கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக 3 குவாரி அதிபர்கள் உள்பட 5 பேர் கைதானது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் காரைக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் படிக்காசுவின் பின்னணி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அவரது கைதால் தி.மு.க. மாஜிக்கள் பதறுகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் ஆய்வு நடத்தி வருகிறார். அவரிடம் தினந்தோறும் கிராம மக்கள் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், மேலூர் மற்றும் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கனிமவளத் துறை கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பியது.
அதன் பேரில் மதுரை எஸ்.பி. விஜயேந்திர பிதாரி தலைமையில் ஜன. 31-ம் தேதி நள்ளிரவு திருச்சுனையைச் சேர்ந்த சகோதரர்களான கிரானைட் அதிபர்கள் சோலைராஜன், மோகன் மற்றும் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரை சேர்ந்த கிரானைட் அதிபர் பி.எல்.படிக்காசு ஆகியோருடன் குவாரி ஊழியர்கள் காந்திநகர் நாகூர் அனிபா, கம்பர்மலை சேதுராமன் ஆகியோரும் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதோடு குவாரி அதிபர்களின் வீடுகளில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இவர்களில் காரைக்குடி பள்ளத்தூர் அருகேயுள்ள கல்லூரைச் சேர்ந்த படிக்காசுவின் பின்னணிதான் மலைக்க வைக்கிறது. அவரை பற்றி விசாரித்தபோது, லோக்கலில் அரிசி ஆலை ஒன்றைத் துவங்கி நடத்தி வந்தவர், அதன்பின் படிப்படியாக தவிட்டில் இருந்து எண்ணெய் எடுப்பது, தி.மு.க. பிரமுகர் ஒருவருடன் இணைந்து ரியல் எஸ்டேட் என இவரது தொழில் கரம் நீண்டது என்கிறார்கள்.
இதுபற்றி விசாரணை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். "குறுகிய 10 ஆண்டுகளில்தான் இவரது வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. உள்ளூர் தி.மு.க. அமைச்சரின் அறிமுகம் கிடைக்க, கோவை தொழிலதிபரிடமிருந்த மணல் கான்ட்ராக்ட்டுகள் படிக்காசுவுக்கு மாறியுள்ளது. அதன்பின் தாமிரபரணி முதல் காவிரி வரை உள்ள மணல் குவாரிகளை ஆக்டோபஸ் போல ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளார்.
அதற்காக அன்றைய தி.மு.க. அமைச்சர்கள் முதல் தலைமையின் துணைவி வரை 'கவனித்து' தனது செல்வாக்கை மேலும் வளர்த்து கொண்டார். ஒரு கட்டத்தில், கேரளாவிற்கும் வெளிநாடுகளுக்கும் மணல் விற்பனை வெகுஜோராக நடந்திருக்கிறது. இதன்மூலம் கோடிகளில் பணம் கொட்ட, அதனை வேறு தொழில்களிலும் முதலீடு செய்யத் துவங்கியுள்ளார்.
அந்த வகையில், இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய வசதியாக புதுக்கோட்டை அருகே பேப்பர் மில், இவரது தம்பி பெயரில் மலேசியாவில் ஓட்டல்கள் என விரிவு பெற்றிருக்கிறது. முதன்முதலில் இவரை தலைமையிடம் அறிமுகப்படுத்திய மூத்த மாஜி, 'இவர் ஒரு நல்ல கணக்குப் பிள்ளை' என்றுதான் அறிமுகம் செய்தாராம். ஏனெனில், எவ்வளவு மணல் எடுத்தோம்? இதில் யார், யாருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது? தற்போது உங்கள் பங்கு எவ்வளவு? தன்னுடைய பங்கு எவ்வளவு என்பதை ஒரு நோட்டில் எழுதி வைத்து அதனை சம்பந்தப்பட்டவர்களிடம் காண்பிப்பாராம்.
இவரை, கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட தயாநிதிமாறன் தனது உதவியாளர் ஒருவரின் இல்லத் திருமணத்திற்காக காரைக்குடி வந்த போது, அவர் தங்கியிருந்த ஓட்டலில் சுமார் ஒரு மணிநேரம் தனியாக சந்தித்து அளவளாவிக் கொண்டிருந்தாராம். அதேபோல் மதுரை வாரிசுடனும் இவர் நெருக்கம் பாராட்டி வந்துள்ளார். இதனால் கடந்த தி.மு.க. ஆட்சியில் இவரது வளர்ச்சி யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு இருந்துள்ளது.
மேலும் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. பிரமுகரின் முக்கிய பங்குதாரராகவே இருந்துள்ளார். இவர் பெயரில்தான் ஏக்கர் கணக்கில் இடங்களை வாங்கி மாற்றியுள்ளனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தனக்கு சிக்கல் வராமல் இருக்க, அ.தி.மு.க.விலும் சிலருடன் நெருக்கத்தைக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், தற்போது உசிலம்பட்டி பகுதியில் கிரானைட் குவாரியில் நடத்திய சோதனைதான் படிக்காசுவை சிறைக் கம்பிகளை எண்ண வைத்துள்ளது. பி.ஆர்.பி. கைதாகி ஜாமீனில் வந்த நிலையில் அந்த கிரானைட் கம்பெனியை அவரிடம் கொடுத்துவிட்டதாக கூறும் படிக்காசு, பெயரை மாற்றாமல் இருந்ததற்குக் காரணம் புரியவில்லை. இந்த குவாரியில் மட்டும் ரூ.220 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அ.தி.மு.க. புள்ளிகள் மூலம் கைதைத் தடுக்க மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. மேலிடத்தில் இவர் குறித்துப் பேசிய போது, 'யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்' என்ற கிரீன் சிக்னல் கிடைத்தது. இவர் கைது செய்யப்பட்டதால், தி.மு.க. வி.ஐ.பி.க்கள் தான் கிலி அடித்துக் கிடக்கின்றனர்" என்றார்.
நன்றி : குமுதம்
– மாதவன்
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.