குஜராத் தொடர்பான இந்தக் கட்டுரைத் தொடரைப் படித்து விட்டு, மோடியின் தலைமையிலான குஜராத் அரசைப் பாராட்டுவோர்தான் அதிகம் என்றாலும், எதிர் விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. தபாலில், நேரில், ஆன்லைனில் சிலர் வைத்த விமர்சனங்களை முதலில் பார்க்கலாம்.
மோடி புகழ்பாடும் சோ-வின் ராகத்திற்கு இதயாவின் ஜால்ரா
மிகப் பொருத்தம். மோடியின் மதத் துவேஷம், போலி என்கௌன்டர் ஆகிய பூச்சாண்டி பக்கங்களை மறைத்து, இன்னொரு பக்கத்தை மட்டும் பிரசுரித்து வாசகர்களை ஏமாற்றும் முயற்சி இது என்பது ஓரிருவரின் கருத்து.
துக்ளக் வர்ணம் பூசும் அளவிற்கு குஜராத் 'ரோஸி'யானது அல்ல. நான் பரோடாவில்தான் வசிக்கிறேன். மழை தண்ணீர் இங்கு தேங்கி நிற்கும் – என்கிறார் 'ஃபேஸ் புக் துக்ளக் ஃபேன்ஸ் க்ளப்'பைச் சேர்ந்த ஒரு வாசகர்.
குஜராத்திலும் லஞ்சம், ஊழல் இல்லாமல் இல்லை. தமிழகத்தை மட்டம் தட்டும் முயற்சியை ஏற்க முடியாது – என்கிறார் குஜராத்தில் சில காலம் வாழ்ந்த தொழிலதிபர் ஒருவர்.
குஜராத்தில் நிர்வாகம் சிறப்பாக நடக்கிறது என்பதைப் பல பத்திரிகைகளும், பல வெப்ஸைட்களும் கட்டுரைகளாக எழுதிக் குவித்த பிறகுதான், 'துக்ளக்'கும் அந்த முன்னேற்றங்களைப் பார்த்து ஒரு தொடர் எழுத முடிவு செய்தது. பல உலகளாவிய விருதுகளும், எதிர்க் கட்சி அரசாக மத்திய அரசு இருந்தாலும், வேறு வழியே இல்லாமல் குஜராத் அரசுக்கு பல விருதுகளை மத்திய அரசு வழங்கியது. குஜராத்தின் புகழ், உச்சிக்குச் சென்ற பிறகுதான், 'துக்ளக்' சார்பாக குஜராத் செல்ல முடிவெடுத்தோம். மற்ற மாநிலங்களில் செய்ய முடியாததை மோடி எப்படி செய்கிறார் என்ற வியப்போடு குஜராத் சென்ற நாங்கள், அந்த கோணத்தில்தான் தகவல்களைத் திரட்டினோம்.
ஏதோ 'உண்மை அறியும் குழு'வைப் போல, கோத்ரா கலவரம் பற்றியோ, அங்கு நடந்த என்கௌன்டர்கள் நிஜமா, போலியா என்பது பற்றியோ நாங்கள் ஆய்வு செய்யப் போகவில்லை. குஜராத் பெற்றுள்ள வளர்ச்சி என்ன, அது அங்கு எப்படி சாத்தியமாயிற்று என்பதை அறிவதே எங்கள் இலக்காக இருந்தது. எனினும், மோடியைப் பற்றி நான் சில கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களிடம் கருத்துக்களைக் கேட்டேன். அவை இந்தத் தொடரில் இடம் பெறுகின்றன.
அடுத்ததாக, குஜராத்திற்கு அதிகப்படியான வண்ணம் தீட்டுவதான குற்றச்சாட்டு. நான் பார்த்த ஈஸ்வர்புரா கிராமத்துச் சாலைகளில் தண்ணீர் நிற்காத அளவிற்கு உள்ள வடிகால் வசதி பற்றிச் சிலாகித்து, சிங்கப்பூரோடு ஒப்பிட்டு எழுதியிருந்தேன். இதைத்தான் அந்த வாசகர் குறை சொல்கிறார். இந்தியாவில் ஒரு கிராமத்தை இப்படி உருவாக்கி இருப்பது பாராட்டுக்குரிய முயற்சி. இதைத்தான் எல்லா கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் கொண்டு வர குஜராத் அரசு முயற்சி செய்து வருகிறது. பரோடாவில் மட்டுமல்ல; அகமதாபாத்திலும், சூரத்திலும் கூட தண்ணீர் தேங்கி நிற்கக் கூடும். அப்படி நிற்கக் கூடாது என்ற முனைப்பில் குஜராத் அரசு செயல்பட துவங்கியிருப்பதைத்தான் துக்ளக் பாராட்டுகிறது.
வாதம் செய்வதானால், கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு கடும் மழை நேரத்தில், பாதாள சாக்கடைகள் அடைத்துக் கொண்டதால், சிங்கப்பூரில் கூட கட்டடங்களுக்குள் வெள்ளம் புகுந்ததை சுட்டிக்காட்டி, சிங்கப்பூரை இனி புகழவே கூடாது என்று கூட வாதம் செய்யலாம்.
குஜராத்திலும் லஞ்சம், ஊழல் இருக்கிறது. ஆள் கடத்தல் நடக்கிறது. தெருவோரத்தில் சிறுநீர் கழிப்பதும், பான்பராக் போட்டு கண்ட இடத்தில் துப்புவதும் கூட இருக்கிறது. ஆனால், பான்பராக் துப்புவதை தவிர்த்து விட்டுப் பார்த்தால், மற்ற விஷயங்கள் எல்லாம் எண்ணிக்கையிலும், அளவிலும் குஜராத்தில் குறைவு என்றே சொல்ல வேண்டும். ஐந்து வருடங்கள் ஒருவர் ஆட்சியில் இருந்தாலே எவ்வளவோ ஊழல் குற்றச்சாட்டுகள் கிளம்பி வருகின்றன. ஆனால், மோடி 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்தும் பெரியளவிலான ஊழல் குற்றச்சாட்டுகள் எதிலும் அவர் சிக்கவில்லை. அநியாயத்துக்கு சொத்து சேர்த்து விட்டார் என்ற புகாருக்கும் ஆளாகவில்லை. "முதல்வர் க்ளீனாக இருக்கும்போது படிப்படியாக அமைச்சர்களும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் ஊழலைவிட்டு தள்ளி நிற்கிறார்கள். உயரதிகாரிகள் கறாராக இருக்கும் நிலையில், அடுத்தடுத்த கட்டத்தில் உள்ள அதிகாரிகளும் படிப்படியாக லஞ்சத்தைக் குறைக்க வேண்டியுள்ளது. இப்படி கடந்த 10 ஆண்டுகளில் லஞ்சமும், ஊழலும் இங்கு நிறையவே குறைந்துள்ளது. இது மேலும் குறையும் என்று நம்புகிறேன்" என்று என்னிடம் குறிப்பிட்டார் அங்குள்ள ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி.
இந்த கட்டுரைத் தொடரில் தமிழகத்தை மட்டம் தட்டும் எந்த முயற்சியும் இருந்ததாகத் தெரியவில்லை. தமிழகமும் இப்படி மாற வேண்டும் என்ற ஏக்கம் வேண்டுமானால் தொனித்திருக்கலாம். குஜராத்தில் ஐந்து நாட்கள் சுற்றிவிட்டு விடைபெறும் வேளையில், குடிநீர் துறையினர் தங்கள் 'கெஸ்ட் புக்'கை என்னிடம் நீட்டி, எனது கருத்தைப் பதிவு செய்யச் சொன்னார்கள். நான் இப்படி எழுதிக் கையெழுத்திட்டேன் : "எனக்கு குஜராத்தில் வசிக்கும் வாய்ப்பு அமையவில்லை; என் மாநிலத்தில் குஜராத் அரசு போன்ற ஓர் அரசு இன்னும் வாய்க்கவில்லை என்ற பொறாமையுடன் விடை பெறுகிறேன்." குஜராத் மீது அப்படி ஒரு பொறாமையும், தமிழகம் அப்படி மாறாதா என்ற ஏக்கமும் ஏற்பட்டதுதான் உண்மையே தவிர, தமிழ்நாட்டை எங்கும் மட்டம் தட்டவில்லை. தமிழகத்தில் நடந்துள்ள ஆன்லைன் முன்னேற்றங்கள் குறித்தும், 'த சன்டே இந்தியன்' நடத்திய சர்வேயில், தமிழகம் மூன்றாமிடத்தில் இருப்பதையும் கூட இந்தத் தொடரில் குறிப்பிட்டிருக்கிறேன். மோடிக்கு வக்காலத்து வாங்கவோ, பொய்யான ஒரு மாயக் காட்சியை உருவாக்கவோ துக்ளக் ஆசிரியர் எனக்கு உத்திரவிடவில்லை. நானும் அப்படி ஒரு எண்ணத்தோடு எழுதவில்லை. இயல்பாக நான் பார்த்து வியந்தவற்றை மட்டும் எழுதியுள்ளேன்.
எனது நண்பர் ஷமீர் பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரையில். தற்போது அகமதாபாத்தில் திருமணமாகி செட்டில் ஆகியுள்ளார். ரோடு போடும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். அவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். "இங்கு வாழ்க்கை மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. ஸி.எம். என்பவர் மற்ற மாநிலங்களில் சீஃப் மினிஸ்டராக இருக்கலாம். இங்கு அவர் 'காமன் மேன்'. நரேந்திர மோடியே ஸி.எம். என்ற சுருக்கத்திற்கு அளித்த விளக்கம் இது. ஆனால், அதையேதான் நாங்களும் நினைக்கிறோம். சாதாரண மக்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் அவர் அறிந்து வைத்திருக்கிறார். மேலும் அவர் எட்ட முடியாத உயரத்தில் இருப்பதாக இங்குள்ள யாரும் நினைக்கவில்லை. அதற்குக் காரணம் அவரது எளிமைதான். எந்தப் புகாராக இருந்தாலும் 'காப்பி டூ ஸி.எம்.' என்று போட்டு விட்டால் போதும், அலறியடித்துக் கொண்டு வேலை நடக்கும்.
"ஒரு சாலையை அகலப்படுத்துவதானால், தமிழகத்திலோ, மற்ற மாநிலங்களிலோ தங்கள் இடத்தை அரசுக்கு வழங்க மக்கள் எவ்வளவு தயங்குகிறார்கள்? எத்தனை போராட்டம் நடக்கும்? எத்தனை வழக்குகள் நீதிமன்றத்திற்குச் செல்லும்? ஆனால், குஜராத்தில் வருடம் முழுவதும், ஏதேனும் ஒரு பகுதியை அரசு வசப்படுத்தி, விரிவாக்கப் பணிகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. காரணம், மக்கள் மோடி மீது வைத்திருக்கும் நம்பிக்கை. வேறு வழியில்லாமல்தான் மோடி நம் இடத்தில் கை வைப்பார் என்று மக்கள் நம்புகிறார்கள். அதே போல், மோடியின் அரசாங்கமும், மக்கள் எதிர்பார்க்கும் இழப்பீட்டை வழங்கி விடுகிறது. இந்த மோடி – மக்கள் இடையேயான அண்டர்ஸ்டாண்டிங்தான் குஜராத்தின் பெரிய ப்ளஸ் பாயின்ட்.
"அகமதாபாத்திலுள்ள பல முஸ்லிம் ஏரியாக்கள் தனித் தீவுகள் போல் இருக்கும். அப்பகுதிகளுக்கு செல்ல ஹிந்துக்கள் பயப்படுவார்கள். அந்த பகுதிகளை 'பாகிஸ்தான்' என்ற நிக் நேமில்தான் அழைப்பார்கள். அதேபோல் அங்குள்ள முஸ்லிம்கள் பெரும்பாலும் தங்கள் தேவைகளை அப்பகுதிக்குள்ளேயே முடித்துக் கொள்வார்கள். ஆண்களில் சிலர் மட்டும்தான் வெளியே வந்து தொழில் செய்வார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இருந்தது. "இதெல்லாம் பத்து வருடங்களுக்கு முன்பு. இப்போது அந்தப் பகுதிகளுக்குள்ளும் பிரமாண்டமான சாலை வசதி மற்றும் பி.ஆர்.டி.எஸ். பஸ் வசதிகளைக் கொண்டு வந்து, எல்லோரும் அந்த வழியில் பயமின்றி பயணம் செய்யவும், அங்குள்ள மக்கள் சர்வசாதாரணமாக நகரின் எல்லா பக்கங்களிலும் நடமாடவும் வழி செய்து விட்டது குஜராத் அரசு. பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த அந்த அந்நிய மனோபாவம் இப்போது ஹிந்துக்களிடமும் இல்லை; முஸ்லிம்களிடமும் இல்லை. எல்லோரும் இயல்பாய்க் கூடி வாழ்கிறார்கள்" என்கிறார் ஷமீர்.
தொழிலதிபர் இப்படிச் சொல்கிறார். சாலையோர வியாபாரிகளும், கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டு வாழ்வோரும் என்ன சொல்கிறார்கள்? கிறிஸ்தவ, முஸ்லிம் மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது? அடுத்த வாரம் பார்க்கலாம்.
நன்றி எஸ்.ஜே.இதயா துக்ளக்
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.