சத்தில், கூடுதலாக ஓராண்டு காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.இதேபோல், ஜெகதீஷ் சர்மா, ஆர்.கே. ராணா ஆகியோருக்கும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. வித்யாசாகர் நிஷாத், துருவ் பகத் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இருவரும் அபராதத் தொகையை கட்டாதபட்சத்தில், கூடுதலாக 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
பூல் சந்த் சிங், மகேஷ் பிரசாத், சஜல் சக்ரவர்த்தி ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத்தை கட்டாதபட்சத்தில், கூடுதலாக 3 மாதம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி அறிவித்தார்.
இதேபோல், வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பல்வேறுவிதமான சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.
நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டதும், அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக ஆர்ஜேடி கட்சி அறிவித்தது. இதுகுறித்து லாலுவின் மகனும், பிகார் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், 'நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுவோம்; ஆனால், சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு மட்டும் இறுதியானதல்ல. உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். தேவைப்பட்டால், உச்ச நீதிமன்றத்துக்கும் செல்வோம். எனது தந்தையை பாஜகவும், முதல்வர் நிதீஷ் குமாரும் திட்டமிட்டு சிக்கவைத்து விட்டனர்' என்றார்.
இந்த 3 வழக்குகளைத் தவிர்த்து, லாலுவுக்கு எதிராக மேலும் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதாவது, தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.97 கோடி எடுத்தது, தூரந்தாகருவூலத்தில் இருந்து ரூ.184 கோடி எடுக்கப்பட்டது தொடர்பான 2 வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. விரைவில் அந்தவழக்குகளிலும் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகவுள்ளது.
பாஜக மூத்த தலைவரும், பிகார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி கூறுகையில், 'லாலுவை சிக்க வைத்து விட்டதாக கூறுவதை ஏற்கமுடியாது. இவ்வாறு கூறுவது, நீதித்துறை மீது சந்தேகத்தை எழுப்புவது போன்றதாகும்' என்றார்.
ஐக்கிய ஜனதாதளம் (ஜேடி(யூ) கட்சி செய்தி தொடர்பாளரும், சட்ட மேலவை உறுப்பினருமான சஞ்சய் சிங் கூறுகையில், 'ஊழல் வழக்கில் லாலு தண்டிக்கப் பட்டுள்ளார். அவரை கதாநாயகன் என்று தெரிவித்திருப்பது, ஆர்ஜேடி எத்தகைய கீழத் தரமான அரசியலில் ஈடுபட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது' என்றார்.
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.