2009ல் ஈழத்தில் கொத்துக் குண்டுகள் வீசிப்பல உயிர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட போது தமிழகத்தில் ஒரு அழுகுரல் கேலி இழையோடக் கேட்டது.
"ஓர் அடிமையின் வாழ்வில் அடுக்கடுக்காய்த் துன்பம் வந்தால் இன்னோர் அடிமை பொங்கியெழுந்து போர் தொடுக்கவா முடியும்? பொங்கிவரும் கண்ணீரைத் துடைத்துத் துடைத்தே மேல்துண்டு ஈரமாவது கண்டு இதாவது முடிகிறதே என்று மனதை ஆற்றுப்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாவது இருக்கிறதே என்று திருப்திப்பட்டுக் கொள்ளத்தான் முடியும்." அடிமைகளின் வாழ்வின் அவல நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டிய வசனம் இது. ஆனால் பேசியவர் அடிமையா என்றால் இல்லை.
பேசியவர் சக்திமிக்க இந்திய மைய அரசின் முக்கியக் கூட்டாளி. இவரது ஆதரவில்தான் மைய அரசு முட்டுக் கொடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. தமிழகத்தில் இவரே தலைவராக இருந்தார். ஆட்சியும் ஆண்ட கட்சியும் இவரது. மாண்டு போன உயிர்கள் குறித்து கடுகளவேனும் கவனம் கொண்டிருந்தால் இறந்தோரில் பாதிப்பேர் இன்று உயிருடன் உலா வந்திருப்பர். ஆனால் இவரது கவனம் இலங்கையில் நடக்கும் போரை வைத்துத் தமிழகத்தில் தன் அரசியல் நிலையை வலுப்படுத்துவதற்கு என்னென்ன நாடக உத்திகள் கைகொடுக்கும் என்று கருதுவதிலேயே கழிந்து போனது.
காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் பொது இடமொன்றில் படுக்கை போட்டுப் படுத்துக் கொண்டு தலைமாட்டில் மனைவியும் கால்மாட்டில் துணைவியுமாய் சோகமே உருவாக அமர்ந்திருக்க ஊடகங்களுக்குப் படம் காட்டிக் கொண்டிருந்தார். மூன்று மணிநேரம் கழித்து எழுந்தவர் "ஈழப்போர் நிறுத்தப்பட்டது. ஈங்கோர் தமிழனின் உண்ணாவிரதம் ஈழத்தைக் காத்தது" என்று இறும்பூது எய்திவிட்டு அடுத்தவேளை சோறு எந்த வீட்டில் என்ற முக்கியக் கேள்வியுடன் போனார். இவரது பேச்சை நம்பிப் பதுங்கு குழிகளை விட்டு வெளியே வந்து சமாதானக் காற்றைச் சுவாசிக்க ஈழத்தவர் லட்சம் பேர் உள்ளிழுத்த மூச்சு வெளியே வரவில்லை. மாண்டு போயினர் அத்தனை மக்களும். "போர் நிறுத்தமா? என் நாட்டிலா? எவன் சொன்னவன்?" என்று கேட்டார் இலங்கையின் அதிபர் இராஜபக்ஷே.
"ஈழம் காத்த இறும்பொறையே! எல்லாளனே!" என்று கட்சியினர் சுற்றி நின்று வாழ்த்துப்பா பாடிக் கொண்டிருக்க, மாண்டவர் குறித்து இவரிடம் கேட்கப்பட்டது. அதிர்ச்சியோ வருத்தமோ சிறிதுமின்றி "போர் நின்றதாகப் பிரணவ முகர்ஜி சொன்னார். அதைத்தான் நான் சொன்னேன். இதில் நான் எப்படிப் பொறுப்பாவேன்?" என்று கேட்டவர் இந்தக் கோமகனார் கருணாநிதி. அப்போது "பொய் சொல்லி என் இரத்த சொந்தங்களை அழித்தீர்களே" என்று காங்கிரசு மீதோ மந்திரி முகர்ஜி மீதோ பாயவில்லை. மைய அரசின் நிலை எதுவோ அதுவே என் நிலையும் என்று சொல்லிவிட்டுப் போனார்.
சிலநாட்கள் சென்ற பிறகு " போர்ச்செயப்பாவையும் சீர்தனிச் செல்வியும் தன்னிருபுறத்தே கொண்டு" இராஜபக்ஷே கொழும்புவில் கொலுவிருக்க, தன் கட்சியின் கப்பலோட்டிய கோமகன் பாலுவையும், அலைவரிசை ஊழலில் அளக்கவொண்ணா பணத்தைச் சுருட்டிய தன் மகள் கனிமொழியையும் கொடுங்கோலனின் தர்பாருக்கு விருந்துண்ண அனுப்பினார். கூடவே போனவர் ஈழத்துக்காகக் குரலுயர்த்திக் காட்டி பாராளுமன்றம் சென்ற திருமாவளவன். இவரை இராஜபக்ஷே வரவேற்று "பிரபாகரனுடன் இருந்திருந்தால் உன்னையும் கொன்றிருப்பேன்" என்றாராம். ஆனாலும் இவர்கள் அங்கே பல்லிளித்துப் பரிசுகள் பெற்று விருந்துண்டு வந்தார்கள். இங்கே வந்த பின் திருமா இராஜபக்ஷே என்னைப் பார்த்து இப்படிச் சொன்னார். இதை மன்னிக்கமாட்டேன் என்றார். அவர் வீட்டுச் சோற்றில் கைவைக்கும் போது இந்த வீரம் எங்கே போனது என்றே தெரியவில்லை.
2009 போர்ப் படுகொலைகளுக்குப் பின் பல வணிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வர்த்தக ஒப்பந்தங்கள் பல இலங்கையுடன் வந்தன. அவற்றில் பெரும்பாலானவை கருணாநிதி குடும்பத்தாரின் குலத் தோன்றல்களின் தொழில் ஒப்பந்தங்களே. அதன்பின் வந்த தேர்தல்களில் பொய் சொல்லி இனத்தை அழித்த காங்கிரசுடன் கூட்டு வைத்துப் போட்டியிட கருணாநிதிக்கு அட்டியேதும் இருந்திடவில்லை. இந்தியக் குடியரசின் தலைவருக்கான தேர்தலில் பொய் சொல்லி இனத்தை அழிக்கக் காரணம் என்று தான் குற்றம் சாட்டிய அதே பிரணவ முகர்ஜிக்கு ஆதரவாக களமிறங்கி வாக்களித்தார். அப்போது இனத்தின் அழிவோ அழுததாகச் சொன்ன கண்ணீரோ கண்ணை மறைக்கவில்லை.
டெசோ அல்லது ஈழத்தமிழர் நல்வாழ்வு என்றொரு புது நாடகத்தை சட்டசபைத் தேர்தலில் தோற்ற பிறகு எழுதி இயக்கினார் கருணாநிதி. அதிலும் தமிழ் ஈழம் குறித்தோ, இன அழிப்புக்குக் கண்டனம் தெரிவித்தோ ஒரு வசனம் கூட இல்லை. ஈழத்தமிழர் வாழ்வு என்ற பொத்தாம் பொதுவான கருப் பொருளில் இயற்றப்பட்ட நாடகம் அது. ஐநா சபையின் தலைவர் பான் கி மூன் என்பாரிடம் மகஜர் கொடுப்பதான காட்சியில் கப்பலோட்டிய கரைவேட்டியார் பாலுவும் கருணாநிதியின் வாரிசு என்று அவர் இலைமறை காயாக அறிவித்து அதன்பின் சப்பைக்கட்டுகள் மூலம் இல்லை என்று சொல்லப்பட்ட ஸ்டாலினும் நடித்த காட்சிகள் பொது மக்களைச் சிரிப்பினால் வயிற்றுவலியில் தள்ளியதை யாரும் மறந்திருக்க முடியாது.
பான் கி மூன் இவரல்ல என்று ஒருவரும் "இருந்தாலும் இவரும் ஐநா சபை ஆபீசர்தான்" என்று மற்றவரும் கூறியபடி யாரோ ஒரு அலுவலரிடம் டெசோ தீர்மானங்களைக் கொடுத்துவிட்டு வெளியே வந்து பத்திரிகையாளர்களிடம் பெருமை பொங்கப் பேசும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். அதன் பின்னர் டெல்லி நகரில் இராகுல காந்தியாரிடம் மனுக்கொடுக்கப் போகும் காட்சியில் அவர் சந்திக்காமலே இருந்துவிட போனவர்கள் சோகமாகத் திரும்பும் காட்சி கதை வசனகர்த்தா நவரசங்களிலும் தேர்ந்த எழுத்தாளர் என்பதற்குக் கட்டியம் கூறியது. அதன் பின் பல காட்சிகளில் பல உணர்ச்சிகள் கொட்டி நடிக்கப்பட்ட போதிலும் சமீபத்திய டெல்லி டெசோ கூட்டத்தில் காங்கிரசார் கலந்து கொள்ளாததும், பரூக் அப்துல்லா, முலாயம்சிங் உள்ளிட்ட தலைவர்கள் புறக்கணித்ததையும் கண்டு திமுக பொங்கிக் கொந்தளித்த கோபக்காட்சி பிரமாதமானது.
அதன் பின் ஆதரவு இல்லை என்று இருதினங்களாக நடக்கும் காட்சிகள் மக்கள் உணர்ச்சிகளைத் தூண்டி தம் நாடகத்தின் அமைப்புக்கு வலுச் சேர்க்கும் என்ற இயக்குநரின் எண்ணத்தில் மண் விழுந்ததே மிச்சம். இன அழிப்பை எதிர்த்துப் போராட்டம், இலங்கையை எதிர்த்துத் தீர்மானம், கண்டனம் என்று கருணாநிதி வீர வசனம் பேசி எதிர்ப்புத் தெரிவிக்கும் காட்சியில் அவரது பேரப்பிள்ளைகள் தென்னிலங்கையின் தலைநகரில் வணிகத்தை மேம்படுத்த வளாகம் கட்டித் தம் வணிகப் பெயுரைப் பொறிக்கும் காட்சியும் அதைக் கண்டு கொள்ளாமலே கருணாநிதி வீரம் காட்டி வசனம் பேசும் காட்சியிலும் நாடக நியதிப்படி கருணாநிதி மீது மரியாதையும் இராஜ்பக்ஷே மீது கோபமும் வரவேண்டும். ஆனால் பேரப்பிள்ளைகள் இராஜபக்ஷேவுடன் கூட்டுச் சேர்ந்து விளையாடுவதால் விவரமறிந்து பார்ப்போருக்குச் சிரிப்பே மேலோங்குகிறது.
சமீபத்திய மாணவர் போராட்டத்தில் தம் கட்சியினர் செருப்படி பட்டது கண்டு துடிப்பதும், அதன்பின் டெல்லியில் இருந்து வந்த மூவரிடம் "இந்தப் பிரச்சினையில் இப்படிச் செய்தால் மட்டுமே அடுத்த தேர்தலில் ஓட்டு வாங்க முடியும் ஆகவே என்னை விட்டுவிடுங்கள்" என்று கெஞ்சுவதும், இனி என்றும் காங்கிரசுக்கு ஆதரவே கிடையாது என்று அறிவிக்கும் காட்சியிலும் கருணாநிதி தாம் ஒரு தேர்ந்த அரசியல்வியாதி என்பதை நிரூபிக்கிறார்.
இந்த நாடகங்களால் ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு என்ன நன்மை என்று பார்த்தால் எள்ளளவும் ஏதுமில்லை என்பது புலப்படும். அவர்களது நலனுக்கு என்று துரும்பைக்கூட அசைக்காமல் அவர்களுக்காகவே எல்லாம் என்று கருணாநிதி வசனம் பேசுவது சிரிப்பைத் தவிர வேறேதும் வரவழைக்கவில்லை. ஆக இந்த நெடும் நாடகத்தில் கருணாநிதி நடத்திய காட்சிகள் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த காட்சிகளே தவிர அவற்றால் சமுதாயத்துக்குப் பலனேதும் இல்லை.
– மீனாட்சி சுந்தர பாண்டியன்
இராசபாளையம்.
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.