‘பிம்ஸ்டெக்’ நாடுகளின் கட்டண முறைகளுடன் இந்தியாவின் யு.பி.ஐ.,யை இணைப்பது மற்றும் உறுப்பு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த ‘பிம்ஸ்டெக்’ வர்த்தக சபையை அமைப்பது உள்ளிட்ட 21 அம்ச செயல் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.
இந்தியா, வங்கதேசம், நேபாளம், மியான்மர், தாய்லாந்து, இலங்கை மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் இணைந்து, ‘பிம்ஸ்டெக்’ எனப்படும், ‘பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்கக்கடல் நாடுகளின் முன்முயற்சி’ என்ற அமைப்பை உருவாக்கின.
இந்த அமைப்பின், ஆறாவது உச்சி மாநாடு, தாய்லாந்தின் பாங்காக் நகரில் ஏப்., 3, 4ம் தேதிகளில் நடந்தது.
இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், கடல்சார் ஒப்பந்தம், அரசுத்துறைகளில், ‘டிஜிட்டல்’ உட்கட்டமைப்பை உருவாக்க இந்தியாவின் உதவியை பெறுவது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று நடந்த மாநாட்டில் பிம்ஸ்டெக் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய, 21 அம்ச செயல் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார்.
இது குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளதாவது:
‘பிம்ஸ்டெக்’ உலகளாவிய நலனுக்கான அமைப்பு. அதை வலுப்படுத்துவதும், நம் ஈடுபாட்டை ஆழப்படுத்துவதும் அவசியம். இந்தச் சூழலில், எங்கள் ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய, 21 அம்ச செயல் திட்டத்தை முன்மொழிந்துள்ளேன்.
இது வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, பாதுகாப்பு, விண்வெளி, பயிற்சி, திறன் மேம்பாடு, எரிசக்தி, கலாசாரம் உட்பட பல்வேறு துறைகளில் பரவியுள்ளது.
‘பிம்ஸ்டெக்’ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான விரிவான அணுகுமுறையை இது பிரதிபலிக்கிறது. இந்தியா பல முன்முயற்சிகளை நடத்துவதன் வாயிலாக தலைமைப் பொறுப்பை வகிக்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி முன்மொழிந்த 21 அம்ச செயல் திட்டம்:
வர்த்தகம்
1’பிம்ஸ்டெக்’ நாடுகள் இடையே வர்த்தக உறவை வலுப்படுத்த, ‘பிம்ஸ்டெக்’ வர்த்தக சபை நிறுவுதல்.
2ஆண்டுதோறும், ‘பிம்ஸ்டெக்’ வர்த்தக மாநாட்டை நடத்துவது.
3அமெரிக்க டாலரை சார்ந்திருப்பதைக் குறைக்கவும், பிராந்திய நிதி சுயாட்சியை மேம்படுத்தவும், ‘பிம்ஸ்டெக்’ நாடுகளின் உள்ளூர் கரன்சிகளில் வர்த்தகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல்.
ஐ.டி., துறை
4 அரசுத்துறைகளில், ‘டிஜிட்டல்’ உட்கட்டமைப்பை பகிர்ந்து கொள்ள, ‘பிம்ஸ்டெக்’ நாடுகளின் தேவைகளை புரிந்துகொள்வதற்கான முன்னோட்ட ஆய்வு நடத்துதல்.
5’பிம்ஸ்டெக்’ நாடுகளின் கட்டண முறைகளுடன் நம் நாட்டில் உள்ள யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த கட்டண தளத்தை இணைப்பது.
பேரிடர் மேலாண்மை
6 பேரிடர் தயார்நிலை, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த, இந்தியாவில் பேரிடர் மேலாண்மைக்கான, ‘பிம்ஸ்டெக்’ சிறப்பு மையத்தை நிறுவுதல்.
7’பிம்ஸ்டெக்’ பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கு இடையிலான, நான்காவது கூட்டுப் பயிற்சிகளை இந்த ஆண்டு இந்தியாவில் நடத்துவது.
பாதுகாப்பு
8சைபர் கிரைம், சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், பயங்கரவாதம், போதைப்பொருள் மற்றும் ஆள் கடத்தலை எதிர்ப்பதில் ஒத்துழைப்பை வலுப்படுத்த, உள்துறை அமைச்சர்களின் முதல் கூட்டத்தை இந்தியாவில் நடத்துவது.
9விண்வெளி தொழில்நுட்ப ஒத்துழைப்பை முன்னேற்றுவது மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு வாயிலாக பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்த, ‘பிம்ஸ்டெக்’ நாடுகள் இடையே மனிதவள பயிற்சிக்கான மையங்களை அமைப்பது, ‘நானோ’ செயற்கைக்கோள்களை தயாரித்தல் மற்றும் ஏவுதல், தொலைநிலை உணர்திறன் தரவுகளை பயன்படுத்துதல்.
திறன் மேம்பாடு
10 மனிதவள உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, ‘பிம்ஸ்டெக்’ நாடுகளை சேர்ந்த, 300 இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் இந்தியாவில் பயிற்சி அளித்தல்.
11 இந்திய வனவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாளந்தா பல்கலையில், ‘பிம்ஸ்டெக்’ மாணவர்களுக்கு உதவித்தொகை.
12 துாதரக புரிதலை மேம்படுத்த, ‘பிம்ஸ்டெக்’ நாடுகளின் இளம் துாதர்களுக்கு ஆண்டுதோறும் பயிற்சி திட்டம்.
13 புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சியில் திறனை வளர்க்க டாடா நினைவு மையம் பயிற்சி அளிக்கும்.
14 பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சி மற்றும் விவசாய கண்டுபிடிப்புகள், அறிவு பகிர்தலை ஊக்குவிக்க சிறப்பு மையங்கள் அமைத்தல்.
இளைஞர் நலன்
15 எரிசக்தி தொடர்பான முன்முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், அத்துறையில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவும், பெங்களூரில் உள்ள, ‘பிம்ஸ்டெக்’ எரிசக்தி மையம் செயல்படத் துவங்கியுள்ளது.
16 எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய, நாடுகளுக்கு இடையிலான மின்சார கிரிட் இணைப்பை விரைவுபடுத்துவது.
17 ‘பிம்ஸ்டெக்’ நாடுகளின் இளம் தலைவர்கள் மாநாட்டை ஆண்டுதோறும் நடத்துவது.
18 ‘பிம்ஸ்டெக்’ தடகள போட்டியை இந்தாண்டு இந்தியாவில் நடத்துவது.
19 முதல், ‘பிம்ஸ் ெடக்’ விளையாட்டை 2027ல் நடத்துவது.
கலாசாரம்
20 ‘பிம்ஸ்டெக்’ பாரம்பரிய இசை திருவிழாவை இந்தாண்டு இந்தியாவில் நடத்துவது.
21 நிலையான கடல் சார் போக்குவரத்து மையத்தை இந்தியாவில் அமைப்பது.
இந்த மாநாடு முடிந்ததும், பிரதமர் மோடி, தாய்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கைக்கு சென்றார்.
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |