இலங்கைத் தமிழர் பிரச்னையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அணுகுமுறை எப்படி இருக்கப் போகிறதோ என்கிற அச்சத்தைப் போக்கி இருக்கிறது, இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு. மூன்று நாள் பயணமாக தில்லி வந்த தமிழ்
தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமசந்திரன், மாவை.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், செல்வராஜா, சுமந்திரன் ஆகியோருடனான பிரதமரின் சந்திப்பு ஒன்றரை மணி நேரம் நீண்டதாக இருந்தது என்பதிலிருந்தே இது மரியாதை நிமித்தமான சந்திப்போ, சம்பிரதாயமான சந்திப்போ அல்ல என்பது தெரிகிறது.
தனது பதவி ஏற்பு விழாவுக்கு வந்திருந்த இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் இதுபோலக் கலந்தாலோசிக்க முற்படாத பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் முதலில் பிரச்னைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள முற்பட்டிருக்கிறார் என்பதே பெரிய ஆறுதல். அதிலும் தனது சந்திப்பின்போது முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா, இந்திய வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தோவால் ஆகியோரையும் உடனிருக்கச் செய்தது, முற்றிலும் புதிய அணுகுமுறை. இதன் மூலம், இலங்கை அரசுத் தரப்பு விளக்கங்களுக்கு மட்டுமே செவிசாய்த்துவந்த அதிகார வர்க்கம், இலங்கைத் தமிழர்தம் பிரச்னையின் ஆழத்தையும், அவர்கள் தரப்பு உண்மைகளையும் புரிந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க பிரதமர் முயன்றிருக்கிறார் என்பது தெரிகிறது.
இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களைச்
சந்தித்துப் பேசியதுடன் நின்றுவிடாமல், இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரனுக்கு தில்லி வர அவர்கள் மூலம் அழைப்பு விடுத்திருப்பது, யாருமே எதிர்பாராத புதிய அணுகுமுறை. இந்த அழைப்பின் மூலம், இந்தியா தமிழர்கள் நலனில் தனி அக்கறை செலுத்துகிறது என்பதையும், வடகிழக்கு மாகாண அரசுடன்
இந்தியா நேரிடையாகத் தொடர்பு வைத்துக்கொள்ளும் என்பதையும் அதிபர் ராஜபட்சவுக்கும், இலங்கை அரசுக்கும் பிரதமர் தெளிவு
படுத்தியிருக்கிறார். நரேந்திர மோடி அரசு இலங்கைத் தமிழர்
பிரச்னையில் தனிக்கவனம் செலுத்த முற்படுகிறது என்பது தெரிந்ததால்தானோ என்னவோ, அதிபர் ராஜபட்ச தனது அமைச்சரவையில் இரண்டு தமிழர்களுக்கு அவசர அவசரமாக இடமளித்திருக்கிறார்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மறுவாழ்வுப் பணிகள் என்கிற பெயரில் சிங்களர்கள் குடியேற்றப்பட்டு, தமிழர்களின் தனித்தன்மை அழிக்கப்படுகிறது. பொதுமக்கள் குடியிருப்புகளில் பெரும்பாலானவை ராணுவமயமாக்கப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் இன, மொழி, கலாசார அடையாளங்களை இலங்கை அரசு தொடர்ந்து சிதைத்தும், அழித்தும் வருகிறது. பெயருக்கு விக்னேஷ்வரன் வடக்கு மாகாண முதல்வராக இருந்தாலும்கூட, அதிக அதிகாரங்களுடன் உள்ள ஆளுநரும் மாற்றப்படவில்லை, ராணுவமும் அகற்றப்படவில்லை. காலப்போக்கில் தமிழர்களுக்கென அரசியல் தீர்வு தேவையில்லை என்கிற நிலைமையை ஏற்படுத்தும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டிருப்பதை, பிரதமரும் இந்திய அரசும் உணர்ந்து செயல்பட்டாக வேண்டும்.
அதிபர் ஆட்சி முறையில் வல்லான் வகுப்பதே சட்டமாக இருக்கிறது என்பதுதான், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அடிப்படைக் காரணம். இலங்கையில் குடியரசுத் தலைவர் ஆட்சி முறைக்குப் பதிலாக இந்தியாவில் இருப்பதுபோலப் பாராளுமன்ற ஜனநாயக முறைக்கு வழிகோலுவதுதான் இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும். அப்போதுதான், எல்லா பகுதியினருக்கும் ஆட்சியில் பங்கு கிடைக்கும். நியாயமான, சமச்சீர் வளர்ச்சியும் உறுதிப்படும்.
அதேநேரத்தில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், அதிபர் ராஜபட்சவுடன் பேசக்கூடாது, இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் போன்ற நடைமுறைக்கு ஒவ்வாத கோரிக்கைகளை முன்வைப்பது தவிர்க்கப்பட வேண்டும். அதிபர் ராஜபட்சவிடம் பேசாமலும், இலங்கை அரசின் ஒப்புதல் இல்லாமலும், ஈழத்தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது என்பதைக்கூட சிந்தித்துப் பார்க்க முடியாதவர்களாக நமது தமிழக அரசியல் தலைவர்கள் இருப்பது வேதனையாக இருக்கிறது.
இலங்கைத் தமிழர் பிரச்னை என்பது முள்ளில் விழுந்திருக்கும் சேலை. சாதுர்யமாகவும், எச்சரிக்கையாகவும் கையாள வேண்டிய பிரச்னை இது. பிரதமர் நரேந்திர மோடியின் அணுகுமுறை நம்பிக்கை தருவதாக இருக்கிறது. அதை ஆதரிக்க முற்பட வேண்டுமே தவிர, பிரச்னையை மேலும் அதிகரித்துவிடக் கூடாது
நன்றி; தினமணி
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.