பஞ்சாப் மாநிலத்தில் புகழ் பெற்று விளங்கும் நகரம் லாகூர். இதனை அடுத்துள்ள இலாயல்பூர் மாவட்டம் பாங்கா என்ற சிற்றூரில் வாழ்ந்து வந்தவர் அர்ச்சுன் சிங் என்ற விடுதலை வீரர் குடிப் பெருமை வாய்ந்த வித்யா தேவி ஆகிய இருவருக்கும் 1907-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் நாள் அருமை மகனாகப் பிறந்தவரே பகத்சிங்.
பகத்சிங் குடும்பம் முழுவதுமே விடுதலைப் போரில் பங்கேற்றது என்பர். பகத்சிங் தந்தையாரும், உடன் பிறந்தோரும் நாட்டு விடுதலைப் போரில் பேரார்வத்துடன் ஈடுபட்டவர்கள்.
ஆங்கிலேயர்களின் அளவுக்கு மீறிய அடக்குமுறையையும், ஆணவப் போக்கையும் எண்ணி எண்ணி வேதனைப்பட்டான். நம் நாட்டைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் வெள்ளையர்களின் ஆதிக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும் என உறுதி பூண்டான் வீரம் மிக்க குடியில் தோன்றிய பகத்சிங், தன் குடிப்பெயர் விளங்கத் தானும் வீரமறவனாகத் திகழ்ந்தான்.
முதற் கடமை
பகத்சிங் பள்ளியில் சேர்க்கப்பட்டான். பாடங்களைக் கருத்தூன்றிப் படித்தான். பள்ளியில் படிக்கும் காலத்தில் லாகூர் சதிவழக்கில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலை வீரர் சர்த்தார் சிங் சாராபாவுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
1915-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் நாள் அவர் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்ச்சி பகத்சிங் உள்ளத்தை வாட்டியது. மிகவும் உள்ளம் நொந்து வருந்திய அவன் இந்தியத் திருநாட்டை அன்னியரிடமிருந்து எப்படியும் காப்பாற்றுவதே தன் முதற்கடமை எனக் கருதினான்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை
வரலாற்றுச் சிறப்புமிக்க பஞ்சாப்படுகொலை நிகழ்ந்த போது பகத்சிங்கின் வயது 12. அந்தக் கொடூரமான நிகழ்ச்சி அமிர்தரசில் நடைபெற்றது. 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13-ஆம் நாள் ஆகும். ஆங்கில அரசால் நியமிக்கப்பட்ட ஜெனரல் டயர் என்ற சர்வாதிகாரவெறியனின் மிருகத்தனத்தால் நிகழ்ந்தது அந்தப் படுகொலை.
சீக்கியர்களின் வழிபாட்டுத் தளமாகத் திகழ்ந்த அமிர்தசரசில், ஜாலியன் வாலாபாக் என்ற திடலில் பல்லாயிரக் கணக்கானோர் கூடியிருந்த சமயத்தில், பீரங்கிப் படையினரை கொண்டு, டயர் என்ற வெள்ளையன் கூட்டத்தினரை நோக்கிக் குருவிகளைச் சுட்டுத் தள்ளுவது போல் சுட்டுத்தள்ளி விட்டான்.
நான்கு சுவர்களுக்கிடையே இருந்த அத்திடலில் கூடியிருந்தோர் தப்பிச் செல்ல முடியாமல் மூச்சுத் திணறித் துப்பாக்கிக் குண்டிற்கு இரையாகிப் பரிதாபமாக மாண்டனர்.
பகத்சிங் கண்ணீர்
பஞ்சாபில் நடந்த இனப்படுகொலையை எண்ணி எண்ணி பகத்சிங் உள்ளம் வருந்தினான். பள்ளிப் படிப்பில் அவன் எண்ணம் செல்லவில்லை. ஒருநாள் ஒருவரிடமும் சொல்லாமலேயே, அமிர்தசரசுக்குச் சென்று, படுகொலை நிகழ்ந்த இடத்தைப் பார்த்து உள்ளம் குமுறினான். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்த அவ்விடத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
பின்னர் கொலை நடைபெற்ற அத்திடலைச் சுற்றிச் சுற்றி வந்தான்! இரத்தம் தோய்ந்த மண்ணை எடுத்து, வீரத் திலகம் இட்டுக் கொண்டான். அப்புனித, பூமியிலிருந்து சிறிதளவு மண்ணை எடுத்துக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையுடன் தன் வீடு திரும்பினான்.
தான் கொண்டு வந்த குருதி படிந்த மண்ணைப் பார்த்துப் பார்த்து உள்ளம் நெகிழ்ந்தான். "கொடூரமான எண்ணம் கொண்ட அந்நியர்களான மாபாவிகளை விரட்டியடிக்க வேண்டும்" என்ற எண்ணமே, அவனை ஆட்கொண்டது. நாட்டில் நடக்கும் அநீதிகளை எதிர்த்துப் போராடத் தொடங்கினான்!.
இவ்வாறாகச் சிறு வயதிலேயே போராட்ட உணர்வு அவனிடம் குடி கொண்டது! "பொது நல நோக்கம் அவன் சிந்தனையை ஆட்கொண்டது! படிப்படியாக அவன் எண்ணம் "நாட்டு விடுதலை" பற்றியே சுற்றிச் சுற்றி வட்டமிட்டது!
புரட்சி ஒன்றே!
புரட்சியே அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட நல்வழி! உலக நாடுகள் பலவற்றின் விடுதலை வரலாற்று நூல்களே அவனுடைய விடுதலை வேள்வியின் வலிமை வாய்ந்த படை! பொதுவுடைமைத் தத்துவமும், பகுத்தறிவு சிந்தனையுமே அவனுடைய உள்ளொளி பெருக்கும் நல் உணர்வுகள்! அவனுடைய இயற்கை அறிவும், நூலறிவும் அவனுடைய புரட்சிகரமான சிந்தனைக்கு வலுவைத் தந்தன. இவையாவும் அவனை நாட்டு விடுதலை பற்றியே ஒருமுகமாகச் சிந்திக்க செய்தன.
அழைப்பு விடுத்தான்
ஆங்கிலேயருடைய ஆட்சி எப்படியும் அகற்றப்பட வேண்டும். நம் நாட்டு மக்கள் வேற்று நாட்டவருக்கு அடிமையாக இருக்கும் நிலையை மாற்றியாக வேண்டும். அதற்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் நாட்டிற்குத் தருவதற்கு ஒவ்வொருவரும் தயாராக வேண்டும்! எனப் பகத்சிங் அழைப்பு விடுத்தான்.
இந்தியத் திருநாட்டின்
வீரம் மிக்க இளைஞர்களே!
புதியதோர் உலகம் காண்போம்!
அச்ச உணர்வை
அகற்றுங்கள்!
அநீதியை எதிர்த்துப் போராடுவோம்!
புலியெனப் புறப்படுங்கள்!
என மக்களிடையே இடைவிடாமல் புரட்சி முழக்கம் செய்தான். ஆங்கிலேயரின் அடக்கு முறையாலும், கொடுங்கோன்மையாலும் துன்பத்திற்குள்ளான மக்கள் பகத்சிங் நிகழ்த்திய எழுச்சியுரையினால், பெரிதும் ஈர்க்கப்பட்டனர். ஏராளமானவர்கள் பகத்சிங் தொடங்கிய புரட்சி இயக்கத்தில் சேர்ந்தனர். வெள்ளையரை வெளியேற்றியே தீர வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே வேகமாகப் பரவியது.
பகத்சிங் ஏற்றி வைத்த புரட்சிக் கனல், கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது! வங்காளம், மராட்டியம், உத்தரப் பிரதேசம், முதலான மாநிலங்களைச் சேர்ந்த புரட்சிக் குழுவினர் அனைவரும் ஒன்று கூடினர்! நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரையும் தருவதற்கு உறுதி பூண்டனர்.
வீர முழக்கம்
1927-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்களில் ஒருநாள்! பீகார், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் முதலான மாநிலங்களிலிருந்து அணி அணியாகத் திரண்ட புரட்சியாளர்களிடையே, பகத்சிங் வீர முழக்கமிட்டான்! விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு "வருவது வரட்டும்! பெற்றே தீருவோம் விடுதலை" எனச் சூளுரைத்து, அவன் அயராமல், அஞ்சாமல் ஆங்கிலேயர்களின் அநீதியை எதிர்த்துப் போராடினான்.
எந்தக் கொடிய காவல் துறை அதிகாரியின் மிருகத் தன்மையினால் விடுதலை வீரர் லாலா லஜபதிராய் சுட்டுக் கொல்லப்பட்டாரோ, எந்தக் கொடியவனால் நூற்றுக் கணக்கான இந்தியர்கள் தடியடிபட்டு இரத்தம் சிந்த நேரிட்டதோ, அந்தக் காவல் துறையதிகாரியான சாண்டர்சு என்பவனைத் தன் நண்பர்களான சுகதேவ், இராசகுரு, ஆசாத் ஆகியோருடன் சென்று காவல் நிலையத்தில் சுட்டுக் கொன்றான். சாண்டர்சு கொலைக்குப் பின்னர் ஆங்கேலேயர்களின் அடக்கு முறையும், சர்வாதிகாரப் போக்கும் நிற்காமல் மேலும் தொடர்ந்தன.
அடுத்து, பாட்டாளி மக்களின் உரிமையைப் பறிக்கும் சட்டமொன்று தில்லிப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து குழுவினருடன் நிறைவேறாமல் இருக்கும் பொருட்டு, புரட்சிக் குழுவினருடன் கலந்து பேசி, தானே பாராளுமன்றத்தில் குண்டுகளை வீசுவது என்ற முடிவை மேற்கொண்டான் பகத்சிங். அம்முடிவுக்கேற்ப 1929-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் எட்டாம் நாள் பகத்சிங், தத் ஆகிய இருவரும் பாராளுமன்றத்தில் வெடி குண்டுகளை வீசினர்! இருவரும் உடனே கைது செய்யப்பட்டனர்.
சூழ்நிலையும் போராட்டமும்
குண்டு வீசப்பட்டதன் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, பகத்சிங் தன்னுடைய வாதத்தை மிகத்தெளிவாக எடுத்துரைத்தான்.
"உயர்ந்த குறிக்கோள் ஒன்றுக்காக நாங்கள் போராட
வேண்டிய, நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
இத்தகைய வன்முறை நாங்களாக விரும்பி ஏற்றுக்
கொண்டதல்ல. இக்கால கட்டத்தில் வன்முறை தான்
எங்களின் உரிமையைப் பெற வழி வகுக்கும் என்பது
எங்கள் திடமான நம்பிக்கை".
"எங்களுக்கு எவரிடத்தும் வெறுப்பில்லை! எங்கள்
நோக்கமெல்லாம் ஆங்கிலேயருடைய ஆதிக்க
மனப்பான்மையையும், முறையற்ற போக்கையும்
கண்டிக்க வேண்டும் என்பதே ஆகும்.
இந்திய மக்கள் ஆங்கிலேயர்களால் மிகவும்
துன்புறுத்தப்படுகின்றனர்; ஆங்கிலேயரின்
ஆணவத்தையும், அநீதியையும் அகற்ற வேண்டும்;
எங்கள் நாடு விடுதலை பெற வேண்டும்! இதுவே
எங்கள் குறிக்கோள்!
இந்தக் கருத்தை உள்ளடக்கிய நீண்டதோர் வாக்குமூலத்தைத் தன்தான் பகத்சிங். நீதிமன்றத்தில் அவன் அளித்த வாக்குமூலம் கோழைகளையும் வீரர்களாக்கியது! எல்லோரையும் சிந்திக்கத் தூண்டி விடுதலை உணர்வை அவர்களுக்கு ஊட்டியது.
நீதிமன்ற வழக்கை விசாரித்து இறுதியாக, 1930-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் ஏழாம் நாள் பகத்சிங், சுகதேவ், இராசகுரு ஆகிய மூவருக்கும் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
1931-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 23-ஆம் நாள் பகத்சிங், இராசகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் தூக்கு மேடையை நோக்கி, அஞ்சா நெஞ்சத்துடனும், நிமிர்ந்த பார்வையுடனும் நடந்து சென்றனர். பகத்சிங் தூக்கு மேடையில் நின்று கொண்டு
"எங்கள் நாட்டின் விடுதலைக்காக, எங்கள் உயிரை
மகிழ்ச்சியோடு தருகிறோம். இத்தகைய பேறு
எல்லோருக்கும் கிடைக்காது! நாங்கள் மறைந்தாலும்,
விரைவில் மிகப் பெரிய அளவில் புரட்சி உருவெடுக்கும்.
ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியமும் விரைவில் அடியோடு
மறையும். இது உறுதி".
என முழக்கமிட்டான். பின்னர் சில நொடிகளில் பகத்சிங், சுகதேவ், இராசகுரு ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டனர். அப்போது பகத்சிங் 24 வயது கூட நிறைவு பெறாதவன்.
தெற்கே, தமிழகத்தில் பூலித்தேவன், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருதுசகோதரர்கள் ஆகியோர் வெள்ளையர்களால் தூக்கு மேடையை முத்தமிட்டதைப் போன்றே, வடக்கே பஞ்சாபில், பகத்சிங், சுகதேவ், இராசகுரு ஆகியோரும் நாட்டுக்காகவே இறுதி வரை போராடித் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். அவர்களின் வரலாறு ஒரு எழுச்சிமிக்க வரலாறு ஆகும்.
நம் நாட்டு விடுதலை வேள்விக்குத் தங்களையே ஈந்த அந்த வீர மறவர்களை என்றும் மறவாமல் போற்றுவோமாக!.
நன்றி ; செல்வி சிவக்குமார்
You must be logged in to post a comment.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
3debauchery