நீண்ட நாட்களுக்குப்பின் மீண்டும் திருப்புகழ் விளக்கம்! இதை எழுதத் தூண்டிய 'அடியாருக்கு' என் பணிவன்பான வணக்கம். விநாயகரைத் துதிக்கும் அற்புதமான இந்தத் திருப்புகழில் ஒரு அருமையான நிகழ்வையும் எடுத்துக் காட்டி, அழகு சேர்த்திருக்கிறார் அருள்மிகு அருணகிரிநாதர்! படிக்கப்படிக்கத் தெவிட்டாத திருப்புகழ் இது! நீண்ட
இடைவெளிக்குப்பின், மீண்டும் திருப்புகழைத் தொடங்கும்வேளை, கணபதியைத் துதித்துத் தொடங்குவது இன்னும் சிறப்பு! இந்த வாய்ப்பினைத் தந்ததற்காகவும் அந்த அடியாருக்கு மீண்டும் என் பணிவன்பான வணக்கம்.[வழக்கம் போலவே நீட்டி முழக்கியே வரும்!]
கணபதி எல்லாம் தருவான்!
முருகனருள் முன்னிற்கும்!
———-
தனதனன தான தனதனன தான
தனதனன தான …… தனதான
……… பாடல் ………
விடமடைசு வேலை அமரர்படை சூலம்
விசையன்விடு பாண …… மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின்விளை வேதும் …… அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி …… வறிதாய
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர …… அருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை …… அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியெ னாம …… முறைகூற
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
அசலுமறி யாமல் …… அவரோட
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
அறிவருளும் ஆனை …… முகவோனே.
————-
வழக்கம்போலவே, பின் பகுதியைப் பார்த்துவிட்டு, பிறகு முன் பாதிக்கு வருவோம்!
இடையர் சிறு பாலை திருடிகொ[ண்]டு போக
இறைவன்மகள் வாய்மை …… அறியாதே
இதயமிக வாடி உடைய பி[ள்]ளை நாத
கணபதி எனு நாம …… முறைகூற
அடையலவர் ஆவி வெருவ அடி கூர
அசலும் அறியாமல் …… அவர் ஓட
அகல்வது எ[ன்]னடா, சொல் எனவும் முடி சாட
அறிவு அருளும் ஆனை …… முகவோனே.
தங்கைதேவகி பெற்றிடுமெட்டாம்
பிள்ளையால்மரணம் எனுமொருசொல்லால்
தங்கையைச்சிறையில் தள்ளியேவருத்தி
அவர்தம்பெற்ற ஏழுசிசுக்களும்
சுவற்றிலறைந்து கொன்றிட்டபாவி
கம்சனென்பானும், எட்டாம்மகவை
அங்ஙனம்செய்திட முயன்றிடும்வேளை
முன்னரேசெய்த திருவுளக்கருத்தால்
கொட்டும்மழையில் ஆயர்பாடியில்
நந்தன்மகனாய் நாரணன்வளர
மாயையின்வடிவம் சிறையிலிருக்க
கம்சன்வந்ததைக் கொன்றிடத்துடிக்கையில்
கைவிட்டகன்று வானிலெழும்பி
'கோகுலக்கண்ணன் வந்துனையழிப்பான்'
என்றேசொல்லி மாயைமறைந்திட
அச்சங்கொண்டுக் கண்ணனைத்தேடி
ஆயர்பாடியில் அரக்கர்தேடிட
அவரறியாமலே ஆங்கவன்வளர்ந்தான்
கண்ணன்செய்திடும் லீலைகள்கண்டு
கோபியரவன்மேல் காதல்கொண்டே
கண்ணனைத்தொடர்ந்து அன்புசெய்தனர்
கோவர்த்தனகிரி தூக்கியலீலை
காளியனுடல்மேல் ஆடியலீலை
பூதனையென்னும் அரக்கியைக்கொன்றது
இருமரம்பிளந்து மோட்சம்தந்தது
வெண்ணைதிருடிட உறியையுடைத்தது
பாலும்தயிரும் உண்டுவளர்ந்தது
என்றிவன்செய்த லீலைகள்விவரம்
கம்சனுமறிந்தே அவனைக்கொன்றிட
அரக்கரையனுப்பிட வந்தவர்கண்ணன்
தீரம்கண்டே யிவனைக்கொல்லல்
எப்படியென்றே திகைத்துநின்றார்.
இதனையறிந்தாள் அன்னைதேவகி
அரக்கர்கையால் பிள்ளைமாளுவான்
என்றவரச்சங் கொண்டேமனதுள்
கணபதிதாளிணை இறுகப்பிடித்தே
பிள்ளையைக்காத்தருள் பிள்ளைப்பெருமாளே
விக்கினம்தீர்க்கும் விக்கினமூர்த்தியே
முழுமுதற்கடவுள் கணபதியேயெனப்
பலவிதநாமம் சொல்லியேதுதித்தார்
அவர்தம்துதியால் உள்ளம்மகிழ்ந்த
கணபதிஆங்கோர் தந்திரம்செய்தார்
கல்லொன்றதனால் மாங்கனியிரண்டு
கொள்வதைப்போல அசுரர்மனதுள்
யாதவர்சேர்த்தப் பாலினைத்திருடவே
எண்ணம்விதைத்திட, அதனால்கண்ணனும்
தம்மைத்தேடி வந்திடும்வேளை
அவனையழித்தல் எளிதெனநினைக்கும்
முடிவினைக்கொண்டிட கணபதிபணித்தார்
பாலைத்திருடியே ஓடிடும்வேளையில்
யாதவரலறியக் கூக்குரல்கேட்டே
அசுரர்பின்னே மெல்லடிவைத்திட
இடியினோசையாய் அசுரருமதனைக்
கேட்டேயஞ்சி வெருண்டேஓடிட
'போவதுமெங்கே சொல்லடாநீயும்'
என்றேகண்ணனும் அவர்தம்முடிகளைத்
தாக்கியேயழித்துச் சாய்த்திடுமறிவினைக்
கண்ணன்மனதில் தந்திட்டபிரானின்
திறனால்யாதவர் மனமிகமகிழ்ந்தே
கண்ணனின்பாலவர் நன்மனம்கொண்டார்
தீயவரழிந்திடும் அறிவைத்தருபவன்
நல்லோர்வென்றிடும் அறிவையுந்தருபவன்
அனைத்துந்தருபவன் கணபதியாதலின்
கணபதியெல்லாந் தருவானென்னும்
வாசகமிதனால் நமக்கும்விளங்கும்.
ஆனைமுகத்தோனே அனைத்துந்தருவோனே!
'விடம் அடைசு வேலை, அமரர்படை, சூலம், விசையன்விடு பாணம், எனவேதான் விழியும்'
அமிர்தம்நாடியே அரக்கருந்தேவரும்
பாற்கடலதனைக் கடைந்திடும்வேளை
இருவரும்சேர்ந்து முறுக்கியவலியால்
நச்சுப்பாம்பின் நஞ்சும்கடலில்
கலந்தோராங்கே நச்சுக்கடலாய்த்
திகழ்வதுபோலவும், தேவர்தலைவன்
இந்திரன்கையில் திகழ்ந்திடும் வச்சிரம்
எனுமோராயுதம் முழக்கிடுமிடிபோல்,
முக்கண்ணன்கையினில் மும்முனைக்கொண்டே
விளங்கிடும்சூல ஆயுதம்போலவும்,
வில்லின்நாயகன் விசயன்விட்டிடும்
அம்பின்கூர்முனை துளைப்பதுபோன்றும்
திகழ்ந்திடுமிருவிழி கொண்டமாதரின்
'அதி பார விதமுமுடை மாதர் வினையின் விளைவு ஏதும் அறியாதே'
பருத்துக்கனத்துப் பெரியதோர்பாரமாய்
முன்னேமுட்டித் தள்ளியேஆடும்
பெருந்தனம்கொண்ட விலைமாதர்களும்
புரிந்திடும்சாகசச் செயல்களின்வினைகள்
எதனையுமறியாத் தன்மையைக்கொண்டே…
'கடி உலவு பாயல் பகல் இரவு எனாது கலவிதனில் மூழ்கி'
நறுமணமிக்கப் படுக்கையில்புரண்டு
இரவும்பகலும் இதுவெனவறியா
நிலையினில்மூழ்கி சுகம்பலவிதுவென
அவருடன்கூடி இன்பம்துய்த்து….
'வறிதாய கயவன் அறிவீனன் இவனும் உயர் நீடு கழலிணைகள் சேர அருள்வாயே'
பொருள்நலம்மானம் அனைத்துமிழந்தே
வறியவனாகிய கடையினுங்கடையேன்
குறைமிகவுடையக் கீழினுங்கீழ்மகன்
மதியறிவில்லா மடையன்நானும்
உயரியபெருமைகள் அனைத்தும்விளங்கும்
நின்திருவடியிணைகளைச் சேர்ந்துயானுய்யும்
பெருவரமளித்துக் காத்தருள்வாயே!
————
–அருஞ்சொற்பொருள் —
அடைசு – பொருந்திய
விசையன் – அருச்சுனன்
விதம் – 'அதி பார விதம்' என்று கொண்டு, குறிப்பால் இங்கே,தனங்களைக் குறிக்கும்.
கடி – வாசனை
பாயல் – படுக்கை
இறைவன் மகள் – [இங்கே] அரசன் உக்கிரசேனன் என்பானின் மகளான தேவகி [கண்ணனின் தாய்]
பிளை – பிள்ளை என்பது குறைந்து வந்தது.
சிறு பாலை – சிறிதளவு பாலை
அடையலவர் – அப்படி ஆயர்பாடியை அடைந்த [அசுரர்]
வெருவ – பயப்படுதல்
————-
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
****************************
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.