கருணையற்ற கல்மனதுடைய தீவிரவாதிகள் பாகிஸ்தானில்தான் இருக்கிறார்கள் என்றோ ஒரு குறிப்பிட்ட மதத்தில் – இனத்தில் மட்டும்தான் இருக்கிறார்கள் என்றோ சொல்லி விட முடியாது. அசாமில் போடோ தீவிரவாதிகள் சோனிட்பூர் – கொக்ரஜர் பகுதிகளில் புகுந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 78 ஆதிவாசிகளைக் கொன்றிருக்கிறார்கள். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். இந்த ஆதிவாசிகள் அனைவருமே தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை!
இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்த படியாக தீவிரவாதம், கலவரத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் மாநிலம் அசாம்தான். மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை ஒப்பிடும்போது வடகிழக்கு மாநிலங்கள் 50 ஆண்டுகள் பின்தங்கி இருப்பது கசப்பான உண்மை. சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளாகியும் அசாமைத் தவிர வேறு எந்த வடகிழக்கு மாநிலங்களுக்கும் ரயில் வசதி இல்லை. சென்ற மாதம்தான் மேகாலயாவிற்கு ரயில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.
கல்வி நிறுவனங்கள் முதலான அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத காரணத்தால் மக்கள் ஏழ்மையிலும் மடமையிலும் சிக்கிச் சுழல்கிறார்கள். படித்துவிட்டோ படிப்பிற்காகவோ பிற மாநிலங்களுக்குச் செல்லும் வடகிழக்கு மாநிலத்தவர் ஆங்காங்கு அந்நியர்களைப்போல் நடத்தப்படுவதும், தாக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்தப் பின்னணியில், போடோ பகுதியின் பிரச்னை நிலைமையின் தீவிரத்தை அதிகப்படுத்தும் விதமாக உள்ளதுதான் வேதனை.
பிரும்மபுத்ரா நதிக்கு வடக்கே பூட்டான், அருணாச்சல பிரதேசத்தை ஒட்டியுள்ள பகுதி போடோ இனத்தவர் அதிகம் வாழும் போடோ பூமி. அசாமிலுள்ள கொக்ரஜர், பாக்சா, சிராங், உடல்குரி மாவட்டங்களின் பெரும்பகுதிகள் போடோ பூமியாக போடோ லாண்ட் டெரிடோரியல் கௌன்சில் என்ற மாநில துணை நிர்வாக மையத்தின் நிர்வாக அதிகார ஆளுமைக்குட்பட்டதாக இருக்கிறது.
போடோ பூமியை தனி மாநிலமாக அறிவிக்கக்கோரி போடோ இனத்தவர் பல வருடங்களாகப் போராடி வருகின்றனர். இவர்களுக்கும் போடோ பூமியில் மாநிலத்தின் பிறபகுதிகளிலிருந்து வந்து குடியேறி வசிக்கும் ஆதிவாசி முஸ்லிம்களுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு கலவரத்தில் முடிந்திருக்கிறது. போடோ பூமியில் போடோ இனத்தவர் 28 சதவீதம். முஸ்லிம்கள் 20 சதவீதம். ஆதிவாசிகள் 15 சதவீதம். மிச்சமுள்ளவர்கள் அசாமியர் – வங்காள இந்துக்கள் மற்றும் பிறர். போடோ பூமியில் தேசிய நெடுஞ்சாலை கூட இதுவரை இல்லை. தேயிலைத் தோட்டத்தைத் தவிர வேறு பெரிய தொழில்கள் எதுவுமில்லை.
1980-களில் போடோ பூமி கேட்டு போராட்டத்தைத் தொடங்கியவர் பிரும்மா என்ற போடோ இனத்தலைவர். பிரிட்டிஷ் காலம் தொட்டே போடோ இனத்தவருக்கும் ஆங்கிலேயரால் தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்க்க அழைத்துவரப்பட்ட சந்தல் இனத்தவருக்கும் தகராறுகள் அடிக்கடி ஏற்பட்டு தாக்குதல்களும் வீடுகளை எரிப்பதும் நடந்து வருகின்றன. பிரும்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததும் அவரது இயக்கம் துண்டு துண்டாக சிதறி அரசுக்கு அதிகம் தலைவலி கொடுத்தது. மெல்ல மெல்ல அரசால் போடோ லேண்ட் சுயாட்சி குழு ஏற்படுத்தப்பட்டு செயல்பட ஆரம்பித்தது. 2003-ல் போடோ லேண்ட் டெரிடோரியல் கௌன்சில் அதிகாரபூர்வமாக அமைக்கப்பட்டது. பல போடோ இயக்கங்கள் ஆயுதங்களை அரசிடம் ஓட்டடைத்து சரணடைந்தாலும் என்.டி.எப்.பி. (NDFB) என்ற இயக்கம் தொடர்ந்து வன்முறையிலும் தீவிரவாதத்திலும் ஈடுபட்டது. இந்த இயக்கமும் மூன்றாக உடைந்து அதில் ஒரு குழு அரசுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்துகிறது.
ரஞ்சன் டைமரி குழுத் தலைவர் கௌஹாத்தி சிறையில் இருப்பதால் இயக்கம் ஸ்தம்பித்திருக்கிறது. மூன்றாவது குழுவான சாங்பிஜித் குழுதான் இப்போது படுகொலைகளை நிகழ்த்தியிருக்கிறது. 2004-ல் 150 பேரும், 2012-ல் 100 பேரும் இதே போல் கொல்லப்பட்டார்கள். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் அநேகமாக வங்காள தேசத்திலிருந்து பிழைப்பு தேடி வந்து போடோ பகுதியில் குடியேறிய முஸ்லிம்கள். டிசம்பர் 23, 2014-ல் நடந்த படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் அநேகமாக கிறித்தவ மத ஆதிவாசிகள்.
இந்த வன்கொலை மதத்தோடு தொடர்புடையது அல்ல. போடோ இனத்தவரில் பெரும்பாலானவர்கள் கிறித்தவர்கள் அல்லது இயற்கையை மட்டும் வழிபடும் 'அனிமிஷ்டுகள்' இவர்களைப் பொறுத்தவரை குடியேறிகள் தங்கள் பிழைப்பைக் கெடுக்கிறார்கள் என்ற ஆத்திரம்தான் பிரச்சனைக்கு காரணம்.
அந்தக் குடியேறிகளும் சில நூற்றாண்டுகளாக போடோ நிலத்தில் வாழ்கிறார்கள் என்ற நியாத்தை இவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். அசாம் மாநில அரசுக்கு இப்படி ஒரு தாக்குதல் நிகழப்போகிறது என்று மத்திய, மாநில உளவுத்துறைகள் எச்சரித்தும் தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் அரசு அசட்டையாக இருந்துவிட்டது. மிலிட்டரி உடையணிந்த கொரில்லாக்கள் துப்பாக்கிகளுடன் கிராமங்களில் புகுவதற்கு 5 மணி நேரம் முன்பாகவே மாநில அரசுக்கு தாக்குதல் விவரம் உளவுத்துறையால் தெரிவிக்கப்பட்டும் கோட்டைவிட்டுவிட்டது மாநில நிர்வாகம். மூன்று மாவட்டங்களில் வெவ்வேறு குழுக்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களை எதிர்பார்க்காததால், காவல்துறையினர் சம்பவ இடங்களுக்கு விரைவதற்கு முன்னாலேயே சகலமும் நடந்து முடிந்துவிட்டது. ஒரு கிராமத்தில் புகுந்த போடோ தீவிரவாதிகள், குடிக்க தண்ணீர் கேட்டபோது, ராணுவத்தினர் என்று நினைத்து தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் தண்ணீரை வாங்கிக்குடித்துவிட்டு அவரையும் சேர்த்துக் கொன்ற கொடூரம் நிகழ்ந்திருக்கிறது.
போடோ தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆதிவாசி இனத்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் திமாபூர், மாணிக்பூர், கொசைகான் பகுதிகளில் போடோ இனத்தவர் வீட்டை பதிலடியாக ஆதிவாசிகள் எரித்து, தாக்குதல் நடத்தியதில் சில போடோ இன அப்பாவி மக்களும் உயிர் இழந்திருக்கின்றனர். எல்லாம் நடந்து முடிந்த பிறகு, அசாம் மாநில அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 5 மாவட்டங்களில், சுமார் 5000 குடும்பத்தினர் பெரும்பாலும் ஆதிவாசிகள் தங்கள் கிராமங்களை விட்டு குடும்பத்துடன் உயிருக்கு பயந்து ஓடி வந்து அகதி முகாம்களில் தங்கியிருக்கின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மாநில முதல்வர் தருண் கோகோய் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டிருக்கின்றனர். பிரதமர் மோடி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் உதவி அறிவித்திருக்கிறார்.
நடந்தது இனக்கலவரமல்ல, பயங்கரவாதம் என்ற வகையில் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது மத்தியஅரசு. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்த பயங்கரவாதிகளை அடக்க எல்லையிலுள்ள பூடான் நாட்டின் ஒத்துழைப்பையும் நாடியுள்ளார். தாக்குதல் நடத்திய தீவிரவாத இயக்கத்துடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ள மத்திய அரசு, போடோ பகுதிக்கு ராணுவத்தை அனுப்பியுள்ளது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் அசாம் மாநில முதல்வர் தருண் கோகோய் தேர்தகளில் ஆதரவு தரும்படி என்.டி.எப்.பி.(எஸ்) தலைவருக்கு தூதனுப்பியது இப்போது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பயங்கரவாத இயக்கத்துடன் மாநில நிர்வாகமும் காங்கிரஸ் கட்சியும் எந்த அளவில் நெருக்கமாக இருந்தன என்று என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவரலாம். சமீபத்தில் ராணுவத்தினர் போடோ தீவிரவாதிகளைத் தேடிச் சென்று வேட்டையாடியதன் பதிலடியாகவும் இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணங்கள் என்றால் கீழ்க்கண்ட ஐந்தைச் சொல்லலாம்.
1. வடகிழக்கு மாநிலங்கள் முன்னேற்றம் அடையாமல் நிற்பது.
2. இந்த மாநிலங்களின் வளர்ச்சி நிதிகளில் பெரும்பகுதி அரசியல்வாதிகள் – அதிகாரிகள் கூட்டணியால் கொள்ளையடிக்கப்பட்டு மக்கள் வஞ்சிக்கப்படுவது.
3. பல போடோ இயக்கங்கள் போராடியபோது, முந்தைய யு.பி.ஏ. அரசு போடோ லிபரேஷன் டைகர்ஸ் என்ற இயக்கத்தை மட்டும் போடோ நிர்வாகத்தில் அமர்த்தி அதன் மூலம் பிற குழுக்களின் பகையை சம்பாதித்தது.
4. இயக்கங்களுக்குள் மத்திய அரசும் மாநில அரசும் பிரிவினைகளைத் தூண்டிவிட்டு தங்களுக்கு நற்பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசியல் செய்வது.
5. 14 வருடங்களாக மாநில முதல்வராக இருந்தும், முதல்வர் தருண் கோகோய் அரசு உருப்படியாக இந்த விஷயத்தில் எதையும் செய்யாதது.
படுகொலைகள் நடந்தபோதும் அதைப்பற்றி தகவல் தெரிந்தும் மாநில தலைமைச் செயலர் ஜிதேஷ் கோஸ்வா குடும்பத்துடன் கஜிரங்கா தேசியப் பூங்காவில் யானை சவாரி செய்து கொண்டிருந்தாராம்.
எப்படித் தீரும் பிரச்சினை?!
நன்றி : தமிழக அரசியல்
– அநபாயன்
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.