“அமெரிக்க அதிபர், பரஸ்பர வரி விதிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், வங்கக் கடல் ஒத்துழைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின்போது, குழப்பமான உலக சூழல் நிலவி வரும் நிலையில், அதை எதிர்கொள்ள இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்,” என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் இருதரப்பு உறவு கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், 2016ல் அந்த நாட்டில் நடந்த சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது.
இதைத் தொடர்ந்து, சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள மற்ற நாடுகளுடன் இணைந்து, ‘பிம்ஸ்டெக்’ எனப்படும் வங்கக் கடல் பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவுக்கான முயற்சி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பின் மாநாடு, தாய்லாந்தின் பாங்காக்கில் இன்று நடக்க உள்ளது. இதில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா, சீனா உட்பட பல நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிப்பு அறிவிப்பை நேற்று முன்தினம் வெளியிட்டார். இதில், பிம்ஸ்டெக் அமைப்பில் உள்ள ஏழு நாடுகளில், ஐந்து நாடுகள் இடம்பெற்றுள்ளன.
பிம்ஸ்டெக் மாநாட்டை முன்னிட்டு, அதன் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஜெய்சங்கர் பேசியதாவது:
தற்போது மிகவும் நிலையில்லாத, குழப்பமான காலகட்டத்தில் இந்த உலகம் உள்ளது. இந்தச் சூழலில் இருந்து தப்பித்து, அதை எதிர்கொள்ள பிம்ஸ்டெக் நாடுகள் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த புதிய நடைமுறைகள், குறிப்பிட்ட பிராந்தியங்களையும் குறிப்பிட்ட நோக்கங்களையும் குறி வைத்துள்ளது தெரியவருகிறது. இந்த நேரத்தில் நம் எதிர்காலம் நம்மிடமே உள்ளது. வளர்ந்து வரும் நாடுகளான நாம், இந்த பலதரப்பட்ட சவால்களை, தனிப்பட்ட வகையில் அல்லாமல் ஒன்றாக இணைந்து எதிர்கொள்வதே சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
வர்த்தகம், முதலீடு, சேவைகள், தொடர்புகள் போன்றவற்றில், நமக்குள்ள ஒட்டுமொத்த ஆற்றல்களில் மிகவும் குறைந்த அளவே பயன்படுத்தி வருகிறோம். வங்கக் கடலில், 6,500 கி.மீ., துார கடற்கரையை இந்தியா கொண்டுள்ளதால், அனைவருடன் இணைந்து செயல்பட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்துள்ளோம்.
பிம்ஸ்டெக் அமைப்பில் உள்ள ஒவ்வொரு நாட்டுடனும் தனிப்பட்ட முறையில் இந்தியா வலுவான உறவை வைத்துள்ளது. அதுபோல, நாம் அனைவரும் கூட்டாக இணைந்து செயல்பட்டால், தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய சவால்களை திறம்பட சமாளிக்க முடியும் என்பதை நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
நேற்று நடந்த வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பில், உறுப்பு நாடுகளுக்கு இடையே கடல்சார் ஒப்பந்தம் கையெழுத்தானது.
உறுப்பு நாடுகளுக்கு இடையே துறைமுக போக்குவரத்தை மேம்படுத்துதல், சுங்கம் மற்றும் குடிவரவு நடைமுறைகளை எளிதாக்குதல் மற்றும் துறைமுக உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் வாயிலாக கடல்சார் இணைப்பை இந்த ஒப்பந்தம் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக்கடல் பகுதி ஒரு கடல்சார் களமாகும், அதனால்தான் கடல்சார் இணைப்பை மேம்படுத்துவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |