தேனி மாவட்டதில் நியூட்ரினோ ஆய்வு நிலையம் அமைக்க அண்மையில் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதை எதிர்த்து சில அரசியல் கட்சிகள் குரலெழுப்புகின்றன. நியூட்ரினோ என்றால் என்ன? இந்தத் திட்டம் எதைப் பற்றியது? அதில் ஆபத்து உண்டா ஆகிய கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார் முதுநிலை விஞ்ஞானி த.வி வெங்கடேஸ்வரன்.
நியூட்ரினோ என்றால் என்ன?
அணுவின் அடிப்படைத் துகளான புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் போல ஓர் அடிப்படைத் துகள்தான் நியூட்ரினோ துகள்கள். நியூட்ரினோவும் நியூட்ரானும் பெயரில் ஒன்றுபோல இருந்தாலும், இரண்டும் வெவ்வேறு துகள்கள். பிரபஞ்சத்தில் உள்ள எல்லா மனிதர்கள், மரங்கள், கோள்கள், விண்மீன்கள், செடி, கொடி விலங்கு எல்லாவற்றின் எண்ணிக்கையையும் கூட்டினாலும் பிரபஞ்சத்தில் உள்ள மொத்த நியூட்ரினோவின் எண்தொகை அதிகம்.
நமது கற்பனைக்கும் எட்டாத அளவு சிறியது. ஓர் அணுவை கால்பந்து மைதானம் அளவு பெரிதாக்கினால் அதில் மையத்தில் உள்ள கால்பந்து அளவுதான் அணுக்கரு. அதனினும் சிறிது புரோட்டான், நியூட்ரான் போன்ற துகள்கள். எலக்ட்ரான் வெறும் கிரிக்கெட் பந்து அளவுதான். இதே அளவுகளில், நியூட்ரினோவைப் பார்த்தால் வெறும் பட்டாணி அளவு தான் நியூட்ரினோ.
மேலேயுள்ள பத்தியைப் படித்து முடித்திருக்கும் முன்பே உங்கள் உடல் வழி பலகோடி கோடி நியூட்ரினோக்கள் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்திருக்கும். நம்மால் இந்த நுண்ணிய நியூட்ரினோவை வெறும் கண்ணால் பார்க்க இயலாது என்றாலும், நாம் பார்க்கும் எல்லாவாற்றின் மீதும் நியூட்ரினோ பாய்ந்தபடி உள்ளது என்பது மட்டும் நிச்சயம். ஒவ்வொரு நொடியும் ஒரு சதுர சென்டிமீட்டர் அளவு இடத்தில், அதாவது நமது பெருவிரல் நகம் அளவு இடத்தின் ஊடே சுமார் 650 கோடி நியூட்ரினோ பல திசைகளிலிருந்தும் வந்து பாய்ந்து செல்கிறது.
பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கனசென்டி மீட்டர் அளவிலும் சுமார் முன்னூறு நியூட்ரினோக்கள் உள்ளன. மீனுக்குத்தான் நீந்தும் நீரைத் தெரியாது என்பார்களே, அப்படித்தான் பிரபஞ்சத்தில் நம்மைச் சுற்றி அபரிமிதமாக இறைந்து கிடந்தாலும் நியூட்ரினோ குறித்த நமது அறிவு இன்று மிக மிகச் சொற்பம்.
இந்தத் திட்டம் எதைப் பற்றியது?
இந்தத் துகள்களின் தன்மை மற்றும் குணங்களை அறியத்தான் இந்தத் திட்டம். பிரபஞ்சத்தில் எல்லா மூலையிலிருந்தும் இடையறாது மலைபோலக் கொட்டிக் கொண்டிருக்கும் நியூட்ரினோவை அளக்கும், உணரும் கருவிதான் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் அமைக்கப்பட இருக்கிறது.
பிரபஞ்சத்தில் மிக அதிக அளவில் இருக்கும் துகள் என்றாலும் நியூட்ரினோ துகள்களை எளிதில் உணரமுடியாது என்பதால்தான் இதுவரை இது போன்ற ஒரு துகள் இருக்கிறது என்று கூட நமக்குத் தெரியாமல் இருந்தது. 1934-ல் தான் இப்படி ஒரு துகள் இருக்க வேண்டும் என்ற யூகம் ஏற்பட்டது, பின்னர் 1953-ல்தான் இவ்வாறு ஒரு துகள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது என விஞ்ஞானிகள் உறுதிபடக் கண்டுபிடித்தனர். சிக்குவதில் சிக்கலான இந்தத் துகளை உணர்வது அரிது என்பதால் இதை இனம் காணச் சிறப்பு ஏற்பாடுகள் வேண்டும்.
விண்வெளியிலிருந்து நியூட்ரினோ மட்டுமல்ல அணுத் துகள்கள், அடிப்படைத் துகள்கள், காஸ்மிக் கதிர்கள் எனப் பல துகள்கள் நம் மீது எல்லாக் கணமும் விழுந்த வண்ணம் உள்ளன. நியூட்ரினோ குறித்து ஆராய ஏனையத் துகள்களை வடிகட்டி தடுக்க வேண்டும்.
பாறைகள் சிறந்த வடிகட்டி, விண்வெளியிலிருந்து வரும் அணுத் துகள்கள், அடிப்படைத் துகள்கள், காஸ்மிக் கதிர்கள் முதலிய பாறைகளில் பட்டு நின்று விடும். நியூட்ரினோ மட்டும் பாறைகளைத் தாண்டி செல்ல முடியும். ஆக, அடர்த்தியான பாறைகள் கொண்ட மலையின்கீழ் அல்லது பூமிக்கு உள்ளே சுரங்கத்தினுள்தான் நியூட்ரினோ உணர்வுக் கருவியை வைக்க முடியும்.
மழை அளவை அளக்க மழை மானி வைக்கிறோம். அந்தக் குடுவையில் விழும் மழையை அளப்பதால் மட்டும் அந்த இடத்தில் கூடுதல் மழை பொழியாது. அதேபோல் மழைப் பொழிவு குறையவும் குறையாது. அதுபோல இந்தக் கருவி பிரபஞ்சத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் இயல்பாக வரும் நியூட்ரினோக்களை இனம் காணுமே தவிர, புதிதாக நியூட்ரினோக்களை உருவாக்காது அல்லது இயல்புக்கு விரோதமாக அதிக நியூட்ரினோக்களை உறிஞ்சி எடுக்கவும் செய்யாது.
விண்வெளியிலிருந்து இயல்பாக வரும் நியூட்ரினோக்களை இனம் கண்டு அதன் தன்மை மற்றும் குணங்களை ஆராயும் அடிப்படை அறிவியல் திட்டம்தான் இந்தத் திட்டம்.
இதைச் செய்வதால் என்ன லாபம்?
அறிவியல் ஆராய்ச்சிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
கருவி தயாரிக்கும் ஆய்வு (Technology development) – எடுத்துக்காட்டாக ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அளக்க கையடக்கக் கருவி இன்று பழக்கத்தில் உள்ளது. இரண்டாவது வகை பயனுறு ஆராய்ச்சி (applied research) இங்கு இறுதியில் தொழில்நுட்பக் கொள்கைகள் வடிவமைக்கப்படும். நேரடி பயன்பாட்டுக் கருவிகள் அல்ல. எடுத்துக்காட்டாக ரத்தத்தில் உள்ள இன்சுலினை எதை வைத்து எளிதில் எப்படி அளப்பது என்பது குறித்த ஆய்வு. ரத்த மாதிரியில் எதாவது ஒரு ரசாயனத்தை இட்டால் அதில் உள்ள இன்சுலினுக்குத் தக்கவாறு நிறத்தில் அல்லது வேறு ஏதாவது மாற்றம் தரவேண்டும். அந்த ரசாயனம் எதுவாக இருக்கலாம் என்பது போன்ற ஆராய்சிகள் இரண்டாம் வகை. ஆனால் அதற்கும் முன்னர் இன்சுலின் குறைவால்தான் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது என்று அறிவது அடிப்படை ஆய்வு. அது basic research எனப்படும்.
எனவே அடிப்படை ஆய்வுதான் அடித்தளம். அதிலிருந்துதான் பயனுறு ஆய்வும் அதிலிருந்து பயன் கருவிகளும் ஏற்படும். நியூட்ரினோ குறித்த ஆய்வு, வானம் ஏன் நீல நிறமாக இருக்கிறது; துல்லியமாக நிலவு எத்துணை தொலைவில் இருக்கிறது என்பது போன்ற அடிப்படை ஆய்வு (basic research). இதன் வழி பிரபஞ்சத்தில் எங்கும் பரவியுள்ள நியூட்ரினோ குறித்து அறிய முடியும்.
வெடிபொருள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறதே, அதைக் குறித்து விளக்கம்?
இந்த ஆய்வுக் காலம் முழுவதும் வெடிபொருள்கள் பயன்படுத்தப்போவது இல்லை. இரண்டு கிலோமீட்டர் நீளமாகப் பக்கவாட்டில் மலையில் சுரங்கம் அமைக்க மட்டுமே பயன்படுத்தப்படும். அதாவது முதல் இரண்டு மூன்று ஆண்டுகள் கட்டுமான சமயத்தில் மட்டுமே வெடிபொருள் பயன்படுத்தப்படும்.
கல்குவாரிபோல வெடி வைத்துப் பாறைகளை வெடிப்பது அல்ல நோக்கம். சுரங்கம் அமைப்பதுதான் இலக்கு. எனவே controlled explosions என்கிற திட்டமிட்ட வெடிப்பில், ஒரு நாளைக்கு இரண்டு வெடிப்பு வீதம் மட்டுமே நடத்தப்படும். வெடிப்பு ஒரு சில நொடிகள் மட்டுமே இருக்கும். அவ்வாறு திட்டமிட்ட வெடிப்பு செய்யும்போது 500 மீட்டருக்கு அப்பால் ஒரு செ.மீ. அளவுக்குக் கூட பூமி அதிராது. சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள அண்டை கிராமத்தில் அதிர்வு உணர்வு கூட தென்படாது. ஆகவே, சுரங்கம் தோண்டுவதால் சூழல் பாதிப்பு எதுவும் இருக்காது. சென்னை, டெல்லி போன்ற நகரங்கில் இன்று சர்வசாதாரணமாகப் பல கிலோமீட்டர் பாதாள ரயில் திட்டத்திற்காக சுரங்கம் அமைக்கப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கோலார் தங்கச்சுரங்கத்தில் நடந்த ஆய்வு குறித்து?
1970-களில் கோலார் தங்கச் சுரங்கத்தில் இதேபோன்ற காஸ்மிக் கதிர்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. அங்கு காஸ்மிக் கதிர்களை உணரும் கருவிதான் வைக்கப்பட்டது. காஸ்மிக் கதிர்கள் குறித்த உலக அறிவுத் தொகுப்பில் இந்த ஆய்வுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. கோலார் தங்கச்சுரங்கம் சிதிலமடைந்து வெள்ளம் புகுந்த பின் அந்த ஆய்வுக் கூடம் மூடப்பட்டது. இன்று காஸ்மிக் கதிர் ஆராய்ச்சி விண்வெளியிலிருந்து செயல்படுகிறது. எனவே சுரங்கம் தேவையில்லை.
ஏன் தேனி மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டது?
விண்வெளியிலிருந்து நியூட்ரினோ மட்டுமல்ல அணுத்துகள்கள், அடிப்படைத் துகள்கள், காஸ்மிக் கதிர்கள் எனப் பல துகள்கள் நம்மீது எல்லாக் கணமும் விழுந்த வண்ணம் உள்ளன. நியூட்ரினோ குறித்து ஆராய ஏனையத் துகள்களை வடிகட்டி தடுக்கவேண்டும்.
பாறைகள் சிறந்த வடிகட்டி. விண்வெளியிலிருந்து வரும் அணுத்துகள்கள், அடிப்படித் துகள்கள், காஸ்மிக் கதிர்கள் முதலிய பாறைகளில் பட்டு நின்று விடும். நியூட்ரினோ மட்டும் பாறைகளைத் தாண்டி செல்ல முடியும். ஆக, அடர்த்தியான பாறைகள் கொண்ட மலையின் கீழ் அல்லது பூமிக்கு உள்ளே சுரங்கத்தினுள்தான் நியூட்ரினோ உணர்வுக் கருவியை வைக்க முடியும். எனவே அடர்த்தியான பாறைகள் நிரம்பிய பகுதிகளைத்தான் தேர்வு செய்யவேண்டும்.
இதன் ஒரு பகுதியாகத்தான் இமயமலைப் பகுதியில் இடத்தேர்வு ஆய்வு நடத்தப்பட்டது. இந்தப் பகுதி இந்த ஆய்வுக்கு ஏற்பானதா என ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இமயமலை இளமை மலை. எனவே போதிய அளவு வடிகட்டியாகச் செயல்பட முடியாது என அந்தப் பகுதி நிராகரிக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைதான் உலகிலேயே தொல் மலைகளில் ஒன்று. இங்குதான் பல மலைகள் அடர்த்தியான பாறைகளைக் கொண்டுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையின் பல மலைகளில் விவசாயம் போன்ற பல தொழில்கள் நடந்து வருகின்றன.
எனவே ஏற்கெனவே விவசாயம் போன்ற பயனில் உள்ள நிலத்தைக் கையகப்படுத்தக் கூடாது, மரங்கள் செறிவாக உள்ள பகுதிகள் தவிர்க்கப்படவேண்டும் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டது.
எனவே மேற்குத் தொடர்ச்சி மலையில் இரண்டு இடங்கள் நல்ல பாறை அமைப்பைக் கொண்டுள்ளது எனவும் அங்கு விவசாயம் அல்லது மரங்கள் அடர்ந்த பகுதிகள் இல்லை எனவும் இனம் காணப்பட்டது. ஒன்று, நீலகிரி பகுதியில் குறிப்பிட்ட ஒரு இடம். மற்றது, தேனி பகுதியில் குறிப்பிட்ட ஒரு மலை. இதில் நீலகிரி பைகாரா மின் திட்டப் பகுதி புலிகள் சரணாலயத்திற்குள் வருகின்றது. எனவே அங்கு வளர்ச்சிக் கட்டுமானத் திட்டங்களை ஏற்படுத்தக் கூடாது என விதிகள் உள்ளன. எனவே இறுதியில் தேனி மாவட்டத்தில் தரிசுப் பகுதியாக உள்ள குறிப்பிட்ட மலைப்பகுதிதான் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கருவி அல்லது ஆய்வுக்கூடம் கதிர்களை வெளிப்படுத்துமா? அந்தப் பகுதியில் வெப்பத்தைக் கூட்டுமா?
Neutrino detector – அதாவது நியூட்ரினோ உணரும் கருவி என்பதுதான் இதன் பெயர். இந்தக் கருவி வெப்பமானி, மழை மானி போல ஓர் உணர்வுக் கருவி தான். இதனால் எந்தவிதமான அணுக்கதிர்வீச்சும் ஏற்படாது. புகை, கழிவு நீர் போன்ற சூழல் ஆபத்தும் இல்லை. வெப்பமும் ஏற்படாது. கார் என்ஜினில் அதன் இயக்கத்தில் வெப்பம் ஏற்படும் அல்லவா, அதற்காக ரேடியட்டர் வைத்து இருப்பார்கள். அதுபோல இந்தக் கருவியின் முன் காந்தப் பகுதி சூடு ஏறிவிடாமல் இருக்க, ஏற்பாடுகள் உள்ளன. ஆனால் சிலர் இந்த ஏற்பாட்டை அந்தப் பகுதியில் வெப்பம் பரவி பாலைவனம் ஆகிவிடும் எனத் தவறாக கருதி இருக்கின்றனர். கார் என்ஜினில் ஏற்படும் வெப்பத்தை விட கூடுதலாக இந்தக் கருவி வெப்பத்தை ஏற்படுத்தாது. இரண்டு கிலோமீட்டர் சுரங்கத்தில் வைக்கப்படும் இந்தக் கருவியால் யாருக்கும் உயிர், பொருள் வாழ்வுச் சூழல் ஆபத்து முற்றிலும் கிடையாது.
நன்றி : புதிய தலைமுறை
You must be logged in to post a comment.
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
நல்ல அறிவியல் ஆய்வு தெளிவான விளக்கம் !