காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் என் மீதும் மோடி, அமித்ஷா ஆகியோர் மீதும் பொய்வழக்குகளை தொடர்ந்தார் என மத்திய அமைச்சர் நிதின்கட்காரி குற்றம்சாட்டியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது. சிபிஐ, அமலாக்கப் பிரிவு தொடர்ந்த இருவழக்குகளிலும் சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத் திருக்கிறது.
இது தொடர்பாக ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்துக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அளித்த பேட்டி:
மத்திய பாஜக அரசு ஒருபோதும் பழிவாங்கும் அரசியலை கையில் எடுத்தது இல்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது என் மீது பொய்யான வழக்குகள் போடப்பட்டன.
அதே போல் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் மீதும் பொய்வழக்குகள் போடப்பட்டன. ஆனால் இந்தவழக்குகளில் நாங்கள் நிரபராதிகள் என நிரூபித்து இருக்கிறோம்.
ப.சிதம்பரத்துக்கு எதிரான வழக்குகளில் ஆதாரங்கள் இருக்கின்றன. அதனடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டன. தற்போது நீதிமன்ற விசாரணையில் இவ்வழக்குகள் இருக்கின்றன. ஆகையால் நீதிமன்றம் தான் முடிவு எடுக்கும்.