முன்னொரு காலத்தில் பராசக்தி மும்மூர்திகளைப் படைத்தாள். அவர்களில் ஒருவரான பிரும்மா உலகைப் படைக்க வேண்டும் என கட்டளை பிறப்பிக்கப்பட அவர் தனது நெற்றியில் இருந்து ருத்திரனை படைத்தார். அப்படி வந்த ருத்திரனை உலகில் ஜீவராசிகளை படைக்கு மாறு பிரும்மா கேட்டுக் கொண்டாராம் .
அந்த கட்டளையை ஏற்ற ருத்திரரும்; தான் படைக்க உள்ள ஜீவன்கள் அனைத்தும் நற்குணம் பெற்று இருக்க வேண்டும் என
எண்ணியவாறு பாதாள உலகத்திற்குச் சென்று அத்தகைய சக்தியை தான் பெற்றிட தவம் இருந்தார். ஆனால் அவருடைய தவக் காலம் மூன்று யுகங்களுக்கும் மேலாகத் தொடர்ந்தது. உலகம் இன்னமும் படைக்கத் துவங்கவில்லை.
என்ன இது, நான் உலகைப் படைக்க அனுப்பிய ருத்திரன்; தன் தொழிலை செய்யத் துவங்கவில்லையே என எண்ணிய பிரும்மாவின் பொறுமை மறைந்தது. அதனால் கோபமுற்று நானே உலகைப் படைக்கின்றேன் என கிளம்பி மூன்று குணங்களைக்
கொண்ட ஜீவராசிகளை படைக்க துவங்கினார்.
அதை அறிந்த ருத்திரர் கோபத்துடன் பிரும்மாவிடம் சண்டைப் போட பூமியில் இருந்து வெளியே வந்த பொழுது அவரை பூமாதேவி தடுத்து நிறுத்தினாள் . அவர் ஓடிய வேகத்தில் சென்றால் தம்மால் தாங்க முடியாது என அவரிடம் வேண்டிக் கொண்டு அவரை மெதுவாகச் செல்லுமாறும் , அதற்காக தன்னுடைய காதின் வழியே வெளியேறுமாறும் வேண்டினாள் .
ஆகவே பசு போன்ற உருவில் தன்னை மாற்றிக் கொண்டு அமர்ந்த அவளுடைய காதின் வழியாக ருத்திரரும் பூமியை விட்டு வெளியேறிய பொழுது அவருடைய கோபம் பெருமளவு தணிந்தது. அவர் அவளுடைய காதில் இருந்து வெளியெறியதால் கோ என்றால் பசு எனவும் கர்ணம் என்றால் காது எனவும் அர்த்தம் தரும் வகையில் அமைந்திருந்த வார்த்தையை கொண்டு அந்த இடத்தை கோகர்ணம் எனப் பெயரிட்டனர். .
அங்கிருந்து வெளியேறிய பின்னரும் ருத்திரனின் கோபம் அடங்கவில்லை. அவர் பிரும்மாவைத் தேடிக் கொண்டு அவர் படைத்திருந்த ஜீவராசிகளை அழிக்க கிளம்பிச் சென்றார் அப்பொழுது திருமால் அவரை வழியிலே சந்தித்து அகம விதிகளின்படி பிரளய காலத்தில் மட்டுமே அனைத்து ஜீவராசிகளையும் அழிக்க வேண்டும் என்பது விதி என்பதினால் அவர் பிரும்மா மீதான கோபத்தை மறந்து விட வேண்டும் எனக் கேட்க ருத்திரனான சிவன் தன் லோகத்துக்குத் திரும்பினார். ஆனால் சும்மா திரும்பவில்லை.
மான் உருவில் மாறி பிரும்மா விஷ்ணு மற்றும் படைப்புக்களின் அனைத்து சக்திகளையும் உறிஞ்சி அவற்றை தம் கொம்புகளில் வைத்துக் கொண்டு; கைலாயத்திற்குச் சென்று விட்டார். அதை அறிந்த அனைத்து தேவர்களும் கைலாயத்திற்கு சென்று சிவபெருமானிடம் நடந்து விட்ட நிகழ்ச்சிகளை மறந்து மன்னித்து விட்டு தம்முடைய சக்திகளைத் திரும்பத் தருமாறு அவரிடம் வேண்டினர்.
சிவபெருமானும் அவர்களது கோரிக்கைகளை ஏற்று அவர்களுடைய சக்திகளை அவர்களிடம் திருப்பி தந்த பின் தன்னுடைய பல சக்திகளை ஒரு கொம்பில் வைத்து அதை சிவலிங்கமாக்கி அதற்குப் பிராண லிங்கம் எனப் பெயரிட்டார். அந்த பிராண லிங்கத்தின் சக்தியினால்தான் ஒரு முறை தேவர்கள் அசுரர்களுடன் நடந்த யுத்தத்தில் அசுரர்களை வெல்ல முடிந்தது.
சிவபெருமான் பூமியின் காதில் இருந்து வெளியேறிய இடத்தையும் , திருமால் அவருடைய கோபத்தை அடக்கிய இடத்தையும் சேர்த்து அந்த இடம் ருத்திர பூமி எனப் பெயர் பெற்றது. அங்கு சென்று இறப்பவர்கள் மோட்சத்தை அடைவார்கள் எனக் கருதப்பட்டன. அதனால் அதற்கு சித்த பூமி என்ற இன்னொரு பெயரும் ஏற்பட்டது.
ஆனால் பிரும்மா படைத்த ருத்திரரைப் பற்றிய இன்னொரு கதையும் உள்ளது. அதன்படி பிரும்மா தன்னுடைய நெற்றியில் இருந்து ருத்திரனை படைக்க அப்படி வெளிவந்த ருத்திரர் அர்தநாரிஸ்வரர் உருவில் வந்ததாகவும் , அதன் பின் அந்த ருத்திரர் தன்னைப் போன்ற பல கணங்களை உருவாக்கினார் எனவும் , தன் நெற்றியில் இருந்து வெளிவந்த ருத்திரனே உலகைப் படைக்கச் சிறந்தவர் என எண்ணிய பிரும்மா அவரிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்த பொழுது ருத்திரர் தான் பிறந்தது பிரும்மா படைக்கும் ஜீவராசிகளின் காலத்திற்கேற்ப அவற்றை அழிப்பதற்கே எனவும் , அப்படி செய்யாவிடில் இவ்வுலகில்
பெருகிக் கொண்டே இருக்கும் ஜீவன்கள் தங்க இடம் இன்றிப் போய்விடும் எனவும் கூறினாராம் . அது மட்டும் அல்ல அர்தநாரிஸ்வரரை பார்த்த பொழுதுதான் பிரும்மாவுக்கும் ஆண் பெண் தத்துவம் என்ன எனப் புரிந்ததாகவும், அதனால்தான் அவர் படைப்பில் ஆண் பெண் என்ற இரு பிரிவுகளை அவர் படைத்தாராம் .
பிரும்மாவின் படைப்புக்கள் பெருகி கொண்டே இருந்தன. தான் பிரும்மா மூலம் ருத்திரராக அவதரித்தப் பிறகு பூமிக்குள் சென்று பல காலம் தவம் இருந்த ருத்திரர் ; தன்னுடைய தொழிலைத் துவக்க வேகமாக வெளியே வந்த பொழுதுதான் பூமா தேவி அவரை பசுவைப் போன்ற மென்மையான உடலைப் பெற்றிருந்த பெண்ணான தன்னுடைய காதின் வழியாக மெதுவாக அவரை வெளியேறுமாறு வேண்டிக் கொண்டாளாம் . படைக்கப்பட்ட ஜீவன்களுடைய காலம் முடிந்த பின் அவற்றுக்கு மோட்சம் தர அவர் வெளியேறி இடமான கோகர்ண பூமி சித்த பூமி என ஆயிற்றாம்.எது எப்படியோ கோகர்ண பூமி தோன்றிய
பின் ருத்தரினான சிவபெருமான் கைலாயம் சென்று விட்டார்.
இராவணனின் தாயார் பெரிய சிவ பக்தை.தன்னுடைய மகன் எவராலும் அழிக்க முடியாத பெரும் பலசாலியாக இருக்க வேண்டும் என்றும் , அதற்காக சிவபெருமானின் பிராண லிங்கம் தனக்கு வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டு கடலருகில் அமர்ந்தவாறு தினமும் ஒரு சிவலிங்கத்திற்கு தொடர்ந்து பூஜைகள் செய்து கொண்டு இருந்தாள் .
அவள் பூஜை நிறைவு பெற்று விட்டால் அனைவரின் வாழ்க்கையும் வீணாகிவிடும் என பயந்து போன கடல் மன்னன் அந்த சிவலிங்கத்தை கடலுக்குள் இழுத்து சென்று அழித்துவிட்டார் . அதனால் தாயார் அடைந்த வருத்தத்தை கண்ட இராவணன் கைலாயத்தில் உள்ள அந்த பிராண லிங்கத்தை தானே கொண்டு வருவதாகக் கூறி விட்டு கைலாயத்தை அடியோடு பெயர்த்து எடுக்க முயன்றான் .அதனால் கைலாயமே அதிர்ந்தது. பயந்து போன பார்வதியும் பிற தேவரகளும் சிவனிடம் ஓடி சென்று இராவணனின் செயலைக் குறித்து கூறினர்.
கைலாயத்தை பெயர்க்க முயன்று கொண்டு இருந்த இராவணனின் கைகளையும் தலையையும் மலையின் அடியில் சிவபெருமான் அழுத்த வலியினால் துடித்த இராவணன் சிவபெருமானிடம் மன்னிப்புக் கோரி தன்னை விடுவிக்குமாறு வேண்டினான். அவரும் மனமிரங்கி அந்த மலையை தூக்கி விட்டார் . வெளியில் வந்த இராவணன் சற்றும் தாமதிக்காமல்; தன் ஒரு தலையை வெட்டி , கைகளில் இருந்து உருவி எடுத்த நரம்புகளைக் கொண்டு அவற்றினால் ஒரு வாத்தியக் கருவியை செய்து சாமவேத கான பாடல்களைப் பாடி சிவனைத் துதித்தான் .
என்ன இருந்தாலும் தன்னுடைய பக்தனின் வேண்டுகோளுக்கு செவி
சாய்ப்பவர்தான் சிவபெருமான். அவன் முன் தோன்றி என்ன வேண்டும் எனக் கேட்க அவனும் தயங்காமல் தன்னுடைய தாயாரின் விருப்பத்தைக் கூற அவர ; சற்றும் யோசிக்காமல் இராவணனுக்கு பிராண லிங்கத்தைக் கொடுத்து விட்டார். கொடுத்தப் பின் ஒரு முக்கிய நிபந்தனை போட்டார். அவன் எடுத்துச் சென்று அவனுடைய தாயார் விரும்பிய இடத்தில் அதை வைக்க வேண்டும் . அந்த பிராண லிங்கத்தை எடுத்துச் செல்லும் வழியில் தப்பித் தவறி கீழே வைத்து விட்டால் அதை வெளியே எடுக்க முடியாது. அதன் பயன் அவனுக்குக்
கிடைக்காது.
சிவ லிங்கத்தை எடுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்த இராவணன் தன் நாட்டை அடைந்து அதை பிரதிஷ்டை செய்து விட்டால் அவனை எவராலும் வெல்ல முடியாது என பயந்து போன தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டனர். அவரும் வர இருந்த ஆபத்தைப் பற்றி அறிந்து கொண்டார். உடனே அனைவரையும் அழைத்துக் கொண்டு வினாயகரிடம் சென்று அவர்தான் அதற்கு ஒரு நல்ல முடிவு காட்ட வேண்டும் எனவும் , இராவணன் அந்த லிங்கத்தை தன்னுடைய நாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாமல் அவனைத் தடுக்க வேண்டும்
எனவும் அவரிடம் கேட்டனர.
அவர்களுடைய கவலையை தான் தீர்ப்பதாகக் கூறிய வினாயகரும் முதலில் வருண பகவானை இராவணனின் வயிற்றுக்குள் சென்று இம்சை செய்யுமாறு கூறினார். வருணனும் இராவணனின் வயிற்றை தண்ணீரால் நிறப்பினார். இராவணனுக்கு அவசரமாக சிறு நீர் கழிக்க வேண்டி வந்தது. லிங்கத்தை எங்கே வைப்பது.
அப்பொழுது வினாயகர் ஒரு அந்தணர் உருவில் சென்று இராவணனை சந்தித்தார். அவரை கண்டு மனம் மகிழ்ந்த இராவணன் அவரிடம் அந்த லிங்கத்தை
பிடித்துக் கொண்டு நிற்குமாறு வேண்டிக் கொண்டு சிறுநீர் கழிக்கச் சென்றான் .
இராவணன் தான் அவனிடம் குறிப்பிட்டிருந்த நேரத்துக்குள் திரும்பாததை கண்டு அந்தணர் உருவில் இருந்த வினாயகர் அந்த லிங்கத்தை பூமியில் வைத்து விட்டார்; கோபமற்று திரும்பி ஓடி வந்த இராவணன் வினாயகரின் தலை மீது ஓங்கி அடித்து விட்டு அந்த லிங்கத்தை பூமியில் இருந்து பெயர்த்து எடுக்க முயன்றான். அதை எடுக்க முடியவில்லை. வினாயகரும் மறைந்து விட்டார்.
கோபமுற்று சிலவிங்கத்தின் மீதிருந்த அனைத்தையும் தூக்கி எறிய அந்த பொருட்கள் விழுந்த இடங்களில் சிவலிங்கங்கள் தோன்றின. இப்படியாக ஐந்து இடங்களில் சிவலிங்கங்கள் தோன்ற அது பஞ்ச லிங்க பூமி எனவும் , அவன் இழுத்த வேகத்தில் சிவலிங்க உருவம்
பசுவின் காதைப் போல ஆனதினால் அந்த இடத்திற்கு கோகர்ணம் என பெயர் வந்தது எனவும் இன்னொரு காரணத்தை கூறுகின்றனர்.
அதன் பின் லிங்கத்தை தான் பிரதிஷ்டை செய்து விட்ட இடத்தில் வினாயகரும் சென்று அமர்ந்தார். ருத்திரரும் மனம் மகிழ்ந்தார். ருத்திரர் பூமியில் இருந்து வெளிவந்த அந்த இடத்தில்; வினாயகர் பிரதிஷ்டை செய்ததினால் அந்த இடத்திற்கு சென்று வினாயகரை வணங்கிய பின் சிவனை பூஜித்தால்; மோட்சம் அடைவார்கள் என்ற நம்பிக்கை தோன்றியது.
Tags; ஆலயம் தொழுவது சாலவும் நன்று, ஆலயம் சென்று , ஆலயம் பதினாயிரம், சிவன் ஆலயம், புராண வரலாறு
நன்றி சாந்திப்பிரியா
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.