பி.ஜே.பி.யின் அகில இந்திய தலைவராக அமித்ஷாவும் தமிழக தலைவராக தமிழிசை சௌந்தர்ராஜனும் பொறுப்பேற்றபின் தமிழகத்தில் நடந்த முதல் மாநில பொதுக்கூட்டம் மறைமலை நகரில் களைகட்டியது.
தமிழக சட்டசபை போன்ற மேடை அதற்குப் பக்கவாட்டிலும் பின்புறமும் பாதுகாப்பை மீறி யாரும் செல்லமுடியாது. முன்பக்கமும் 50 அடி நீளத்துக்கு காலியாக வைத்திருந்தார்கள். மோடி அளவுக்கு அமித்ஷாவுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தன!
தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியபோது, "இன்று முதல் தமிழகத்தில் கழகங்களுக்கு எதிரான போர் தொடங்கிவிட்டது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு எதிர்க் கட்சியே இல்லை என்று சொன்னது அ.தி.மு.க. மற்ற கட்சிகள் பயந்தாலும் நாங்கள் அவர்களை எதிர்த்துக் களம் கண்டோம். ஊழல் நிறைந்த தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஷ்ட் உள்ளிட்ட கட்சிகளை எதிர்த்து எங்களால் மட்டுமே போட்டிபோட முடியும். நம்மை எதிர்ப்பவர்களுக்கு இனி கெட்டகாலம்தான். டாஸ்மாக் இல்லாத தமிழகத்தை லஞ்சம், ஊழல் இல்லாத தமிழகத்தை பி.ஜே.பி-யால் மட்டுமே கொடுக்க முடியும். தமிழகத்தில் முதலில் மம்மி ஆட்சி நடைபெற்றது. இப்போது டம்மி ஆட்சி நடைபெறுகிறது. ஒரு டெண்டர் விடுவதற்கு 600 நாட்கள் ஆகின்றன. தர்மபுரியில் குழந்தைகள் கொத்துக் கொத்தாக செத்து மடிகிறார்கள். மக்களைப் பற்றிக் கவலைப்படாதவர்களின் ஆட்சிதான் இங்கே நடந்துகொண்டிருக்கிறது. நம்முடன் வருபவர்கள் வரட்டும், போகிறவர்கள் போகட்டும். நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்"என்றார்.
பி.ஜே.பி. தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், "பி.ஜே.பி-க்கும் தமிழுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் தமிழின் பெருமையும் உயர்வையும் இந்தியா முழுவதும் எடுத்துச் சென்ற பெருமை பி.ஜே.பி-க்கு உண்டு. இனி, திருக்குறளை இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் படிப்பார்கள். சில மாதங்களுக்கு முன்பு நான் இலங்கை சென்றபோது பி.ஜே.பி தவறு செய்கிறது என்றனர். பி.ஜே.பி-க்கும் இலங்கைக்கும் உள்ள உறவு என்ன என்று கேள்வி எழுப்பினர். ஆனால் மீனவர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக நான் அங்கு சென்றேன். இதற்கு முந்தைய ஆட்சியில் 560 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். ஐந்து மீனவர்கள் தூக்குக் கயிறுக்குப் பக்கத்தில் சென்றபோது, ராஜபக்சேவுக்கு போன் செய்த
மோடி, மீனவர்களை விடுதலை செய்யுங்கள் என்று சொன்னார். இதனால் மீனவர்களின் தண்டனை விலக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டு இப்போது இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலே மிக மூத்த கட்சியினுடைய தலைவர் வெளியே பேசும்போது மீனவர்களைப் பற்றி பேசுவார். ஆனால் வீட்டுக்குள் பெயிலைப் பற்றியும் ஜெயிலைப் பற்றியும்தான் பேசுவார். சி.பி.ஐ-யை தனது ஆதிக்கத்திலே கொண்டுவர முயற்சி செய்தார். ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருந்தார். ஊழலின் மொத்த உருவம் அவரும் அவர் குடும்பத்தினரும்தான். அவர்கள் வீட்டில் எடுக்கப்படும் புகைப்படங்களில் உள்ளவர்கள்தான் அனைத்துப் பதவிகளிலும் இருப்பார்கள்.
தமிழகத்தில் ஓர் அரசு உள்ளது. அந்த அரசுக்கு யார் தலைவர் என்றே தெரியாது. எங்கு போனாலும் யாரிடம் கேட்டாலும் முதல்வர் யார் என்று தெரியவில்லை. முதல்வர் அவரின் நாற்காலியில் அமர்வது இல்லை. தமிழக மக்கள் அவர்களுக்கு ஆட்சியைக் கொடுத்தார்கள். ஆனால், நீதிமன்றம் அவருக்குத் தண்டனையைக் கொடுத்தது. தண்டனையை அந்தக் கட்சியினாலேயே நீக்க முடியாது" என்று விளாசினார்.
இதைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் கங்கை அமரன், முன்னாள் போலீஸ் அதிகாரி சிதம்பரசாமி ஐ.பி.எஸ்., தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ., ஏ.எஸ்.மணி, நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டவர்கள் பி.ஜே.பி-யில் இணைந்தனர்.
கடைசியாக இந்தியில் பேசிய அமித்ஷாவின் உரையை மொழி பெயர்ந்தார் ஹெச்.ராஜா.
"2014 தேர்தலிலே பி.ஜே.பி-க்கு 19 சதவிகிதம் வாக்குகள் கிடைத்ததற்கு உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மோடி பிரதமராக இருக்கும் இந்தச் சூழ்நிலையில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்திருக்கிறது. இதன் காரணமாக நம் தேசத்தின் ஆட்சி நிலைப்புத்தன்மையை நோக்கிச் செல்கிறது. ஜார்க்கண்ட் தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி ஆறு மாதங்களில் மோடி ஆட்சி என்ன செய்தது என்று கேட்கிறார். 60 ஆண்டுகளில் உங்கள் குடும்பம் நடத்திய ஆட்சியில் இந்தியா எந்தத் துறையிலாவது முன்னேற்றம் கண்டதுண்டா? நாங்கள் பொறுப்பேற்றபின் விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெட்ரோல், டீசல் விலையை 10 முறை குறைத்து இருக்கிறோம். விலைவாசி குறியீட்டு எண் பூஜ்ஜியத்துக்குக் குறைந்திருக்கிறது. கடற்கரை ஓர மாநிலங்களில் பி.ஜே.பி பலவீனமாக உள்ளது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த பலவீனம் நீண்ட நாட்களுக்கு இருக்கக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன். தமிழகத்தில் பி.ஜே.பி-யின் ஆட்சி ஏற்பட்டால் 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கும். தமிழ்நாட்டில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்" என்றார்.
பி.ஜே.பி-யின் அஸ்திரம் ஆரம்பம் ஆகிவிட்டது!
நன்றி : ஜூனியர் விகடன்
– பா.ஜெயவேல்
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.