சர்ச்சைகளால் ஏற்படும் சங்கடங்கள்

 அண்மைக்காலமாக, பாஜகவில் சில தலைவர்களின் பேச்சுக்கள் சர்ச்சைக்குரியதாகி வருகின்றன. சாக்ஹி மஹராஜ், சாத்வி நிரஞ்சன் ஜோதி, மஹந்த் ஆதித்யநாத் போன்ற இரண்டாம் நிலைத் தலைவர்கள் சிலரின் எக்குத்தப்பான பேச்சுக்களால், நரேந்திர மோடியின் வளர்ச்சிக்கான ஆட்சிக்கு பங்கம் ஏற்படுகிறது. சாக்ஷி மஹராஜூக்கு பாஜக அளித்துள்ள எச்சரிக்கை நோட்டீஸ், அதன் தீவிரத்தை கட்சி உணர்ந்திருப்பதை வெளிக்காட்டுகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் வேர்கள் ஹிந்துத் துவத்தில் தான் நிலைகொண்டுள்ளன. ஹிந்து என்பதில் பெருமிதமும், தேசிய உணர்வில் தெளிவான கண்ணோட்டமும் தான் பாஜகவின் அடிப்படை. இதில் யார்க்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், ஆட்சியில் இருக்கும்போது, பாஜகவின் நிலைப்பாடுகள், தேசத்தின் ஒட்டுமொத்த மக்களையும் கருத்தில் கொண்டதாக இருந்தாக வேண்டும். ஒட்டுமொத்த மக்களும் பாஜகவின் லட்சியங்களை முழுமையாக ஏற்கும் நிலை வரும் வரை, கட்சி பொறுமை காத்தாக வேண்டும்.

மதச்சார்பின்மை என்ற காங்கிரஸ் கடைப்பிடித்த போலித்தனத்தில் பாஜக உழல வேண்டியதில்லை. அதே சமயம் பாஜக இப்போது ஆளும்கட்சி என்பதையும் மறந்துவிடக் கூடாது. இங்கு தான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடும் தலைவர்கள் தடம் புரள்கிறார்கள்.

இன்றைய தேசிய அரசியல், பாஜக –அதன் எதிரிகள் என இருகூறாகப் பிளவுபட்டு நிற்கிறது. பொதுவாகவே பாஜகவைக் குறைகூற காரணங்களைத் தேடும் எதிர்க்கட்சியினருக்கு, 'வெறும் வாயை மெல்லுவோருக்குக் கிடைத்த அவல் போல' சில சர்ச்சைகளை சொந்தக் கட்சியினரே உருவாக்கித் தருவது நல்லதல்ல.

சென்ற லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மையை மக்கள் வழங்கியதன் காரணம், இத்தனை நாட்களாக போலி மதச்சார்பின்மை மூலம் மக்களை காங்கிரஸ் கட்சியும் இடது சாரிகளும் மூன்றாவது அணியினரும் ஏமாற்றியதை மக்கள் புரிந்து கொண்டுவிட்டனர் என்பது தான். அதே சமயம், நாட்டின் வளர்சிக்கு நரேந்திர மோடியே தேவை என்ற எண்ணமும், ஊழலுக்கு அப்பாற்பட்ட ஆட்சி பாஜகவால் மட்டுமே அமையும் என்ற நம்பிக்கையும் கூட மோடியின் பெரும் வெற்றுக்குக் காரணங்களாயின.

மோடி பிரதமரான பிறகு பல நிர்வாக மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிக்கிறார். இப்போது அவர் எடுத்துள்ள நடவடிக்கைகளின் பலனை முழுமையாக அடைய நாட்டிற்குக் குறைந்தபட்சம் ஓரண்டாவது ஆகும். இப்போதே பொருளாதாரத்தில் மீட்சி தென்படத் துவங்கியுள்ளது. ஊழலுக்கு மோடி அரசு கடும் எதிரி என்பதை எல்லாக் கட்சியினரும் உணர்ந்துவிட்டனர். அவர்களால் மோடி அரசை வேறெந்த வழியிலும் குறைகூற முடியாது.

கறுப்புப் பண மீட்பில் தாமதம், அவசரச் சட்டங்கள் குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் நியாயமானவை அல்ல என்பது எதிர்க்கட்சியினரே அறிந்தவை. எந்த ஒரு அரசும் எதிர்க் கட்சிகளால் நாடாளுமன்றம் முடக்கப் படும்போது அவசரச் சட்டங்களைக் கொண்டுவந்தே ஆக வேண்டும். கறுப்புப்பண மீட்புக்கு முதல் முறையாக ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மோடி அரசு தான் எடுத்துள்ளது. எனவே இது தொடர்பான குற்றச்சாட்டுகளை மக்கள் பொருட்படுத்தப் போவதில்லை.

சில நேரங்களில் ஆர்வக் கோளாறு உண்மையான ஆர்வத்துக்கு முட்டுக்கட்டையாகி விடுவதும் உண்டு. அதுபோலவே சில பாஜகவினரின் கருத்துக்கள், சமீப காலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் உத்தரப் பிரதேசத்தின் உண்ணாவ் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.யான சாக்ஹி மஹராஜ்.

துறவியான இவர், ஏற்கனவே மூன்று முறை எம்.பி.யாக இருந்திருக்கிறார். உ.பி.யில் முக்கியமான பாஜக தலைவரான இவர் மீது, மாயாவதி அரசும் அகிலேஷ் யாதவ் அரசும் பல பொய் வழக்குகளைத் தொடர்ந்துள்ளன. இவரது பேச்சுகளே சில நேரங்களில் தடையாகவும் மாறிவிடுகின்றன.

இதன்மூலமாக ஊடகங்களில் அதீத கவனம் பெறும் சாக்ஷி மஹராஜ், இதனால் கட்சிக்குப் பெரும் தர்ம சங்கடத்தை உருவாக்கி விடுகிறார். இவரது பேச்சுக்கு வக்காலத்து வாங்குவதோ, அல்லது அவரது கருத்து கட்சியின் கருத்தல்ல என்று மறுப்பதோ பாஜக செய்தித் தொடர்பாளர்களின் வேலையாகி விடுகிறது.

குறிப்பாக கோட்சேவின் முன்யோசனையற்ற செயலால் விளைந்த சரித்திரத் தவறின் விளைவாக, சங்கமும் பாஜகவும் பல்லாண்டு காலமாக தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லாத 'காந்தி படுகொலை' பழியை நீண்டகாலமாக சுமந்து கொண்டிருக்கின்றன. அதன் பயனாகவே பாரதத்தின் வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டது; ஊழல் பெருச்சாளிகள் ஓடி ஒழிவதற்கான மதச்சார்பின்மை என்ற தந்திர குகையும் உருவாக்கப்பட்டது. இதை எல்லாம் மறந்துவிட்டு, கோட்சே புகழ் குலைகிறது. எதிரிகளுக்கு இவர்களே துணை போகிறார்கள்.

இந்நிலையில், "ஹிந்துப் பெண்கள் அனைவரும் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாட்டின் மக்கள் தொகையில் ஹிந்துக்கள் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்படாது" என்று உ.பி.யில் ஒரு நிகழ்ச்சியில் பேசி, மீண்டும் செய்தி ஆகி இருக்கிறார் சாக்ஷி. நாட்டின் மக்கள் தொகை விஷயத்தில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை ஒப்பிட்டால் சாக்ஷி கூறியது தவறில்லை என்பது உண்மையே. ஆனால், அரசு, அளவான குடும்பத்தைப் பிரசாரம் செய்யும் நிலையில், அரசின் பிரதிநிதி அதற்கு எதிரான கருத்தைத் தெரிவிப்பது சிக்கலையே ஏற்படுத்தும்.

எனவே தான், சாட்சியின் கருத்து, பாஜகவின் கருத்தல்ல என்று விளக்கம் அளிக்க வேண்டி வந்தது. தவிர, இது தொடர்பாக சாக்ஷி மஹராஜ் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எச்சரிக்கை நோட்டீஷும் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக ஊடகப் பரபரப்புக்காக எதையாவது உளறிக் கொட்டுவோரை கட்சி எச்சரித்திருக்கிறது.

இந்த இடத்தில் மக்கள் பெருக்கம் குறித்த சாட்சியின் கருத்தையும் உதாசீனம் செய்ய முடியாது. ஹிந்து மக்கள் தொகை குறைந்த பகுதிகளாக இருந்த பிரதேசங்கள் தான் 1947-ல் தேசப்பிரிவினைக்கு இலக்காயின என்பதை மறந்துவிட முடியாது. இங்கு சாக்ஷி மஹராஜ் செய்திருக்க வேண்டியது, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை அனைத்து சமுதாயங்களும் சரிசமமாகக் கடைபிடிக்கச் செய்ய என்ன செய்வது என்ற ஆலோசனையை அரசுக்கு வழங்கி இருக்க வேண்டும் என்பது தான்.

அதுவும் கூட சர்ச்சைக்குரியதாகவே இருக்கும் ஆனால், மதரீதியாக இதனை அணுகாமல் தேசநலன் என்ற அடிப்படையில் அணுகும்போது, சர்ச்சைகள் குறைவது மட்டுமல்ல, பாஜகவின் மதிப்பும் அதிகரிக்கும்.

தில்லியில் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, "இந்தியாவில் பிறந்தோர் அனைவரும் – ஹிந்துக்களோ அனைவருமே ராமனின் வழித்தோன்றல்கள் தான்" என்று கூறினார். அத்துடன் அவர் நிறுத்தி இருந்தால் அவரை யாரும் நிராகரித்திருக்க முடியாது.

சாத்வியின் பேச்சை முக்கியமான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கின. மஹந்த் ஆதித்யநாத்தின் தாய்மதம் திரும்பும் 'கர்வாபஷி' பேச்சுகளும் நாடாளுமன்றத்து அரசுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தின.

நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் இன்னமும் தேசிய அரசியல் மாற்றத்தின் அர்த்தம் புரியாமல், அரசின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஹிந்துத்துவ அடையாளங்களைக் காண்பதாக எழுதிக் கொண்டிருக்கும் நிலையில் தான் பாஜகவின் சர்ச்சைக்குரிய பேச்சாளர்கள் பெரும் பிம்பம் ஆக்கப்படுகிறார்கள். ஊடகங்களுக்கு அமைதியான முறையில் நிர்வாகத்தை நடத்திச் செல்லும் சுஷ்மா ஸ்வராஜ், மனோகர் பாரிக்கர், அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங் போன்றோரைப் பாராட்ட நேரமில்லை. மோடியின் அனாவசியமான ஒரு வார்த்தையையும் இந்த ஊடகங்களால் சுட்டிக் காட்ட முடியாது. அதனால் தான், அவலாகக் கிடைக்கும் சாக்ஷி போன்றோரைக் கொண்டு அரசை விமர்சிக்கிறார்கள்.

சாக்ஷி மஹராஜுக்கு பாஜக தலைமை அளித்திருகுக்கும் எச்சரிக்கை, பிற தலைவர்களையும் கட்டுப்பாட்டுடன் செயல்பட வைக்க உதவும். கட்டுபாடற்ற கட்சி என்ற தோற்றம் உருவாக இடம் கொடுப்பது, மோடியின் வளர்ச்சி நோக்கிய ஆட்சிக்கும் வெளிப்படையான நிர்வாகத்துக்கும் தடைக்கல்லாகிவிடும்.

'ஏகாத்ம மானவ தரிசனம்' என்ற அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை இறுதி இலக்காகக் கொண்ட தத்துவத்தின் மீது கட்டப்பட்ட அரசியல் மாளிகை தான் பாஜக. இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையினர் – சிறுபான்மையினர் பாகுபாடும். உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி வேறுபாடும், செல்வர்கள் – ஏழைகள் ஏற்றத்தாழ்வும் இல்லாமல் செய்ய வேண்டும். அதுவே பாஜகவின் இறுதி இலக்கு. பண்டிட் தீனதயாள் உபாத்யாய கனவு கண்ட ஒப்பற்ற பாரத சமுதாயம், பாஜகவின் நிதானமான, பெருந்தன்மையான அணுகுமுறைகளால் தான் சாத்தியமாகும்.

நன்றி : விஜய பாரதம்
– சேக்கிழான்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

இந்தியாவில் கூட்டுறவு துறையை வ ...

இந்தியாவில் கூட்டுறவு துறையை வலுப்படுத்தி வருகிறோம்-மோடி பெருமிதம் '' இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறோம், '' ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

மருத்துவ செய்திகள்

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...